மீண்டும் மரச்செக்கை நோக்கி! !! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 51 Second

வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வணிகருக்குக் கொடு’… இது, மரச்செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.‘‘நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரியமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரீகம் என நினைக்கிறோம். அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச்செக்கில் பிழியும் எண்ணெய்.

மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச்செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. மரச்செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், அது எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைகிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு தரமானதொரு மரச்செக்கு எண்ணெய் வகைகளை ‘மகிழ்’ என்ற பெயரில் கொடுத்து வருகிறோம்’’ என்கிறார் இலக்கியா.

“நாமக்கல் பக்கம் பரமத்தி வேலூர் தான் என் சொந்த ஊர். இயற்கையான பொருட்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் என்னுடைய மைத்துனருடன் இணைந்து இதை செய்து வருகிறேன். அதில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகள் மரச்செக்கில் ஆட்டி கொடுக்கிறோம். எங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விவசாயிகளிடமிருந்தும், அரசு மண்டிகளிலிருந்தும் பெறுகிறோம். இதில் குறிப்பாக தேங்காய் சல்பர் இல்லாத பருப்பாக வாங்குகிறோம். நிறைய அளவில் தேங்காய் எண்ணெய் எடுப்பவர்கள் பூஞ்சை மற்றும் ஃபங்கல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு சல்பர் வைப்பார்கள். அப்படி இல்லாமல் தேவையான அளவு மட்டும் வாங்கி பயன்படுத்துகிறோம். அதற்கு தேவையான களம் மற்றும் சோலார்ஸ் இங்கு இருக்கிறது. அதே போல் நல்லெண்ணெய், கருப்பட்டி போட்டுதான் ஆட்டுகிறோம்” என்கிற இலக்கியா, உடல் ஆரோக்கியத்திற்கான ஜூஸ்களும் கொடுத்து வருகிறார்.

“நெல்லிக்காய், கற்றாழை, முருங்கை காய், செம்பருத்தி, வெண் பூசணி, சுரைக்காய், வெற்றிலை, எலுமிச்சை என ஏழு வகையான ஜூஸ்களை இயற்கையான முறையில் கொடுக்கிறோம். இதில் எலுமிச்சை தோலோடு போட்டு அரைப்போம். இந்த ஜூஸ்கள் முதலில் மருத்துவமனைகளுக்குத்தான் கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது மற்ற இடங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெற்றிலை ஜீரண பிரச்சினைகளை தீர்க்கும். செம்பருத்தி ரத்தம் ஊறுவதற்கும், இதய வலிமைக்கும், ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது. முருங்கை நோய் எதிர்ப்பு சக்தியோடு எலும்புகளை வலிமையாக்குகிறது. வெண்பூசணி, சுரைக்காய் உடல் எடையை குறைக்கிறது. ஜூஸ்கள் மட்டுமில்லாமல் தலைக்கு குளிக்க பயன்படும் அரைப்பு பவுடருடன் ஹேர் ஆயில் மூன்றும் ஒரு கிட்டாக கொடுக்கிறோம். இதில் ஹேர் ஆயிலில் 18 வகையான மூலிகைகள் சேர்த்து காய்ச்சப்படுகிறது. இது போக நாட்டு சர்க்கரையும் எங்களிடம் உண்டு” என்றவரிடம், பொதுவாக ஆர்கானிக் பொருட்களுக்கு விலை அதிகமாக இருக்கிறதே என்கிற கேள்வியினை முன்வைத்தோம்.

“ரோட்டரி செக்கு எண்ணெய்களோடு ஒப்பிடும்போது மரச்செக்கு எண்ணெய் விலை கொஞ்சம் அதிகம்தான். உடலுக்குத் தகுந்த எண்ணெயை உருவாக்க, பக்குவம், நேரம், செலவு, சற்றுக் கூடுதல் நேரம் எடுக்கும். சரியில்லாத உணவை எடுத்துக்கொண்டு கொழுப்பு ஏறி, மருத்துவரிடம் சென்று மாத்திரை, மருந்து இவற்றிற்குச் செலவு செய்வதை விட, மரச்செக்கு எண்ணெயை கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்கினால் தவறில்லை என்பதை உணர மறுக்கிறோம்.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பயிர்களைக் காய வைத்து, கல், தூசு நீக்கியே மரச் செக்கில் ஆட்டப்படுகிறது. கற்களை நீக்காமல் ஆட்டினால் மரத்தால் ஆன உலக்கையும், அடிப்பாகமும் சேதமாகும். ஆனால் ரோட்டரி செக்குகள் முழுவதும் இரும்பால் ஆனதால் கல் இருந்தாலும் கவலையில்லை. சுத்தமான மரச்செக்கு எண்ணெயா என உறுதி செய்து கொள்ள, எண்ணெய் பாட்டில் வாங்கும்போது அதைத் தலைகீழாக ஒரு முறை திருப்பிப் பார்க்கலாம். கறுப்பாக கசடுத் துகள்கள் தென்படும். அப்போது அதை உண்மையான செக்கு என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அதே போல் எண்ணெய்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தேடி தேடி பார்த்து வாங்குகிறோம். இங்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் கடலையை வட மாநிலங்களில் எடுத்தால் கொஞ்சம் விலை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அந்த வித்தியாசம் சுவையிலிருந்து, மனத்திலிருந்து எண்ணெயிலும் தெரியும்” என்கிற இலக்கியா, இயற்கை முறையிலான பொருட்களை மக்களிடம் கொண்டு செல்வதே நோக்கம் என்கிறார்.

‘‘முன்பெல்லாம் கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிட்டு வீட்டு உபயோகத்திற்குப் போக மீதமிருப்பதை மரச்செக்குகளில் ஆட்டி செக்கு எண்ணெயாக விற்பனை செய்வார்கள் அல்லது வீட்டு உபயோகங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரச்செக்கு வழக்கில் இருந்தது. அப்போது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி செக்கில் அரைத்து எண்ணெயாக நேரடியாக மாற்றிக் கொள்வர். நவீன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வந்த பின்னர், செக்குகள் பக்கம் மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர்.

அதன் விளைவு, மரச்செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மீண்டும் மரச்செக்கை நாடியுள்ளோம்.இங்கு எங்களிடம் ஒரு முறை வாங்கியவர்கள் திரும்பி எங்களிடமே வரும் போது நாம் கொடுக்கும் பொருள் சரியானதாக இருக்கிறது என்கிற நம்பிக்கை வருகிறது. அந்த நம்பிக்கை எங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.

அதுதான் உள்ளூரில் மட்டும் இந்த பிசினஸ் செய்து கொண்டிருந்த எங்களை தமிழகம் முழுவதும் செய்யும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. அடுத்து உலகம் முழுவதும் ஆரோக்கியமான நம்மூர் மரச்செக்கு எண்ணெய் வகைகளை கொண்டு போகவேண்டும். அதோடு இன்று பெண்கள் அழகு சாதன பொருட்களுக்காக அதிக அளவில் செய்றகையை கையில் எடுத்துள்ளனர். அதற்கு மாற்றாக இயற்கை முறையில் பொருட்களை கொடுக்க வேண்டும்” என்கிறார் எம்.பி.ஏ. பட்டதாரியான ஆர்.இலக்கியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட்டையே திக்குமுக்காட வைத்த திருடர்கள்! (வீடியோ)
Next post குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்! (மகளிர் பக்கம்)