By 13 March 2021 0 Comments

‘பெண்’… உனக்கு நீயே பாதுகாப்பு!! (மகளிர் பக்கம்)

பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்முறை பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். கிராமம் முதல் நகரம் வரை இந்த பிரச்னையை பெண்கள் அன்றாடம் சந்தித்து வருகிறார்கள். தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள், சாலையில் இரவு நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்லாமல், அலுவலகத்திலும் பல பெண்கள் இது போன்ற வன்முறைக்கு ஆளாகிறார்கள். இவை நிகழ்ந்த பிறகு அதற்காக போர்க்கொடி தூக்காமல் நடக்காமல் தடுக்கவே பெண் என்ற அமைப்பு மூலம் பல விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீதர்.

‘‘பெண்களின் நலனுக்காக ஆண்களால் அமைக்கப்பட்டதுதான் பெண் அமைப்பு’’ என்று கார்ப்ரேட் துறையில் வேலைப் பார்த்துவரும் ஸ்ரீதர் பேச துவங்கினார். ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்த செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருக்கு. அந்த நிகழ்வு நடக்கும் போது மட்டும் பொங்கி எழுவாங்க. அதன் பிறகு அப்படியே மறந்திடுவாங்க. ஆனால் இது போன்ற பிரச்னைகளை பெண்கள் நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் தடுத்து நிறுத்த முடியும். விபத்து நடந்த பிறகு அது குறித்து யோசிக்காமல், அது நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்ன்னு தான் யோசித்தோம். அப்படித்தான் ‘பெண்’ உருவானாள்’’ என்றவர் இதனை நான்கு பேர் இணைந்து துவங்கியதாக தெரிவித்தார்.

‘‘இந்த அமைப்பை நான் மட்டுமே ஆரம்பிக்கல. நாங்க நான்கு பேர் கொண்ட குழு. அதில் ஒருவர் நான்கு மாதம் முன்பு தவறிட்டார். மற்ற இருவரில் ஒருவர் பெண். வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை கையாள்பவர். ஸ்ரீராம் ஷர்மா, கலைத் துறையை சேர்ந்தவர். நாங்க நால்வரும் முதலில் இதை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தோம். அதற்கு முதல் கட்டமாக ஆண்களின் நடத்தையில் மாற்றத்தினை கொண்டு வர வேண்டும். அடுத்து பெண்களுக்கு ஒரு மனதைரியம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் வீட்டில் மனைவியாகவே இருந்தாலும் அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டோம்.

எங்க அமைப்பில் பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களின் நடத்தையில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறோம். மனைவியாகவே இருந்தாலும் அவளின் விருப்பம் இல்லாமல் பாலியல் வன்முறை செய்யக்கூடாது என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். மேலும் வீட்டில் கணவர் தன் மனைவியை அடித்தால், வீட்டில் வளரும் மகனும் தந்தையின் செயலை பின்பற்ற ஆரம்பிப்பான். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு எல்லாம் இல்லை. எல்லாருமே ஆண் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு பெண்ணை எவ்வாறு மரியாதையாக நடத்த வேண்டும் என்பது குறித்து கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்திவருகிறோம்.

பெண்கள்தான் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றிய பதிவினை அதிகம் வெளியிடக்கூடாது. அதே போல் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டாலும் அது எல்லா நேரத்திலும் கைக்கொடுக்காது. அதனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் மேடை நாடகங்கள் மற்றும் வர்க்‌ஷாப் மூலம்
பெண்களுக்கு புரிய வைக்கிறோம். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு குட் டச் பேட் டச் பற்றியும் சொல்லித் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்’’ என்றவர் வேலுநாச்சியாரின் உடையாள் படை போல் இதற்காக ஆங்காங்கே தனிப் படையினை அமைத்து செயல்படுத்தி வருகிறார்.

‘‘கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி போன்ற இடங்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தும் போது, நடுத்தரம் மற்றும் மேல் தட்டு மக்களை மட்டுமே நாம் சென்றடைய முடியும். கீழ்த்தட்டு மக்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு பிரபல நடிகர் அல்லது அந்த ஏரியா கவன்சிலர் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தை சொல்லும்போது அது மக்கள் மனதில் எளிதாக பதியும். அதேபோல் நாடகங்கள், ஓவியப் போட்டிகள், பாடல்கள் மூலம் எளிதில் சென்றடையலாம். இதற்காகவே ஒரு தனிப்படையை அமைச்சிருக்கோம். இந்த மாற்றம் உடனடியாக ஏற்படாது என்றாலும், படிப்படியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றவர் இந்த செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எடுத்து வைக்கிறார்.

‘‘இந்த வருஷம் நிறைய பிளான் செய்திருக்கோம். ஆண்கள் கல்லூரியில் பெண்களை மதிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினைநடத்த இருக்கிறோம். பெண் களுக்கு தற்காப்புக் கலைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து நிகழ்ச்சி, உடையாள் படையினை மேலும் பலப்படுத்தும் திட்டம்… என பல நிகழ்வுகளை நடத்தும் எண்ணம் உள்ளது’’ என்றார் ஸ்ரீதர்.Post a Comment

Protected by WP Anti Spam