By 10 January 2021 0 Comments

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)

என்றும் இளமையாக இருக்க யாருக்குத்தான் ஆசை இல்லை? முதுமையைக் காட்டிக் கொடுக்கும் நரை முடிக்கு டை அடித்து மறைத்துக் கொள்கிற மாதிரி, முகத்தில் தெரிகிற சுருக்கங்களை அத்தனை சுலபத்தில் மறைக்க முடிவதில்லை. இளமைத் தோற்றம் என்பது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கிற மாதிரியான விஷயமல்ல… அதற்கு எக்கச்சக்கமாக மெனக்கெட வேண்டும்.

இளமையைத் தக்க வைப்பதில் அழகு சிகிச்சைகளின் பங்கு என்ன? அத்தகைய சிகிச்சைகளில் நடக்கிற தவறுகள் என்னென்ன? வயதானாலும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்க இயற்கையான வழிகள் என்னென்ன? எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

முன்பெல்லாம் 40 வயது தாண்டிய பிறகு ஆரம்பிக்கும் சைன் ஆஃப் ஏஜிங்’ எனப்படும் முதுமை தோன்றுவதற்கான அறிகுறிகள், இப்போது 30 வயது தாண்டும் போதே தொடங்கி விடுகிறது. ஆன்ட்டி ஏஜிங் என்பது 30 வயது தாண்டிய பெண்களும் ஆண்களும் கூட எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிகிச்சை. நம்முடைய லைஃப் ஸ்டைல், உணவுப் பழக்க வழக்கங்களின் மாற்றங்கள், ஸ்ட்ரெஸ், உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பெருகி விட்ட ரசாயனங்கள் என இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம்.

லைஃப் ஸ்டைல் எப்படி இளமையைப் பாதிக்கும் எனக் கேட்கலாம். ஓய்வில்லாத உழைப்பு, விண்ணை எட்டும் விலைவாசிகள், குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகள், பாரத்தை சுமந்தே ஆக வேண்டிய மருத்துவச் செலவுகள் – இவை அனைத்தையும் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம். இந்த உடல் மற்றும் மனரீதியான சுமைகள் நம்மை வலுக்கட்டாயமாக முதுமைத் தோற்றத்துக்குக் கொண்டு செல்கிறது.

அடுத்தது உணவுப் பழக்கங்கள்… யாருக்கும் ஆற அமர உட்கார்ந்து உண்ண நேரமில்லை… கிடைத்ததை சாப்பிட்டு ஓடுகிறோம்… அல்லது ஹை பிரீட் என்ற பெயரில் வெறும் சக்கைகளையும், கெமிக்கல் கலந்த உணவுகளையும் உண்கிறோம். இவை நம்முடைய உடல் நலத்தைப் பாதித்து நம்மை வெகு சீக்கிரம் வயோதிகத்துக்குக் கொண்டு செல்கிறது.

அடுத்தபடியாக ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். ஸ்ட்ரெஸ் நமது உடலில் பல வேதி மாற்றங்களைக் கொண்டு வரும். முக்கியமாக நமது சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் இருக்கும் மெலனோசைட்ஸ் எனப்படும் நிறமிகளை உற்பத்தி பண்ணும் காரணிகள் மற்றும் மூன்றாம் அடுக்கான சப்கியூடேனியஸ் லேயரில் உள்ள கொழுப்பு செல்களுக்கு தளர்வையும் உறுதியின்மையையும் ஏற்படுத்தும்.

பெருகி வரும் ரசாயனம் கலந்த அழகுசாதனங்களும் நம்முடைய வயோதிகத்தை முன்பே கொண்டு வருகின்றன. கெமிக்கல் கலந்த முகப்பூச்சுகள் மிக எளிதாக நம்முடைய சருமத்தின் உட்புறத்தில் புகுந்து மிகப்பெரிய பிரச்னைகளை கொண்டு வருகின்றன. இன்னொரு முக்கிய காரணம் இப்போது அதிக அளவில் பெருகியுள்ள சரும சிகிச்சைகள். அளவுக்கு மீறுதலும், இயற்கைக்கு புறம்பான அழகு சிகிச்சைகள் முறையான பயிற்சி இல்லாதவர்களால் கையாளப்படும் போதும் இந்த ஏஜிங் எனப்படும் வயோதிகத் தன்மை சீக்கிரம் வந்துவிடுகிறது.

என்ன செய்யலாம்?

முதுமையைத் தள்ளிப் போட நாம் எடுக்கும் முயற்சிகள் 30 வயதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதிலிருந்துதான் முதுமையின் அடையாளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். நெற்றியில் ஃப்ரான்ட் லைன், கன்னங்களில் லாஃப்டர் லைன், கண்களின் ஓரங்களில் க்ரோஸ் ஃபீட் போன்ற சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும் காலகட்டம் இது. இப்போதிலிருந்து ஆன்ட்டி ஏஜிங் சிகிச்சைகள் ஆரம்பித்தால் முதுமைத் தோற்றத்தை நன்றாகவே தள்ளிப் போட முடியும்.

இள வயதில் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மிகச்சிறிய வயதிலேயே அளவுக்கு அதிகமான ஃபேஷியல்கள், பிளீச் மற்றும் காமிடோன்ஸ் என்று அழைக்கப்படும் துவாரங்களை அடைக்கக் கூடிய மேக்கப் சாதனங்கள் நம்முடைய சருமத்தை பெரிதும் பாதித்து வயதான தோற்றத்தை வெகு விரைவில் கொண்டு வருகின்றன. எனவே, தகுந்த ஆலோசனைகளின் பேரில் அழகு சிகிச்சைகளோ அழகு சாதனங்களோ மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலும், மிகவும் உலர்ந்த சருமமும் முதுமைத் தோற்றத்தை சீக்கிரம் கொண்டு வரும். பிஸிஓஎஸ் எனப்படும் பாலி சிஸ்டிக் ஓவரீஸ் சிண்ட்ரோம் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு விரைவில் முதிர்ச்சி ஏற்படும்.வெயிலில் சரியான பாதுகாப்பின்றி அதிகமாக அலைபவர்களுக்கு, சன் ரேஸ் ரேடியேஷனால் ஏற்படக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சருமத்திலும் உடலிலும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி முதுமைத் தோற்றத்தைத் தரும். அழகு சாதனங்களில் மறைந்திருக்கும் டாக்ஸிக் கெமிக்கல்களும் நமக்கு சீக்கிரம் முதுமைத்தனம் கொண்டு வந்து விடும்.

நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் ஹார்மோன் குறைவுகள், திசுச் சிதைவுகள் ஏற்பட்டு அதனாலும் முதுமைத்தனம் வந்துவிடும்.ஆண்களில் புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு முதுமைத்தனம் சீக்கிரமே வரும். சைன் ஆஃப் ஏஜிங் என்று சொல்லக்கூடிய வயோதிகத்தன்மை Internal factors என்று சொல்லக்கூடிய செல்லுலர் மெட்டபாலிஸம், பரம்பரை ரீதியான மற்றும் ஹார்மோன் கோளாறுகள், External factors என்று சொல்லக்கூடிய சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் ரேடியண்ட் எஃெபக்ட், ரசாயனங்கள், மாசு நிறைந்த சூழல், லைஃப் ஸ்டைல் இவை அனைத்தும் நம்முடைய உடலிலும் உருவத்திலும் மாற்றங்களை கொண்டு வருகின்றன.

ஒருசிலர் இளமையைத் தக்க வைத்துக் கொள்கிற எண்ணத்தில் ஒருநாள்விட்டு ஒருநாள் ஃபேஷியல் செய்து கொள்வதும், தினமும் முகத்துக்கு ஏதோ ஒரு ஃபேஸ் பேக்கை தடவிக் கொள்வதுமாக அதீதமாக மெனக்கெடுவார்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்து என்பதுதான் இதிலும் நடக்கும். தேவையற்ற ஃபேஷியலும் ஃபேஸ்பேக்கும் இளமையைத் தக்க வைப்பதற்கு பதில், சருமத்தின் இளமைக்குக் காரணமான இயற்கையான எண்ணெய் பசையை அறவே நீக்கி, அதன் விளைவாக முகத்தை வறண்டு போகச் செய்து, வயோதிகத் தோற்றத்துக்கும் காரணமாகி விடும்.

இளமையைத் தக்க வைக்க பார்லரில் என்ன செய்து கொள்ளலாம்? வீட்டிலேயே பின்பற்றக்கூடிய வழிகள் என்னென்ன?

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அடுத்த இதழிலும் தொடர்ந்து பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam