By 17 February 2021 0 Comments

வேனிட்டி பாக்ஸ் மாயிச்சரைசர்!! (மகளிர் பக்கம்)

தண்ணீர் இல்லாமல் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பீர்கள்? அதெப்படி சாத்தியம்? சாப்பாடு இல்லாமல் வெறும் தண்ணீரைக் குடித்தாவது வாழ்ந்துவிடலாம். தண்ணீரே இல்லை என்றால் ரொம்பக் கஷ்டம் என்கிறீர்கள்தானே? அதே விதிதான் உங்கள் சருமத்துக்கும்.

சருமம் சுத்தமாக வேண்டும் என சோப்பும், ஃபேஸ் வாஷும் போட்டுக் கழுவுகிறீர்கள். கருக்காமலிருக்க சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறீர்கள். அழகாகத் தெரிய மேக்கப் செய்கிறீர்கள். ஆனால், அந்தச் சருமம் வறண்டு போகாமல் உயிர்ப்புடன் இருக்க அதற்குத் தேவையான தண்ணீர் சத்தைக் கொடுக்க மறந்து விடுகிறீர்கள்.சருமப் பராமரிப்பின் 3 அடிப்படைகளில் கிளென்சிங் மற்றும் டோனிங் பற்றி கடந்த சில இதழ்களில் பார்த்தோம். அடுத்தது மாயிச்சரைசிங்.

மாயிச்சரைசிங் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? அது செய்கிற மாயம் என்ன? விவரமாகப் பேசுகிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். ‘‘வறண்டு கிடக்கும் சருமத்துக்கு ஈரப் பதம் கொடுப்பதுதான் மாயிச்சரைசிங். 20 வயதைக் கடந்த பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் தேவையானது மாயிச்சரைசிங். இன்று சுற்றுப்புறச் சூழல் எந்தளவுக்கு மாசடைந்திருக்கிறது என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அதன் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்க மாயிச்சரைசிங் அவசியம். இன்று பள்ளி, கல்லூரி, வேலையிடம் என எல்லா இடங்களிலும் ஏசி தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஏசி என்பது மேட்டுக்குடி மக்களின் அடையாளமாக இருந்த காலம் மாறி, நடுத்தரக் குடும்பங்களும் அதற்கும் கீழான நிலையில் இருப்பவர்களும்கூட ஏசி என்பதை அத்தியாவசியப் பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நாள் முழுக்க ஏசி அறைக்குள் இருக்கும் போது சருமத்திலுள்ள இயற்கையான ஈரப்பதம் குறையும். இதனால் சருமத்துக்கு ஒருவித வயோதிகத் தோற்றம் வந்து விடும். சருமம் பொலிவிழக்கும். இதையெல்லாம் சரிசெய்ய மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறது.

எப்போது உபயோகிக்க வேண்டும்?

மாயிச்சரைசரை இரவில்தான் உபயோகிக்க வேண்டும். இது தெரியாமல் பலரும் பகலில் மாயிச்சரைசரை தடவிக் கொண்டு வெளியில் செல்கிறார்கள். ஏன் மாயிச்சரைசரை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்? காலையில் ஏன் உபயோகிக்கக் கூடாது? மாயிச்சரைசர் என்பது நமது சருமத்தினுள் ஊடுருவிச் செல்லக் கூடிய ஒன்று. பகலில் மாயிச்சரைசர் உபயோகிக்கும் போது, சருமத்திலுள்ள துவாரங்களைத் திறக்க வைத்து, மாயிச்சரைசர் உள்ளே இறங்கும்.

சுற்றுப்புறச் சூழலில் உள்ள தூசும், மாசும், மாயிச்சரைசிங் க்ரீம் அல்லது லோஷனுடன் கலந்து, சருமத் துவாரங்களின் உள்ளே போய் அடைத்து விடும். அப்படி அடைக்கிற போது ஃப்ரெக்கிள்ஸ் எனப்படுகிற மச்சம் போன்றவை சருமத்தில் வருகின்றன. அதென்ன ஃப்ரெக்கிள்ஸ்? உங்களுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களைக் கவனித்துப் பாருங்களேன்…

ஐந்தில் ஒருவருக்கு சருமத்தில் சிறு சிறு மச்சங்கள் போன்ற கரும்புள்ளிகள் இருப்பதைக் கவனிக்கலாம். இவைதான் ஃப்ரெக்கிள்ஸ். இவற்றை சரியாகக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் மருக்களாக உருமாறும்.

ஒரு மரு வந்து விட்டால், உங்கள் சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸில் அந்த பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷன் அப்படியே தங்கி விடும். அந்த இன்ஃபெக்‌ஷன், பக்கத்து இடங்களிலும் மருக்களை உருவாக்கும். முகத்திலோ, கழுத்திலோ ஒரு மரு வந்தால், ஒரு வருடத்துக்குள் முகம், கழுத்து முழுக்க பத்து, பதினைந்து மருக்கள் வந்திருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் சருமத் துவாரங்களில் சேர்கிற நாள்பட்ட அழுக்கு, சருமத்தில் உற்பத்தியாகிற சீபம் என்கிற எண்ணெய், பகலில் மாயிச்சரைசர் உபயோகித்துவிட்டு, மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்வது போன்றவை… அதனால்தான் இரவில் மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் செய்ய வேண்டும்.

எப்படிப்பட்ட சருமத்தையும் முறைப்படி கிளென்ஸ் செய்து பிறகு சருமத்துக்குத் தேவையான பிஹெச் அளவை சமன்படுத்த டோன் செய்து பின்னர் சருமத்திலுள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்க மாயிச்சரைசர் உபயோகிப்பது என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய அழகு ரொட்டீன்.

அது சரி… இதை ஏன் இரவில் மட்டுமே செய்ய வேண்டும்? இரவில்தான் நமது எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும். ஆனால், சருமம் இரவில்தான் நல்ல துடிப்புடன் இருக்கும். சுவாசிக்கும். ரத்த ஓட்டமும் சரி, ஆக்சிஜனும் சரி, உடல் உறுப்புகளுக்கு எல்லாம் போய் விட்டு, கடைசியாகத் தான் சருமத்துக்கு வரும். ஓய்வில் இருக்கும் போது மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வெடுக்கும்.

சருமத்துக்குத் தேவையான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அந்த நேரத்தில் அதிகமாகக் கிடைக்கும். அந்த நேரத்தில் நீங்கள் உபயோகிக்கிற மாயிச்சரைசர் உங்கள் சருமத்தின் 2வது மற்றும் 3வது லேயரில் இறங்கி, உள்ளே உள்ள செல்களை உயிர்ப்பிக்கும். கொலாஜன், எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் உங்கள் சருமத்தின் மூன்றாவது லேயரில் இருக்கும். இரவில் மாயிச்சரைசர் உபயோகிக்கும் போது அது 3வது லேயரில் உள்ள கொலாஜன், எலாஸ்டினை நன்கு தூண்டி விடும். அதனால் சருமத்தில் தெரிகிற வயோதிக அறிகுறிகள் குறைந்து பொலிவாகும்.

இன்று 20 பிளஸ்ஸில் இருக்கும் இளம் பெண்களே ரொம்பவும் முதிர்ந்த தோற்றத்துடன் காணப் படுகிறார்கள். அவர்களது ஸ்ட்ரெஸ் அளவு, வேலை பார்க்கிற இடத்து மன அழுத்தம், சூழல், சுகாதாரமின்மை மற்றும் சரிவிகித உணவு உண்ணாமை என இதற்குப் பல காரணங்கள். பீட்சா, பர்கர், ஏரியேட்டட் குளிர்பானங்கள் என உடல் சூட்டை அதிகரிக்கச் செய்கிற உணவுகளையே அதிகம் உண்கிறார்கள். அதனால்தான் இன்று பெரும்பாலான பெண்களுக்கும் அவர்களது உண்மையான வயதைவிட 10 வயது அதிகமான தோற்றம் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். வருமுன் காப்போம் என்கிற விதிப்படி பார்த்தால் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு மாயிச்சரைசர். ஃபேஷியல் மாதிரியான மற்ற சிகிச்சைகள் இதற்குப் பிறகுதான் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

ஒவ்வொருவருக்கும் அவரவர் சருமத்தைப் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். உங்களால் உங்கள் சருமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாவிட்டால், அருகிலுள்ள அழகுக் கலை ஆலோசகர் அல்லது சரும மருத்துவர் அல்லது தெரபிஸ்ட்டை அணுகி, சருமத்தை ஸ்கேன் செய்து பார்த்து அதன் தன்மை எத்தகையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மாயிச்சரைசரை மட்டுமின்றி, எந்தவிதமான அழகு சாதனத்தையும் பக்க விளைவுகள் இல்லாமல் உபயோகிக்க முடியும். சருமத்தில் வறண்ட சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம், சாதாரண சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமம் என 4 வகைகள் உள்ளன.

வறண்ட சருமம் உள்ளவர்கள் டீப் மாயிச்சரைசிங் க்ரீம் எடுத்துக்கொள்வது சிறந்தது. இது அதிக பிசுபிசுப்புத் தன்மையும் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கக் கூடிய தன்மையும் கொண்டதாக இருக்கும். ரொம்பவும் வறண்டு, செதில் செதிலான சருமம் கொண்டவர்களுக்கு இந்த வகையான மாயிச்சரைசர்தான் பலனளிக்கும். சாதாரண சருமம், எண்ணெய் பசையான சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் மாயிச்சரைசிங் லோஷன் உபயோகிக்கலாம். இவர்கள் மாயிச்சரைசிங் லோஷனிலேயே ஆயில் பேஸ்டு லோஷனாக இல்லாமல் அக்வா அல்லது வாட்டர் பேஸ்டு லோஷனாக எடுத்துக் கொண்டால் பிரச்னைகள் வராது. எண்ணெய் பசையான மற்றும் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு நாள் தவறான மாயிச்சரைசர் உபயோகித்தாலே அடுத்த நாள் பருக்கள் வந்து விடும்.

வறண்ட சருமத்துக்கு எந்த வகையான மாயிச்சரைசர் உபயோகித்தாலும் பக்க விளைவுகள் வெளியில் தெரியாது. அதே நேரம் பெரிய பலனும் தெரியாது. டீப் க்ரீம் மாயிச்சரைசர் மட்டும்தான் வறண்ட சருமத்தைப் பாதுகாக்கும். இப்படி சருமத்துக்குப் பொருத்தமான மாயிச்சரைசரை உபயோகிக்கும் போது, சருமத்தில் எந்தத் தொய்வும் இல்லாமல் பொலிவு பெறும். சிலருக்கு சருமத்தில் ஈரப்பதம் இல்லாததால் இழுக்கின்ற மாதிரி உணர்வார்கள். மாயிச்சரைசர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மாயிச்சரைசர் என இன்னும் பல தகவல்கள் அடுத்த இதழிலும்…Post a Comment

Protected by WP Anti Spam