By 17 February 2021 0 Comments

ரத்தசோகை முதல் புற்றுநோய் வரை… சுய மருத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகள்!! (மருத்துவம்)

மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போட அல்லது அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது அதைக் கட்டுப்படுத்த எனப் பெண்கள் இன்று சர்வ சாதாரணமாக நேரடியாக மருந்தகங்களுக்கே சென்று ஓவர் தி கவுண்டர் எனப்படும் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகள் வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் மருந்து சாப்பிட்டால் உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிறார் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறைத் தலைவர் மருத்துவர் பத்மபிரியா விவேக். இவர், இத்துறையில் 17 வருட அனுபவத்துடன், 14 ஆயிரத்திற்கும் அதிகமான பிரசவங்களை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.

“மாதவிடாய் பிரச்சனைகள் எல்லாமே ஹார்மோன் சம்பந்தப்பட்டவை. இதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். நம் வசதிக்காக மாதவிடாய் நாட்களை மருந்துகள் மூலம் மாற்றும்போது, மாதவிடாய் மேலும் ஒழுங்கற்ற இடைவெளியில் வரும். இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு, தைராய்டு பிரச்னை
களில் தொடங்கி, நோய் எதிர்ப்பு அமைப்பிலும் ஏற்படும் மாற்றங்களால் மூளையிலும் பாதிப்பு எதிரொலிக்கும். கொரோனா காலத்தில் பலரும் மருத்துவர்களிடம் செல்லாமலே தாமாக மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் உங்கள் உடலில் எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல், பிரச்சனைக்கான அறிகுறிக்கு மட்டுமே மருந்து சாப்பிடும்படி ஆகிறது.

அதிலும் மாதவிடாய் பிரச்சனையைச் சரியாகக் கவனிக்காமல்விடும் போது, அதனால் ஆரம்பக் கால மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிக்கமுடியாமல் போகும். பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளைத் தவறான அளவில் எடுக்கும் போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஹீமோகுளோபின் குறைந்து ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஹார்மோன் மாத்திரைகளைத் தொடர்ந்து முறையில்லாமல் எடுக்கும் போது, அதுவே எதிர்
காலத்தில் மாதவிடாய் பிரச்னைகளில் தொடங்கி குழந்தைப்பேறு வரை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும், சில பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்காகவே மாத்திரைகள் உபயோகிப்பார்கள். அவர்கள் திருமணமானதும், எப்பவும் போல மருத்துவரின் ஆலோசனையில்லாமல் மாதவிடாய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, அது கர்ப்ப காலத்தையே பாதிக்கும். அதே போலக் கர்ப்பங்களைக் கலைக்க, சட்டவிரோதமான முறையில் மருந்துகளை உட்கொள்ளும் போதும் கர்ப்பம் முறையாகக் கலைக்கப்படாமல், கர்ப்பப்பையில் சிக்கிக்கொள்ளும். பெண்கள் மாதவிடாய் நாட்களைச் சீக்கிரம் வரவழைக்க அல்லது தள்ளிப்போட மாத்திரைகள் எடுத்துக்கொள்ள முக்கிய காரணம் மூடநம்பிக்கைகள்தான்.

திருமணத்திற்குப் போக முடியாது, கோயிலுக்குப் போக முடியாது, சமையலறைக்குள் செல்லக் கூடாது எனப் பெண்களுக்கு பல தடைகள் இருப்பதால், வீட்டு விசேஷ காலங்களில் வேறு வழியில்லாமல் தங்கள் மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போட மாத்திரைகள் உட்கொள்கின்றனர். இப்படி நம் ஹார்மோனுடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது. ஒரு மருத்துவராக எந்த பெண்ணிற்கும் இதை நான் அறிவுறுத்த மாட்டேன். நம் நாட்டில் ஆண்களின் ஆரோக்கியத்தைவிடப் பெண்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அடுத்த தலைமுறையும் ஆரோக்கியமாக இருக்கும்” எனக்கூறும் மருத்துவர், இதனால் ஏற்படும் உளவியல் சிக்கல்களைக் கூறுகிறார்.

“மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரைகள் உட்கொள்வதால் பல உளவியல் ரீதியான மாற்றங்களைப் பெண்கள் கடந்துசெல்ல வேண்டி வரலாம். அனைவரிடமும் எரிந்து விழுவது, அழுவது, சண்டை போடுவது என மூட்-ஸ்விங்ஸ் உருவாகி மனச்சோர்வு அதிகரிக்கும். தொடர்ந்து சுய சிகிச்சை செய்து பழகிவிட்டால், அதுவே மூளையில் ரத்த உறைதலை ஏற்படுத்தும். ரத்த உறைதல், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமளவு அபாயமானது.பெண்கள் மகப்பேறுக்குப் பின், சில சமயம் சரியாக தூங்கமுடியாமல் மன அழுத்தத்தில் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு போஸ்ட்-பார்டம் டிப்ரெஷன் எனப்படும் மகப்பேறுக்கு பின் உருவாகும் மன அழுத்தம் இருக்கலாம்.

அந்த மன அழுத்தத்திற்கு தூக்கமின்மைதான் காரணம் என நினைத்து மயக்க மாத்திரைகளையும் தூக்க மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பால் கொடுக்கும் தாய்மார்கள் இது போன்ற மாத்திரைகள் சாப்பிடும்போது, அது குழந்தைகளை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போதும், குழந்தை பிறந்த பின்னும், பெண்கள் தாமாக மருந்துகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மருத்துவர்களே சில சமயம் போஸ்ட்பார்டம் டிப்ரெஷனில் பாதிக்கப்
படுவர். மகப்பேறு மருத்துவராக இருந்தாலும், தங்களுக்கு இருக்கும் உளவியல் சோர்வை, அவர்களால் கண்டறிய முடியாது. சுற்றி யிருக்கும் நண்பர்களும், குடும்பத்தினரும்தான் இதை கண்டறியமுடியும். இந்த பிரச்சனைகளைக் கண்டுபிடித்து அதற்கு உரியச் சிகிச்சையை செய்துகொண்டால் பக்கவிளைவுகள் ஏதுவும் இன்றி முழுமையாகக் குணமாகலாம்.

ஓவர் தி கவுண்டரில் சில சமயம் காலாவதியான மாத்திரைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத மாத்திரைகள் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. அல்லது நோய்க்கான மருந்திற்கு பதில் வெறும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளைக் கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. படித்த பல பெண்களும், மருத்துவரிடம் செல்லாமல் மருந்து வாங்க காரணம், நேரத்தைச் சரியாக ஒதுக்காமல் சோம்பலாக செயல்படுவதுதான். மருத்துவரிடம் சென்றால், வரிசையில் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே சரியாகத் திட்டமிடாமல், தங்கள் ஆரோக்கியத்தையும் ஆபத்திற்கு உள்ளாக்கி மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்கின்றனர்” என்கிறார் மருத்துவர் பத்மபிரியா விவேக்.

சில மாத்திரைகள் தொடர்ந்து ஒரு வாரம் எடுக்க வேண்டி வரும். சில மாத்திரைகளைக் குறிப்பிட இன்னொரு மாத்திரையுடன் எடுக்க வேண்டும். இப்படி சில முக்கிய குறிப்புகள் மருத்துவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அதனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஓவர் தி கவுண்டர் மருந்தைத் தவிர்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam