திட்டமிடுங்கள்… நேர்வழியை தேர்ந்தெடுங்கள்… முன்னேறுங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 42 Second

கனவுகள் பற்றி ஒரு போதும் கவலை வேண்டாம். ஐ.ஏ.எஸ் வேலையோ அல்லது சாதாரண அலுவலக வேலையோ, என்னவாக இருந்தாலும் அது நமது கனவு. அந்த கனவை அடைய வாழ்வில் போராடி வெற்றிப் பெறுவது மட்டுமே லட்சியமாகச் சிலர் கொண்டுள்ளனர். இது போன்றதொரு வெற்றியைப் பல தடைகள் கடந்து, தமிழர் பாரம்பரிய இசையான பறை கலையை கற்றது மட்டுமல்லாமல், அதன் மூலம் மக்களுக்கான சேவையும் செய்து வருகிறார் மீனாட்சி. ‘‘பறை இசையை ஆண்கள் இசைக்கும் போதே இழிவாகப் பார்க்கக்கூடிய சமூகமாகத்தான் இருக்கிறது. நான் அதனை கற்றுக் கொள்ள போகிறேன் என்று சொன்னபோது, வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.’’

“சொந்த ஊர் மதுரை. அதனாலேயே அப்பா மீனாட்சினு பெயர் வச்சாங்க. பள்ளிப்படிப்பை முடித்த பின் அடுத்தக் கட்டமாகப் படித்தால் சென்னையில் தான் படிப்பேன்னு வீட்டுல சண்டை போட்டு சென்னையில் பி.ஏ. ஆங்கிலம் படித்தேன். பெற்றோரின் கைக்குள் வளர்ந்த எனக்குத் தனிமை பிடியில் சிக்கியதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். இதைக் கண்ட அப்பா சென்னைக்கு தன் வேலையை இடமாற்றம் செய்து வந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே மேடை நாடகத்தை ஒரு பாடப்பிரிவாக எடுத்தேன். எந்த ஒரு இலக்குமே இல்லாமல் இருந்த எனக்கு இதன் மூலம் ஒரு வழி தென்பட்டது. பல மேடைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததோடு அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது.

படிப்பு, நாடகங்களுக்கு இடையே நான் அவ்வப்போது ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்திற்கு செல்வது வழக்கம். அங்கு சென்று அந்த குழந்தைகளை பார்க்கும் போது எல்லாம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு எண்ணம் தோன்றும். ஆனால் அது தான் என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை’’ என்கிறார் மீனாட்சி. படிக்கும் போதே சென்னை ‘ஆல் இந்திய ரேடியோ’வில் பகுதி நேரமாக வேலைப் பார்த்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட மீனாட்சி, தான் பறை கற்றுக் கொண்ட அனுபவத்தையும், அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது பற்றிப் பேசினார்.

“தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பறை இசையை ஆண்கள் இசைக்கும் போதே இழிவாகப் பார்க்கக் கூடிய சமூகமாகத்தான் இருக்கிறது. அதிலும், நான் பெண்ணாக அதனை கற்றுக் கொள்ள போகிறேன் என்று சொன்னபோது, வீட்டில் எதிர்ப்பு தான் தெரிவித்தனர். ஆனாலும், என் போராட்டத்தை நிறுத்தவில்லை. குடும்பத்தின் உதவியை நாடாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறேன்” என்று கூறும் மீனாட்சி, “மெய் கலை கூடல்” என்ற அமைப்பின் மூலம் ஆறாண்டுகளுக்கு மேல் இந்த துறையில் இயங்கி வருகிறார்.

தனது வேலையின் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, அரசு கல்லூரிகள், பள்ளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் உள்ள குடிசை பகுதி ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளைத் தேடிச்சென்று, நாடகம் மூலமாக விழிப்
புணர்வு அளிப்பதுடன் பறையிசையையும் கற்றுக் கொடுக்கிறார். குறிப்பாக, சமூக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாக பல்வேறு வீதி நாடகங்களை இவரது குழுவுடன் இணைந்து அரங்கேற்றி வருகிறார்.

“எனது முதல் நாடகம் சென்னை, பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் கடற்கரை அருகில் உள்ள ஒரு பகுதியில் போட்டோம். ’பெண்களுக்கு நேரிடும் வன்கொடுமைகள்’ பற்றிய அந்த நாடகத்தில் நான், பறை வாசித்து முடித்த சில மணி நேரத்தில் அங்கு சுற்றியிருந்த பலர் கண்ணீர் விட்டு அழுதுட்டாங்க. இதில் ஒரு அம்மா அவருடைய இரண்டு பெண் குழந்தைகளை என்னிடம் அழைத்து வந்து, ‘என் குழந்தைகளை இனி நீதாம்மா பாத்துக்கணும்’னு சொன்னாங்க. அந்த தருணம் ஆடி போய்ட்டேன்.

வீதி நாடகத்தின் தாக்கம் இப்படி இருக்குமான்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று கூறுகிறார் மீனாட்சி. ஆரம்பக் காலத்தில் பல அமைப்புகளுடன் இணைந்து வேலை பார்த்து வந்த மீனாட்சி தற்போது தனக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி தன் குழுவுடன், நாட்டுப்புறக் கலைகளான பறை, கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கைவினைக் கலைகள், ஓவியம், புகைப்படம், வீதி நாடகம் போன்றவற்றை கற்றுத் தருகிறார்.
இலவசமாக செய்துவரும் இந்த வேலையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறார். “இந்த வேலை செய்த போது ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் எனக்கு வெளியே கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் ஆதரவை பார்த்திட்டு இருபது பறை கருவிகள் வாங்கிக் கொடுத்து இருக்காங்க. அதுவே என்னை மேலும் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது” என்று கூறும் மீனாட்சி “என் அண்ணனுடைய திருமணத்திலும், தாத்தா இறந்த போதும் அந்த கிராமமே அதிர்ந்த நிலையில் நான் தான் பறை அடித்தேன்” என்று பெருமையாகக் கூறுகிறார். “என்னை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொண்ட பின் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, குறிக்கோளுடன் திட்டமிடுங்கள், பொறுமையுடன் செயல் படுங்கள், போராட்டத்தை கைவிடாதீர்கள், நேர்வழியைத் தேர்ந்தெடுத்து முன் னேறுங்கள் வெற்றி பெறுங்கள்” என்கிறார் மீனாட்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிப்பதே தெரியக்கூடாது! (மகளிர் பக்கம்)
Next post ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)