By 19 May 2021 0 Comments

மொபைல் போன் விதிகள்!! (மருத்துவம்)

உறவினர் ஒருவர் வீட்டில் 6 மாதமே ஆன குழந்தையை அழும்போது டி.வி. முன் படுக்க வைத்து டி.வி.யை சத்தமாக வைத்ததும், அழுத குழந்தை பேசாமல் டி.வி. பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டது. சமீப ரயில் பயணத்தில் சாப்பிட மறுத்து அடம் பிடித்த குழந்தைக்கு மொபல் போனில் கேம்ஸ் போட்டதும் சாப்பிட மட்டும் வாயை திறந்தது. குழந்தைகளை அத்தனை தூரம் அடிமையாக்கிய இந்த அறிவியல் வளர்ச்சி ஒரு வகையில் குழந்தைத்தன்மையை திருடி விட்டதோ? வயதுக்கு மிஞ்சிய தேவையற்ற அறிவையும் அனுபவத்தையும் அளிக்கிறதோ?

சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதையும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும், டேப், லேப்டாப் உபயோகப்படுத்துவதையும் மிகப்பெருமையாக கூறுவதைக் கேட்டிருக்கலாம். அறிந்தோ அறியாமலோ இதன் மூலம் குழந்தைகளுக்குக் கெடுதல் செய்வதை அவர்கள் உணரவில்லை என்பதே உண்மை. சிறுவயதில் நான்கைந்து குழந்தைகளுடன் விளையாடி, கீழே விழுந்து அடிபட்டு, சண்டையிட்டு, சிரித்து, பகிர்ந்து, பிடித்தது பிடிக்காதது அறிந்து… இப்படியான பால்யத்தை இழந்துவிட்ட இன்றைய குழந்தைகள் எந்நேரமும் மொபைலில் தலை புதைந்து கிடக்கின்றனர்.

லொகேஷன் ட்ராக்கிங்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைத்துமே அனைவருக்குமே அறிந்த ஒன்றாக மாறிவிட்டது. தனிப்பட்ட ஒன்று (பெர்சனல்) என்பதே இல்லை… உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அனைவரையும் அறிய வைக்கிறது. ஏதேனும் ஒரு பெரிய நகைக்கடை வாசலை கடந்து போங்கள்… உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்… ‘இந்த வழியே போகிறீர்கள்… அப்படியே ஒரு நடை எங்க கடைக்கு வாங்க’ என்று. எப்படி என்று வியக்கவே வேண்டாம். உங்கள் கையில் உள்ள மொபைலில் உள்ள ஜிபிஎஸ், நீங்கள் செல்லும் இடமெல்லாம் ஒரு நிழல் போல தொடர்கிறது.

புகைப்படம் எடுத்துப் பகிர்தல்

பியூட்டி பார்லர், சினிமா தியேட்டர், மால், துணிக்கடைகள் என்று எல்லா இடங்களிலும் போனில் புகைப்படம் எடுத்து உடனுக்குடன் பகிர்வது ஒரு நோயாகவே பரவியுள்ளதை சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம்.

பப்ளிக் வைஃபை

இப்போது மக்களை கவரும் ஒரு முக்கிய அங்கமாகவே இலவச வைஃபை ஆகிவிட்டது. பொது இடத்தில் உள்ள வைஃபை மூலம் உங்கள் போனில் இருந்து எல்லா விஷயங்களையும் எடுக்க முடியும். இதோடு, இன்னும் எத்தனையோ குற்றங்கள் கைபேசியின் மூலமாகவே நடக்கிறது. பெற்றோர் குழந்தைகளிடையே நல்ல புரிந்துணர்வோடு கூடிய பேச்சும், அன்பான செயலுமே இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். திட்டுவதோ அடிப்பதோ இன்னும் விளைவுகளை மோசமாக்கும்.

அடிக்கடி குழந்தைகளுடன் பேசுங்கள்

ஆளுக்கொரு மூலையில் போனில் புதைந்து போவதில் என்ன லாபம்? குடும்பத்துக்கு என நேரம் ஒதுக்கி அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேளுங்கள். போன் பற்றிய பொதுவான வி‌ஷயங்களை விவாதிக்கலாம். உதாரணமாக வாட்ஸ் அப் போன்றவற்றின் உபயோகம், தேவையான ஆப், தேவையற்ற ஆப் போன்றவை பற்றிக் கூட பேசுங்கள். மொபைல் போனுக்கு அடிமையாவதை தவிர்ப்பதே நோக்கம் என்பதை மனதில் கொள்ளுங்கள். பகிர்வது முக்கியம்… சமூக வலைத்தளத்தில் மட்டுமல்ல… குடும்பத்திலும்!

சேர்ந்து உபயோகியுங்கள்

தனித்தனியாக போன் என்பதை விட 2 குழந்தைகள் இருந்தால் ஒரே போன் இருவருக்கும் பொதுவானதாக இருக்கலாம். சில நேரம் நீங்களும் சேர்ந்து உபயோகிக்கலாம். இது போனை தவறான வழியில் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்.

நண்பர்களை கவனியுங்கள்

யாருடன் அதிகம் சாட் செய்கிறார்கள் என்பது நீங்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதிக நேரம் பேசுபவர்களுடன் தன்னையும் அறியாமல் ஒரு நம்பிக்கை தோன்று வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனை தவறாக பயன்படுத்தும் நபர்களும் ஆன்லைனில் இருக்கலாம். ஆகவே, கவனிப்பு மிக அவசியம்!

விதிகளும் எல்லைகளும் அவசியம்

இந்த நேரம் மட்டுமே போன் உபயோகிக்க வேண்டும், மாதம் இவ்வளவு பணமே இதற்குச் செலவிட வேண்டும், இவரோடு மட்டுமே பேச வேண்டும் போன்ற அவசிய விதிகள் வாயிலாக, அவர்களின் போன் மீதான பற்றுக்கு ஓர் எல்லையை தயவு தாட்சண்யம் இன்றி நிர்ணயிக்க வேண்டும்.

வயது வரம்பு

மொபைலில் கேம்ஸ் விளையாடினாலும், சமூக வலைத்தளங்களில் இருந்தாலும், அவர்களின் வயதுக்கு உட்பட்ட வேலைகளை, படங்களை, செய்திகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிரைவசி செட்டிங்

மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள பிரைவசி செட்டிங் பற்றி எடுத்துக்கூறி, அவர்களை அதை உபயோகிக்க பழக்க வேண்டும். படங்கள் டவுன்லோட் செய்வது, நமது செய்தியை பகிர்வது போன்றவற்றை பிரைவசி செட்டிங் மூலம் கட்டுப்
படுத்தலாம்.

பெற்றோர் கட்டுப்படுத்தும் செட்டிங்

போனில் சைல்ட் கன்ட்ரோல், பேரன்டல் கன்ட்ரோல் போன்றவை இருந்தால் அவற்றைப் பயன்படுத்தவும். வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே நன்று. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதற்கு முன் நாம் அவற்றை கடைப்பிடித்தல் இன்னும் நல்லது!Post a Comment

Protected by WP Anti Spam