By 21 December 2020 0 Comments

எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’ !! (கட்டுரை)

உலகின் சில நாடுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுறை, சாதாரணமாகக் கட்டுப்படுத்தல் என்ற கட்டத்தைக் கடந்து, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றை மக்கள் பாவனைக்கு வழங்குவதிலும், முனைப்புக் காட்டி வருகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில், மரணங்கள் 152 ஐத் தாண்டிவிட்டன. நாட்டை வழமைக்கு, முழுமையாகத் திருப்ப முடியாத சூழலையே, இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், உலக ஒழுங்கைப் போலவே, நமது நாட்டில் வாழ்கின்ற மக்களது முயற்சியும் பிரார்த்தனையும், கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து, உயிர் பிழைத்து வாழ்தல் என்பதாகவே இருக்கின்றது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் மேலுமொரு நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், வலிந்து தகனம் செய்யப்படுகின்றமையே முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள அந்த நெருக்கடியாகும்.

முன்னதாக, சுகாதார அமைச்சு, கடந்த ஏப்ரலில் வெளியிட்ட திருத்திய சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட அனைவரது உடல்களும் எரிக்கப்படுவதை, கட்டாய விதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் காரணம் காட்டி, அரசாங்கமும் இக்கோரிக்கையைப் புறமொதுக்கி, அதில் சிறிதே அரசியல் செய்ய விளைந்தது.

பிற்பாடு, சிங்கள கடும்போக்கு சக்திகள், முஸ்லிம் சமூகத்தின் நியாயமான இக்கோரிக்கையை, விஞ்ஞான ரீதியாக எதிர்கொள்ளாமல் இனவாதக் கண்கொண்டு பார்த்தனர். ஒரு சில முற்போக்கு சிங்கள சக்திகள், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஆபத்தில்லை என்று கூறினாலும், அரசாங்கத்தில் ஒரு சிலரும் பேரினவாதச் சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள், அமைப்புகளும், அப்போது அச்செய்தி சிங்கள மக்களைச் சென்றடையாதவாறு குறுக்கால் நின்றனர்.

முறைமை சார்ந்த கடைசி முயற்சியாக, முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தை நீதிதேவதையிடம் கொண்டு சென்றது. அரசமைப்பில் உள்ள எமது உரிமையை மீறும் ஜனாஸா எரிப்பை நிறுத்தக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையானது, சட்ட ரீதியானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், நீதியின் ஆளுகை மீது, சிறுபான்மைச் சமூகங்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போவதற்கு, இது காரணமாகியது. நீதி தேவதையே, தமது கைகளைத் தட்டி விட்டதாகவே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

எவ்வாறிருப்பினும், கொவிட்-19 நோயால் ஏற்பட்ட மரணங்கள் அதிகரித்துச் சென்றமையாலும் மரணிப்பவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் முஸ்லிம்களாகக் காணப்படுகின்றமையாலும், இப்படியே இப்பிரச்சினையை இழுபறியாக விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சமூகம் இரு வகையான நகர்வுகளைச் செய்துள்ளது. ஒன்று, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடன்படுவதில்லை என்பதுடன், பிரேதப் பெட்டிக்கான கட்டணத்தையும் வழங்குவதில்லை என்ற நூதனப் போராட்டமாகும். அடுத்தது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இணங்கச் செய்யும் முயற்சிகளாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த பிறகு, மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், தொற்று இருப்பதாகச் சொல்லப்பட்ட நபர்களின் உடல்களை, எரிப்பதற்கான ஆவணத்தில், அவர்களது குடும்பத்தினர் ஒப்பமிடாமல், இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதால் அரசாங்கம் சற்றுத் தடுமாறித்தான் போனது.

கொழும்பையும் அதன் சுற்றயல் பகுதிகளில் வாழும், எந்த அரசியல் பலமும் அற்ற சாதாரண மக்கள் மேற்கொண்ட இந்த வெகுசனப் போராட்ட முன்னெடுப்பால், தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் படி, குடும்பங்களின் சம்மதத்துடன் உடனடியாக உடல்களை அகற்றி, எரிக்க முடியவில்லை. இதனால் பிரேத அறைகளில் சடலங்கள் தேங்கிக் கிடந்தன.

உண்மையில், எந்தவித அரசியல் பின்னணியோ, மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ இல்லாத ஒரு மக்கள் பிரிவினர், தமது உறவினரின் உயிரற்ற உடலங்களை வைத்து, விடாப்பிடியாகச் செயற்படுகின்றார்கள் என்றால், ஜனாஸா எரிப்பு விவகாரம் அவர்களை எந்தளவுக்குக் காயப்படுத்தி இருக்கின்றது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசாங்கம் வழக்கம்போல இவ்விடயத்திலும் போராட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து, அதற்குத் தீர்வு காண எத்தனிக்காமல், அதிகார தோரணையில் செயற்பட்டமை துரதிர்ஷ்டவசமானது. இதற்கமைய, பிரேத அறைகளில் தேங்கிக் கிடந்த 19 ஜனாஸாக்கள் அரச செலவில் எரிக்கப்பட்டன.

இது கூடப் பரவாயில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட உரிமை கோரப்படாத உடல்களுடன் சேர்த்து, பிறந்து 20 நாள்களேயான ஒரு பச்சிளம் சிசுவின் ஜனாஸாவையும் எரித்தமையை எவ்வகையிலும் முஸ்லிம்களால் மட்டுமன்றி, மனிதாபிமானமுள்ள, பிள்ளைகளில் அன்புள்ள, எந்தச் சிங்களவர், தமிழராலும் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சளி, இருமல் அறிகுறிகளுடன் கொழும்பு, சீமாட்டி றிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நாள் வயதுடைய பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்கள், அக்குழந்தையின் முஸ்லிம் பெற்றோருக்குத் தொற்று இல்லை என்றும், குழந்தைக்குத் தொற்று இருப்பதாகவும் ஆச்சரியமான தகவலொன்றைக் கூறியுள்ளனர்.

எனவே, அக்குழந்தையை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், உடல் தகனத்துக்கான ஆவணத்தில் கையொப்பமிடுமாறு, தந்தையை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், இந்தச் சின்னஞ்சிறு மொட்டை எரிப்பதற்கு எந்தத் தந்தையாவது விரும்புவாரா? எனவே, அந்தத் தந்தையும் அதற்கு மறுத்து விட்டார்.

பிறந்து 20 நாள்கள் மட்டுமே, இந்த உலகில் வாழ்ந்த அந்தக் குழந்தையின் ஜனாஸாவையாவது முறையாக நல்லடக்கம் செய்வதற்க அனுமதி, தருமாறு மன்றாட்டமாகக் கோரியும் அதிகாரிகளோ, அரசாங்கமோ, தனிமைப்படுத்தல் சட்டமோ மனம் இரங்கவில்லை.

கடைசியாக, பெற்றோரின் அனுமதியின்றியே வலுக்கட்டாயமாக அந்தச் சிறு ஜனாஸாவும் உரிமை கோரப்படாதிருந்த ஏனைய ஜனாஸாக்களுடன் ஒரேநாளில் எரியூட்டப்பட்டது.

இந்தச் செய்தி, இலங்கையில் மட்டுமன்றி, உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதை மிகக் கடுமையாக, தீயால் சுட்டுப் பொசுக்கிப் புண்ணாக்கி இருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ் மக்களும் இன்று இக்குழந்தைக்காக அனுதாபப்படுகின்றனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தொடர்ச்சியாக எரித்து வந்ததை விடவும், இக் குழந்தையின் ஜனாஸாவை எரித்தமை, பாரதூரமான உரிமை மீறலாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் மனிதாபிமானம், இரக்கம் பற்றிய பல கேள்விகள் எழுந்துள்ளன.

இக்குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்டதை அடுத்து, இவ்விவகாரம் சர்வதேச ஊடகங்களின் அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. இலங்கையில், பச்சிளம் சிசுவின் ஜனாஸாவையும் கொரோனா வைரஸின் பெயரால் எரிக்கும் மனிதாபிமானமற்ற சூழலே காணப்படுகின்றது என்ற தோற்றப்பாடு, ஏற்படுவதற்கு அரசாங்கமே மறைமுகக் காரணமாகி உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.

இதையடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்து இருக்கின்றது. இதற்கெதிரான முன்னெடுப்புகளும் வேறு பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஜனாஸாக்களைப் பொறுப்பேற்பதில்லை என்ற போராட்டம் கொழும்பு முதல் அம்பாறை வரை இடம்பெறுவதுடன், வலுக்கட்டாய எரிப்புக்கு எதிரான ‘வெள்ளைத் துணி’ நூதனப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளனர். சிலருக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்; சிலரிடம் மன்றாடியும் இருக்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிபுணர் குழுவின் அறிக்கையை விரைவாகக் கோரியுள்ளார். அத்துடன், ஆழமான நிலத்தடி நீரைக் கொண்ட உயரமான இடங்களை அடையாளம் காணுமாறும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், நிபுணர் குழுவில் விஞ்ஞான அடிப்படைகளை விட ‘வேறு எதுவோ ஒன்று’ மேலோங்கி நிற்பதாலும், அரசாங்கத்துக்குள் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வோர், எதிர்ப்போர் என இரு தரப்பினர் இருப்பதாலும் எல்லா முயற்சிகளும் ‘சாண்ஏற முழம் சறுக்கும் நிலை’யிலேயே உள்ளன. ஆகவே, நிலத்தில் புதைப்பதற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையிலேயே, வெள்ளைத் துணி கட்டும் முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 20 நாள்களேயான சிசுவின் உடல் தகனம் செய்யப்பட்ட பொரளை, கனத்தையை சுற்றியுள்ள இரும்பு வேலியில் வெள்ளைத் துணியொன்றைக் கட்டி, இந்த நூதன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன, மத பேதமின்றி பெருமளவானோர் அங்கு வந்து அக்குழந்தைக்காகவும் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலும் வெள்ளைத் துணிகளை முடிச்சுப் போட்டுக் கட்டி வருவதைக் காண முடிகின்றது.

இதேவேளை, வலுக்கட்டாய உடல் எரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவதை வலியுறுத்தியும் தமது வீடுகளின் வாயில்களில் வெள்ளைத் துணியைக் கட்டுமாறு முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கமைய நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு வருகின்றன.

அரசாங்கமும் இனவாத சக்திகளும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மிக இலகுவாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தவறவிட்டன. அதுபோல முஸ்லிம்கள் விடயத்திலும் நடந்து, இன்னுமொரு வரலாற்றுத் தவறுக்கு காரணமாகிவிடக் கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam