By 11 June 2021 0 Comments

சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!! (மகளிர் பக்கம்)

சன் டி.வி.யில் 20 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக முத்திரை பதித்தவர் சுஜாதா பாபு. தனது வளமான குரலால் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தவர். தமிழகத்தில் பிறந்து தன் இனிய குரலால் கோலோச்சியவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘எங்களுடைய பூர்வீகம் ஈரோடு என்றாலும் கோவையில் வளர்ந்தேன். அதன் பின் அப்பாவின் பணி நிமித்தமாக நாங்க சென்னையில் செட்டிலாகி இருந்தோம். படிப்பு முடிச்ச கையோடு எனக்கு திருமணம் நிச்சயமானது. கணவரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி. அவர் தூர்தர்ஷனில் கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்து சில காலம் நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். அதன் பின் சென்னைக்கு வந்துவிட்டோம். அந்த சமயத்தில் சன் டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் தேவைக்கான விளம்பரம் செய்தி பார்த்தேன். முயற்சி செய்யலாம்னு நேர்காணலுக்கு போனேன். ஒரு செய்தியைக் கொடுத்து படிக்க சொன்னாங்க. நானும் படிச்சேன். இரண்டு வாரத்தில் ‘உங்கள செலக்ட் செய்திட்டோம்’னு அழைப்பு வந்தது. அப்படித்தான் என்னுடைய செய்தியாளர் பயணம் துவங்கியது’’ என்றவர் தன் குரலுக்காக பல தியாகங்களை செய்துள்ளார்.

‘‘செய்திவாசிப்பவர்களுக்கு அவர்களின் குரல் தான் ஜீவ நாடியே. அதை பாதுகாக்க நான் நிறைய தியாகம் செய்திருக்கேன். எனக்கு கரும்பு சாறு ரொம்ப பிடிக்கும். ஒரு முறை அதை குடித்து எனக்கு தொண்டை கட்டிக் கொண்டது. ஒரு வாரம் செய்தி வாசிக்க முடியல. என்னுடைய குரலை கேட்டு அழுத என் மகன் இனிமேல் கரும்பு சாறு குடிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கொண்டான். அன்று முதல் இன்று வரை குடிப்பதை தவிர்த்து வருகிறேன். அதே போல் ஐஸ்கிரீமும் சாப்பிட மாட்டேன். தொலைக்காட்சியில் இவ்வளவு காலம் நான் செய்தி படித்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் செய்தியினை படிக்கும் போது முதல் முறையாக படிப்பது போல் தான் இருக்கும். காரணம் தினமும் நான் புது செய்தியினை தானே படிக்கிறோம். அதனால் அனுபவமும் புதிதாகத்தானே இருக்கும். ஒரு சின்ன தவறு செய்தாலும், செய்தியின் கரு முற்றிலும் மாறிடும். அதனால் முதல் நாள் எப்படி பயத்துடன் படித்தேனோ, அப்படித்தான் இன்றும் படிக்கிறேன். என்னுடைய 20 வருடத்தையும் இப்படித்தான் கடந்து வந்திருக்கிறேன்.
ஒரு செய்திவாசிப்பாளராக என்னுடையது நீண்ட கால பயணம் தான்.

இதனை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. நான் செய்தி வாசிக்க வந்த போது சீரியல் மற்றும் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போது என் மகனுக்கு மூன்று வயது என்பதால் வந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டேன். இப்போது அவன் கல்லூரியில் படிக்கிறான். அதனால் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது, ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோவுக்கு அம்மாவா நடிச்சேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து ஆறு படங்களில் நடித்துவிட்டேன். இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் நீதிபதியாக நடிச்சிருக்கேன். வெற்றி செல்வன் இயக்கத்தில் ‘எண்ணி துணிக’, மனோஜ் ராம் இயக்கத்தில் ‘நட்சத்திரா’ படத்தில் கட்டிட மேஸ்திரியம்மா கேரக்டரில் நடிக்கிறேன்’’ என்றவர் தன் மீடியா குறித்த அனுபவங்களை விவரித்தார். ‘‘மீடியாவுக்குள் சாதாரண சுஜாதாவா இருந்து இப்போது சன் டி.வி. சுஜாதாவா மாறுனது என்னுடைய வாழ்க்கையில் எதிர்பாராதது. எங்கே போனாலும் என்னை சன் டி.வி. சுஜாதான்னு கூப்பிடுறாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், கவுரவமாகவும் இருக்கு. ஒரு தடவை, கண்ணு தெரியாத பிள்ளைகளுக்கு தேர்வு எழுதினேன். தேர்வு முடித்தவுடன் அவர்களிடம் பேசிய போது, ஒரு மாணவன் என்னுடைய குரலை கேட்டு, ‘‘மேடம் நீங்க சுஜாதாபாபு தானே… சன் டி.வி.ல நியூஸ் வாசிக்கிறீங்கதானே… உங்க குரலுக்காகவே நியூஸ் கேட்டு இருக்கேன்’’ என்றான்.

செய்தி வாசிப்பது மட்டுமில்லாமல் ‘வணக்கம் தமிழா’, ‘திரை விமர்சனம்’, ‘விளையாட்டு உலகம்’ போன்ற நிகழ்ச்சியும் செய்திருக்கேன். என்னை நேர்ல பார்த்து தெரியும் என்பதைவிட குரலை வைத்து அடையாளம் கண்ட போது ஒரு நிமிடம் நாவடைத்து நின்றேன் என்று தான் சொல்லணும்’’ என்றார் தன் டிரேட் மார்க் புன்னகை மாறாமல். ‘இன்றைய தலைமுறையினர் ரொம்பவே திறமைசாலியா இருக்காங்க. ஒரு விஷயத்தை எளிதாக புரிந்து கொள்றாங்க. எந்த சூழலுக்கும் தங்களை பொருத்திக் கொள்றாங்க. நான் சொல்ல வருவது ஒன்று தான் என்ன சூழலிலும் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காமல், தங்களுக்கு என தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் அதே கணீர் குரலில் சுஜாதா பாபு.Post a Comment

Protected by WP Anti Spam