ஆஸி.யை தூசியாக்கினார் டைலர்: மே.இந்திய தீவுகள் கலக்கல் வெற்றி

Read Time:6 Minute, 33 Second

Cricket,11.jpgசாம்பியன்ஸ் டிராபி துவக்கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவு. பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அந்த அணி அநாயசமாக தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளர் டைலர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து கதிகலங்க அடித்தார். மும்பையில் ப்ரா போர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சாம்பின்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நேரத்தில் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார் ஜெரோம் டைலர்.

ஒரு நாள் போட்டிக்கே உண்டான அத்தனை விறுவிறுப்பான திருப்பங்களும் இந்த போட்டியில் அரங்கேறியது. இதுவரை சாம்பின்ஸ் டிராபியை கைப்பற்றாத ஆஸ்திரேலியா வெற்றியுடன் கணக்கை துவக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அனைவரையும் அதிரவைத்துவிட்டார் ஜெரோம். வெற்றிக்கு தேவை இன்னும் 10 ரன்கள் கையில் இருப்பதோ 3 விக்கெட்கள். ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடும் என்று இருந்தபோது புயலாய் பந்த்வீசி அடுத்தடுத்து 3 விக்கெட்களை கவிழ்த்து ஆஸ்திரேலிய வீரர்களை கலங்கடித்துவிட்டார் ஜெரோம். 3 பந்த்களில் ஆட்டத்தின்போக்கே மாறிவிட்டது.

முன்னதாக டாஸ் ஜெயித்த மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது. புதியதாக களம் இறங்கிய ருனோகோ மார்டர் மின்னல் வேகத்தில் 90 ரன்களை குவித்தார். 7 பவுன்டரிகள்,ஒரு சிக்சர் என்று பின்னி எடுத்தார் அவர். ஒரு கட்டத்தில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பரிதாபமாக தவித்து நின்றது மேற்கிந்திய தீவு அணி. அப்போது கேப்டன் லாராவும்,மார்டனும் பொறுப்பாக இணைந்து விளையாடி 103 பந்த்களில் 137 ரன்களை குவித்தனர்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் வெறும் 80 ரன்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவி நேற்று சுதாரித்தது. சிவ்நாராயண் சந்தர் பால் இல்லாத குறையை மார்டன் நிரப்பினார். வேவலும்,கைலேவும் சுதப்பிவிட மேற்கிந்திய தீவுகள் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அதனை மார்டனும் லாராவும் தவுடுபொடியாக்கினர். இவர்களை பிரிக்க பாண்டிங் பல யூகம் வகுத்தார். ஆனால் எந்த பாட்சாவும் பலிக்கவில்லை.

இதனையடுத்து ஒரு ஓவருக்கு 4.7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும் கேப்டன் பாண்டிங் ஒரு ரன்னிலும் வெளியேற 5_வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 17 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. மறுமுனையில் கில்கிரிஸ்ட் மிகவும் நேர்த்தியாக ஆடி 92 ரன்கள் குவித்தார். 120 பந்த்களில் 11 பவுண்டரிகள் அடித்து களத்திலேயே வெகுநேரம் இருந்தார் அவர்.

ஒரு சமயத்தில் 81 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா பரிதாபமாக காட்சி அளித்தபோது கில்கிரிஸ்டுடன் ஜோடி சேர்ந்த மைக்கேல் கிளார்க் தன் பங்கிற்கு 47 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரும் இணைந்து 5_வது விக்கெட்டிற்கு 101 ரன்கள் குவித்து வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத திருப்பமாக நன்கு விளையாடிக்கொண்டிருந்த கில் கிரிஸ்ட் ரன் அவுட்டாக ஆஸ்திரேலியாவின் தலைவிதியே மாறியது. எடுக்கவேண்டிய ரன் ரேட் எக்குத்தப்பாக எகிறியது. எனினும் சைமன்ஸும் ஹஸ்கியும் வெற்றியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தபோதுதான் புயலாக வந்த ஜெரோம் டெய்லர்,மைக்கேல் கிளார்க்,ஹ$சி,ஹோக் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி கடுக்காய் கொடுத்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகளிடம் பரிதாபமாக தோற்றுப்போனது ஆஸ்திரேலியா. இலங்கையிடம் மரண அடி வாங்கிய மேற்கிந்திய தீவு ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அதனை போக்கிக்கொண்டது. ஆட்டத்தின் சிறந்த வீரராக மார்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஹாட்ரிக் மூலம் ஒரு நாள் போட்டியில் முதலாவது ஹாட்ரிக் அடித்த மேற்கிந்திய வீரர் என்ற பெருமையை டைலர் தட்டிச் சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கற்பழிப்பு: இஸ்ரேல் அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Next post இராக்கில் இம்மாதம் 70 அமெரிக்கப் படையினர் பலி