By 9 June 2021 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு! ! (மகளிர் பக்கம்)

பேச்சில் கெட்டிக்காரர்கள் என்று சொல்லுவார்கள். திவ்யாவிடமும் அந்த அசாத்திய பேச்சுத்திறமை கொட்டிக் கிடக்கிறது. வெறும் பேச்சு மட்டுமில்லை, தொழிலி லும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து உள்ளார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்திற்காக கொக்குப் பிடிக்கும் மீனாக காத்திருக்கும் திவ்யா, இப்போது கோதாவில் இறங்கி இருப்பது ஆன்லைன் பொட்டிக் பிசினஸ். இளம் வயதில், பெரிதாக முதலீடு எதுவும் செய்யாமல், வாடிக்கையாளர்களை தன் வசமிழுக்க அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஒரு மாதம்தான்.

‘‘நான் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. இன்னும் எவ்வளவோ சாதிக்கணும்’’… என பேச்சிலேயே எதிர்த்தரப்பை தன் வசப்படுத்தும் திவ்யா தனது வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.‘Aim High’ன்னு சொல்லுவாங்களே, உயர்ந்த லட்சியம்… என்னுடைய மிகப் பெரிய கோல் சினிமா இயக்க வேண்டும் என்பது தான். சினிமா துறையில் எனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்த வேண்டும் என்று பெங்களூரில் பார்த்து வந்த ஐ.டி வேலையை உதறிட்டு சென்னைக்கு பறந்து வந்தேன்.

நான் பிறந்தது படிச்சது எல்லாம் தஞ்சாவூர்தான். நடுத்தர குடும்பம். இருந்தாலும் பெற்றோர் என்னை நன்றாகவே படிக்க வைத்தனர். ஐ.டி பிரிவில் எம்.எஸ்.சி., முதுநிலை பட்டம் பெற்றேன். பெங்களூரில் நல்ல சம்பளத்துடன் வேலையும் கிடைச்சது. படித்த படிப்புக்கு ஏத்த மாதிரி வேலையும் நல்லாவே இருந்தது. ஆனா எனக்குத்தான் அதுல சுவாரஸ்யம் ஏற்படல. திவ்யா, ‘தி கிரேட் டைரக்டர்’ என எனக்குள் ஒருத்தி தொல்லை செய்து கொண்டே இருந்தாள். அலை பாய்ந்த மனதுடன் துணிந்து வேலையை ராஜினாமா செய்தேன்.

சென்னைல கால் வச்சது ரொம்பவே நல்ல நேரம் தான். டைரக்டர் ஆர்.பார்த்திபன் சாரின் அறிமுகம் கிடைச்சது. என்னோட கனவை சொன்னேன். படபடன்னு நான் பேசினது பிடித்துப் போனதோ என்னவோ தெரியல. என்னை அசிஸ்டென்ட்டா சேத்துக்கிட்டாரு. அவரிடம் சினிமா இயக்குவது குறித்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

அவருடன் மட்டுமல்லாமல், மற்ற இயக்குனர்களுடனும் இணைந்து வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இரவு, பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். எனக்கான கதையும் ெரடியானது. அதை படமாக்கவும் துவங்கிட்டேன். அந்த சமயத்தில் தான் இந்த பாழாப்போன கொரோனா வந்தது. இங்க ஒன்ன சொல்லியே ஆகணும். சினிமான்றது என்னோட கனவு. ஃபேஷன்.. அதுல சம்பாதிக்க முடியுமான்றது தெரியாது.

அது வேற.. ஃபியூச்சர் இருக்கான்னும் தெரியாது. அது என்னோட லட்சியம். அத பண்ணிட்டாலே நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லிக்கலாம். ஆனா அது என்னை வாழ வைக்கறது இல்லையா? அப்படி இருந்தும் பார்த்திபன் சாரோட புராஜெக்ட்ல நிறையவே கத்துக்கிட்டேன். அதைத் தொடர்ந்து மேலும் பல டைரக்டர்களுடன் இணைந்து இரவு, பகல் பாராமல் கடுமையான உழைப்பு. அடுத்தபடியா என்னோட கதையை படமாக்கும் புராஜெக்ட் கூட தொடங்கிட்டேன். அதுக்குள்ள கொரோனா வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சி. சினிமா இன்டஸ்ட்ரி அப்படியே முடங்கியதால என்னோட புராஜெக்டிலும் பெரிய ஸ்பீட் பிரேக் விழுந்தது’’என்றவருக்கு சினிமா மட்டுமில்லை ஆடை அலங்காரம் மீதும் தனி ஃபேஷன்
இருந்துள்ளது.

‘‘சினிமா தணியாத தாகம் என்றாலும், வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமே. உதவி இயக்குனரா பார்த்திபன் சாருடன் வேலை பார்த்த போது, அவரின் படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராவும் வேலை பார்த்து இருக்கேன். ‘ரொம்ப நல்லா இருக்கே.. என்னைப் போலவே வித்தியாசமா’ன்னு பார்த்திபன் சார் கொடுத்த உற்சாகம் அடுத்தடுத்த படங்களின் டைரக்டர்களிடம் இருந்தும் கிடைத்தது’’ என்றவருக்கு நிதி சுதந்திரம் மீது அசாத்திய நம்பிக்கையுண்டாம்.

‘‘நாம உழைக்கிறது நம்முடைய எதிர்காலம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். சொந்த காசை செலவு செய்யும் சுதந்திரம் வேற எதுலயும் கிடைக்காது. அதே சமயம் நாம் சம்பாதிச்சதை நிலைப்படுத்த முயற்சி செய்து பாருங்க, இக்கட்டான நிலையில் அதுதான் நமக்கு கைகொடுக்கும். ஊரடங்கு போது எனக்கு திடீர்னு பொறி தட்டுச்சி. சினிமா இப்போதைக்கு இல்லை. ஆனால் ஆடை அலங்காரம் நமக்கு கைவந்த கலையாச்சே… போடு துணிக்கடைன்னு உள் மனசு உத்தரவு போட்டது. சோஷியல் மீடியாவில், குறிப்பா முகநூலில் 5 லட்சம் பேர் எனக்கு ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவர்களை நம்பி தொடங்கியது தான் இந்த ஆன்லைன் துணிக்கடை.

பொட்டிக் என்றாலே… பெண்களுக்கான நவநாகரீக ஆடை வடிவமைப்பு நிலையம்னு நினைக்கிறாங்க. அதான் இல்ல. பெண்கள் மட்டுமன்றி குழந்தைகள், ஆண்கள் என அனைத்து தரப்புக்கும் ஆடை வடிவமைக்கிறேன். ஒரு சிலர் அசாத்திய உயரம், தடிமன் என உடலமைப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கான ரெடிமேட் ஆடை கிடைப்பது கஷ்டம். அவர்களுக்கு தனித்துவமாக வடிவமைக்கிறேன். அதே போல், கர்ப்பிணிகளுக்கு என ஸ்பெஷல் வடிவமைப்பு என்னோட கைநேர்த்தி.

ஒரு மாதமாகிறது இது துவங்கி. இது வரை ஐம்பது ஆர்டர் கிடைத்துள்ளது. ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. கொரோனா பாதிப்பு விரைவில் நீங்கும், அடுத்த கட்டமாக எனது லட்சிய கனவு நிறைவேறும்” என உற்சாகமாக உரையை முடித்தார் திவ்யா.Post a Comment

Protected by WP Anti Spam