என்ன எடை அழகே!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 43 Second

எடையைக் குறைப்பதில் சிறுதானியங்களின் பங்கு பற்றிக் கடந்த இதழில் ‘என்ன எடை அழகே’ பகுதியில் தோழிகளுக்கு விளக்கமாக பாடம் எடுத்திருந்தார் ‘தமநி’ அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார். கோதுமையும், கேழ்வரகும் மட்டுமே எடை குறைக்க உதவும் என நினைத்துக் கொண்டிருந்த தோழிகளுக்கு மாப்பிள்ளை சம்பாவைப் பற்றியும், குதிரைவாலியை பற்றியும் கேள்விப்பட்டதும் உற்சாகம் பொங்கியது. பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடரான ‘என்ன எடை அழகே’வின் சீசன் 2வில் தேர்வான தோழிகளுக்கு ஒரு சேலஞ்ச் வைத்தார் ‘தி பாடி ஃபோகஸ்’ உரிமையாளரும், டயட்டீஷியனுமான அம்பிகா சேகர்.

ஆளுக்கொரு அசத்தல் சிறுதானிய ரெசிபி… என்பதே அந்த சேலஞ்ச். சவாலுக்குத் தயாரான தோழிகள் சிறுதானியங்களில் விருந்தே சமைத்துக் கொண்டு வந்து அசத்தினார்கள். ‘என்ன எடை அழகே’யில் தேர்வாகாத தோழிகளும் பயன் அடையட்டுமே என அந்த சிறுதானிய ரெசிபிக்களை இங்கே பகிர்கிறோம்.

யமுனாவின் கைவண்ணத்தில் ஸ்டஃப்டு சப்பாத்தி

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு – 100 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, கரம் மசாலா – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கோதுமை மாவு – 2 கப்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தியாக திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குள் ஸ்டஃபிங் கலவையை வைத்து திரட்டி சப்பாத்தியாக சுட வேண்டும். ஸ்டஃபிங் கலவை செய்முறை பச்சைப் பயறை ஊற வைத்து பின் வேக வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் கரம் மசாலா பொடி மற்றும் உப்பு எல்லாம் ஒன்றாக கலந்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

சாந்தியின் கைவண்ணத்தில் குதிரைவாலி பிசிபேளாபாத்

என்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 1/2 கப், சாம்பார் வெங்காயம் – 10, தக்காளி – 2, கலவை காய்கறிகள் – 250 கிராம், புளி – சிறிது, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் – தாளிக்க, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பை களைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளி, காய்கறிகள் அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பருப்புடன் 3 மடங்கு தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, காய்கறிகள் அனைத்தையும் வதக்கவும். அதனுடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும். 1 டீஸ்பூன் நெய்யில் தாளிக்கும் பொருட்களை சேர்த்து அதனையும் சாதத்துடன் கலந்து விடவும்.

சபிதாவின் கைவண்ணத்தில் கேழ்வரகு மசாலா ரொட்டி

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு – அரை கப், துருவிய கேரட், வெங்காயம், முட்டைகோஸ், முள்ளங்கி, கீரை – 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 3, தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – 1 டீஸ்பூன்,

எப்படிச் செய்வது?

துருவியுள்ள எல்லா காய்கறி, தேங்காய், மசாலா எல்லாவற்றையும் மாவுடன் கலந்து தவாவை காய வைத்து மெல்லிய ரொட்டியாக தட்டி சுடவும்.

ராஜலட்சுமியின் கைவண்ணத்தில் மூவரிசி பிடிக் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி மூன்றும் சேர்ந்து – 1 கப் (20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.) நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் தாளிக்க… சீரகம், ஓமம், பொடித்த மிளகு – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது. பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன், பொடியாக அரிந்த கேரட், வெங்காயம், குடைமிளகாய், பீன்ஸ், முள்ளங்கி – 1 கப், உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்தபின், பூண்டு, காய்கறிகளைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும், ஊற வைத்துள்ள அரிசிகளைச் சேர்த்து நன்கு கெட்டியாக தண்ணீர் வற்றும் வரை கிளறி விடவும். நன்கு ஆறியதும் இவற்றை மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பமானால் புதினா (அ) தக்காளி சட்னியுடன் பரிமாறலாம். ஒரு உருண்டை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

நவமூலிகை கூட்டு

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி – 10 இலை, துளசி – 20 இலை, தூதுவளை – 10 இலை, கருந்துளசி – 5 இலை, கொடி பசலை – 2 இலை, வேம்பு – 2 இலை, சாதா பசலை – 5 இலை, சோம்பு கீரை – சிறிது, பாசிப் பயறு – 1 கப், வெங்காயம் – 2, தக்காளி – 2, மிளகாய் – 2, தாளிக்க – சீரகம், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அனைத்து இலைகளையும் நன்கு அலசி நீர் வடிய விடவும். பெரிய இலைகளை கையால் சிறிதாக பிய்க்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். பூண்டு- இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கவும். கடாயை சூடுபடுத்தி சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, கீரைகளை சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த பருப்புடன் உப்பு சேர்த்து நீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கலந்து இறக்கி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சிறிது நேரம் மூடி வைத்து பின்னர் விரும்பினால் 2 சொட்டுகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும். அனைவருக்கும் ஏற்றது. உடல்வலி, சளி, இருமல், சோர்வு, வயிறு பிரச்னை தீரும்.

நிவேதிதாவின் கைவண்ணத்தில் கம்பு அடை

என்னென்ன தேவை?

கம்பு மாவு – 1 கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய்-2, முருங்கை கீரை – 1 கப், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கம்பு மாவை சுடுதண்ணீர் விட்டு பிசைந்து கொண்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கை கீரை, உப்பு ஆகியவற்றை கலந்து அடையாக சுட வேண்டும் இது மாலையில் அனைவரும் சாப்பிடும் உணவாகும்.

தாமரைச் செல்வியின் கைவண்ணத்தில் பச்சைப் பயறு தோசை

என்னென்ன தேவை?

பச்சைப் பயிறு-1 கப், கோதுமை மாவு-1 கப், கருப்பு உளுந்து மாவு- 1 கப், கொள்ளு- 2 டீஸ்பூன், கடுகு- 1/2 டீஸ்பூன், வெங்காயம்-1, பச்சை மிளகாய்-1, உப்பு-சிறிது.

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறை ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கோதுமை மாவு, கருப்பு உளுந்து மாவு, உப்பு அனைத்தையும் கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் சேர்த்து தோசையாக சுட வேண்டும். எல்லாவித சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கொள்ளு துவையல்

என்னென்ன தேவை?

கொள்ளு – 1 கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 3 பல், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவே கொள்ளை ஊற வைத்து மறுநாள் வேக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த காமெடி சத்தியமா சூப்பருங்க!! (வீடியோ)
Next post பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது!! (அவ்வப்போது கிளாமர்)