‘தாயகம்’ 100: ஈழத்து இலக்கியத்தின் வழித்தடம் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 48 Second

ஈழத்துத் தமிழர்களின் வாழ்வியலில், கலையும் இலக்கியமும் இன்றியமையாத பங்கை ஆற்றியிருக்கின்றன. ஈழத்து இலக்கியத்தின் செல்நெறி தனித்துவமானது. விடுதலையை வேண்டிப் போராடும் ஏனைய சமூகங்களைப் போல, ஈழத்தமிழர்களின் போராட்டங்களில், கோரிக்கைகளில், உரிமைக்குரல்களில் தவிர்க்க இயலாத பங்களிப்பை, இலக்கியங்கள் ஆற்றி வந்துள்ளன.

மிகநீண்ட நெடிய பயணத்தின் தொடர்ச்சியாக ‘தாயகம்’ சஞ்சிகையின் 100ஆவது இதழ் அண்மையில் வெளிவந்தது. 1974ஆம் ஆண்டு சித்திரை மாதம், ‘புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு’ என்ற முழக்கத்தோடு, தனது முதலாவது இதழைப் பிரசவித்த ‘தாயகம்’, இன்று 46 ஆண்டுகளின் பின்னர், தனது 100ஆவது இதழைக் கண்டுள்ளது.

இதன் பயணம், ஈழத்தமிழரின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது. வெறுமனே இலக்கிய சஞ்சிகையாகத் தன்னை மட்டுப்படுத்தாமல், கலை, இலக்கியம், சமூகம், விஞ்ஞானம் போன்ற துறைகளையும் தாங்கிய இதழாக, இது பரிணமித்திருக்கிறது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வரும் காலாண்டு சஞ்சிகையான ‘தாயகம்’ சார்ந்து, இரண்டு கேள்விகளுக்கு விடைகாண விளைகின்றேன். முதலாவது, இந்த நீண்ட நெடிய பயணத்தில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடியவை என்ன? இரண்டாவது, இலக்கியத்தை எவ்வாறு போராட்டத்தின் கருவியாக்குவது?

‘தாயகம்’, பல்வேறு தடைகள், நெருக்குவாரங்கள் அனைத்தையும் தாண்டி, யாழ்ப்பாணத்தை மய்யமாகக் கொண்டு தொடர்ச்சியாக வெளிவரும் பெருமைக்குரியதாகும். 100 இதழ்கள் வருவதற்கு 46 ஆண்டுகளா என, சிலர் நினைக்கலாம். போர், இடப்பெயர்வு என மக்கள் பட்ட அத்தனை துன்பங்களையும் ‘தாயகம்’ தாங்கியிருக்கிறது. 1970களின் இறுதிப்பகுதியில் சில ஆண்டுகளும் 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வையடுத்து இரண்டு ஆண்டுகளும் இடைவெளிவிட்டு, சமூக அசைவியக்கத்தோடு தன்னை இணைத்தபடி, ‘தாயகம்’ தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது.

ஈழத்தமிழ் இலக்கியத்தின், கடந்த அரைநூற்றாண்டுகால வரலாற்றின் குறுக்குவெட்டுப் பரப்பைத் தருவதற்கு, தாயகத்தின் 100 இதழ்களும் நல்லதொரு தொடக்கப்புள்ளி. ஒவ்வொரு காலப்பகுதியினதும் மொழிப்பயன்பாடு, இலக்கிய வடிவங்கள், சமூக நிலைமைகள், அரசியல் எனப் பல்பரிமாணங்களை விளங்கிக் கொள்ள, ‘தாயகம்’ இதழ்கள் மிகவும் பயனுள்ளவை.

‘தாயகம்’ இதழின் பரப்புப் பெரியது. சமூகத்தின் முக்கிய செல்திசைகள் குறித்த விமர்சனப் பார்வை, புதிய சமூக விஞ்ஞான நோக்கு ஆகியவை முக்கியமானவை.
தாயகத்தின் நீண்ட பயணம் சொல்லுகின்ற செய்தி யாதெனில், கொள்கையில் உறுதியும் தொலைநோக்கும் கொண்ட இதழ்களின் ஆயுட்காலம் மிக அதிகம். இவை இரண்டும் தலைமுறைகள் தாண்டியும் வாசகர்களைத் தக்கவைப்பவை; புதிய வாசகர்களை உள்ளீர்ப்பவை.

இங்கு நினைவூட்டப்பட வேண்டிய முக்கியமான செய்தி யாதெனில், இந்த நீட்சியும் தொடர்ச்சியும் சாத்தியமானதற்கான ஒரு காரணம், கூட்டு முயற்சி. ‘ஊர் கூடித் தேரிழுப்பது’ என்பது, இதற்கு மிகவும் பொருத்தம். மக்கள் இலக்கியக் கோட்பாட்டைக் கொள்கையாக வரித்துக் கொண்ட ‘தாயகம்’, மக்களுக்கான படைப்புகளையும் மக்களுக்கான படைப்பாளிகளையும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. ‘கலை கலைக்காகவே’ என்ற வணிக நோக்கும் சுயவிளம்பரமும் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை மறுதலித்து, அதற்கெதிராகப் போராட்டத்திலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. இன்று, படைப்பாளிகளின் ‘அங்கிகாரத்துக்கான ஆவல்’, படைப்புகளை மக்கள் நலநோக்கில் இருந்து தனிமைப்படுத்துவதைக் காணலாம்.

இலக்கியங்களில் அரசியல் நீக்கி, தமது படைப்புகள் அரசியலற்றன எனப் படைப்பாளிகள் அறிவிப்பதும் ஒரு போக்காகி உள்ளது. குறிப்பாக, போருக்குப் பிந்திய சூழலில், தங்கள் படைப்புகள் அரசியலற்றன எனக் கூறும் அதேவேளை, அவை சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் சொல்கிறார்கள். எத்தகைய ஒரு முரண்நகை இது! உண்மையில் இது ஒரு நோய். இது தம்மை, ‘அரசியல் கடந்த’ படைப்பாளிகளாக்கும் ஒரு முயற்சியின் வெளிப்பாடாகும்.

பிரச்சினைகளும் இன்னல்களும் அடக்குமுறைகளும் நிறைந்த ஒரு சமூகத்தைப் பிரதிபலித்து இலக்கியம் படைப்பவர், அரசியலற்று இலக்கியம் படைக்கலாம் என்பது, எவ்வளவு பெரிய பொய்யோ, அத்தகைய படைப்பு, சாரமற்ற வெற்றுச்சரக்கு என்பது அதேயளவு மெய். இங்குதான், மக்கள் இலக்கியத்தின் தேவை பற்றியும், சமூக மாற்றத்தில் அதன் பங்கு பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றுக்கும் சாட்சியாக இருப்பவை, பப்லோ நெருடாவின் கவிதைகள். நெருடாவின் கவிதையின் உள்ளார்ந்த கூறுகளில் ஒன்று அரசியல். தனது கவிதையில் இருந்து அரசியலைப் பிரிக்க விரும்புகிறவர்கள், கவிதையின் எதிரிகள் என்று நெருடா சொன்னார்.

மக்களுக்காகப் பாடியதால் நெருடா பிரசாரக் கவிஞன் என்று தூற்றப்பட்டார். மக்களுக்காகத் தொடர்ந்து எழுதுவதன் மூலம், அவர் மக்கள் கவிஞனாகத் தன்னை நிறுவி நிலைநிறுத்தினார். இவ்வாறு, சமூக அக்கறை என்பது, படைப்பாளியின் அளவுகோலாகிறது.

மக்கள் இலக்கியம் என்பதை, மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களை விழிப்பூட்டும் இலக்கியம், மக்களைக் கிளர்ந்து போராடத் தூண்டும் இலக்கியம், மக்களால் ஆக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக்கியம் என்று சொல்லலாம். எனவே, மக்கள் இலக்கியத்துக்கு அவசியமான பண்பு, அத்தகைய இலக்கியம் மக்களிடமிருந்து அந்நியப்படாமையாகும்.

மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகின்ற படைப்பாளி, மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில், அவருடைய கருத்தில், மக்கள் அவரையொத்த படைப்புத்திறன் அற்றவர்களாக மட்டுமன்றி, அவருடைய படைப்பைச் சரிவர உணரும் திறனற்றவர்களாகவும் இருப்பர். எனவே, மக்களுள் மக்களாகத் தம்மை உணர்வோர், மக்களுக்கான இலக்கியங்களைப் படைப்பது தேவையாகின்றது. மக்களுக்கான கலை இலக்கியங்கள் எனும்போது, மக்களைச் சென்றடையும் பண்பு முக்கியமாகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான ஆக்கங்களை, மக்கள் பரவலாக வரவேற்கும் கலை-இலக்கிய வடிவங்களில் வழங்குவதும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தக்கூடிய கலை-இலக்கிய வடிவங்களை ஊக்குவிப்பதும் மக்கள் சார்ந்த முக்கிய இலக்கியப் பணிகள். ‘கருத்துகளிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் தான் எந்தவொரு புரட்சியும் பிறக்க முடியும்’ என்பார் பிடல் காஸ்‌ரோ.

சமூக மாற்றத்துக்கான இயங்குதளங்கள் விடாது மாறுகின்றன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மக்களை ஒன்றுதிரட்டும் வழிமுறைகள் அருகுகின்றன. புதிய வழிமுறைகளைத் தேடுவதும் புதிய இயங்குதளங்களை நோக்கிக் செல்வதும் இன்றைய தேவைகளாக உள்ளன. ஈழத்தின் இன்றைய சூழலில், பண்பாட்டுத் தளச் செயற்பாடும் மாற்றமும், முன்னெப்போதையும் விட முக்கியமாயுள்ளன. மக்களை ஒன்றுதிரட்டுவது கடினமாயும் சிக்கலாயும் மாறியுள்ள ஒரு சூழலில், மக்களைச் சென்றடைய உகந்த வழிமுறைகளாயும் மக்களை ஒன்றுதிரட்ட உகந்த மூலோபாயங்களாயும் பண்பாட்டுத் தளச் செயற்பாடுகளே உள்ளன.

மௌனமும் காத்திருப்பும் மட்டுமே, தேசிய மொழியாகவும் இயல்பாகவும் மாறிவிடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள சூழலில், மக்களையும் மக்களின் மனங்களையும் மீட்கப் புதிய வழிமுறைகள் தேவையாகின்றன. அதற்கான ஒரு முக்கிய கருவியாக, இலக்கியம் அமைகிறது. அடக்குமுறையும் சுரண்டலும் உள்ள வரை, எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும். எதிர்ப்பும் போராட்டமும் கலை இலக்கிய வடிவங்கள் ஊடாகவும் எப்போதும் தம்மை வரலாற்றில் வெளிப்படுத்தி வந்துள்ளன. போராட்ட இலக்கியம் என்பது, எதிர்ப்பு இலக்கியத்தின் வளர்ச்சி பெற்ற வெளிவெளியான வடிவம்.

சமூக விடுதலை என்பது, பண்பாட்டு விடுதலையும் ஆகும். ஏனெனில் ஒன்றில்லாமல் மற்றது இல்லை. படைப்பாளிகள் இதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய பண்பாட்டை உருவாக்கும் பணியில், இலக்கியம் முன்னிற்க வேண்டும். அப்போதுதான், பண்பாட்டுச் சீரழிவிலிருந்து சமூகங்களை மீட்டுருவாக்க முடியும்.

அவ்வாறு மீட்டுருவாக்கிய சமூகங்களே சமூக விடுதலைக்கான போராட்டத்தில் முக்கிய பங்காற்றுவன. அவ்வகையில், இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியம் முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது எனவும் சமூக விடுதலைக்கான முன்நிபந்தனைகளில் ஒன்றாக, மக்கள் இலக்கியங்களின் தேவை உணரப்படுகிறது எனவும் உறுதியாகச் சொல்லலாம்.

இங்கு, முதலாவது ‘தாயகம்’ இதழில், ‘ஒரு பரம்பரையின் சரித்திரம்’ என்ற தலைப்பில் புதுவை இரத்தினதுரை எழுதிய கவிதையை நினைவூட்டல் பொருத்தம். அக்கவிதை இப்படி முடியும்.

முத்தையன் கட்டில், மூச்சிரைக்க வேலைசெய்வோர்
உச்சிற் பகற்பொழுதில், உங்களுக்காய் உழுபவர்கள்
பச்சைக் களனியிலே…, பசித்திருந்து பாடுபட்டோர்
இரும்பைப் பிழிந்தெடுத்து, இயந்திரங்கள் செய்திடுவோர்
அரும்பு வியர்வை சொரிந் தகிலத்தைக் காத்திடுவோர்
வண்டி இழுத்திடுவோர், வாகனங்கள் ஓட்டிடுவோர்
கண்டி மலைச் சரிவில் கசங்கிக் கொழுந்தெடுப்போர்
இந்த உடலங்கள், எழுந்தொருநாள் நீதிபெற
வந்தால் அவர்க்கெதிராய், வருபவர் யார்?
மாடியிலே குந்தியிருப்பவரா?
கொம்பனிகள் ஆள்பவரா?
மந்திரியா? அன்றி மந்திரியின் பிள்ளைகளா?
பத்துக் கிணற்றடியைப் பரம்பரையாய் ஆண்டெமக்கு
குத்தகைக்குக் காணி, கொடுக்கின்ற பெரியவரா?
சட்ட விதிமுறையா? தனிநபரே தீர்ப்பளித்துக்
கொட்டும் விளையாட்டுக் கோட்டு வழக்குகளா?
எல்லாம் உழைப்பவர்க்கு எதிராக நின்றிடிலும்
வல்லார் உழைப்பவர்கள், வரலாற்றை வென்றெடுப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது”- கடுப்பான Madhuvanthi!! (வீடியோ)
Next post தெனாவட்டு பேச்சு… அய்யோ பாவம்! (வீடியோ)