By 15 October 2021 0 Comments

சேமிப்பு வழிகாட்டி-வாழ்க்கை + வங்கி = வளம்! (மகளிர் பக்கம்)

ஒரு இரண்டாயிரம் ரூபாய் சில்லறை நாணயங்களாக ஒருவர் வைத்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதைச் சுமக்க முடியாமல் சுமந்து நடக்கிறார். எதிரே வருபவர் அவரைப் பார்த்து ‘இந்த மூட்டை காசை வங்கியில் செலுத்திவிட்டு ரூபாய் நோட்டாக மாற்றிக் கொள்ளலாமே’’ என்று ஆலோசனை கூறுகிறார். ‘நல்ல யோசனை… கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்ச காசு’’ என்று முதலாமவர் பதில் சொல்லிக்கொண்டே அவரின் கிராமத்தில் உள்ள வங்கிக்குச் செல்கின்றார்.

வங்கி அலுவலர் அவரிடம், ‘இந்தப்பணம் உங்களுக்கு ஏதாவது செலவுக்கு உடனே தேவையா? அல்லது சில நாட்கள் வங்கியில் சேமித்து வைக்கலாமா?’ என்று வினவ. அதற்கு காசை வங்கியில் செலுத்த வந்தவர், ‘இப்போ அவசரம் இல்லை. பிறகு எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய வங்கி கணக்கிலேயே இருக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டே மூட்டை காசினை வங்கி அலுவலரிடம் தருகின்றார். இப்படித்தான் ஆரம்பித்தது காசு மூட்டை சுமந்தவரின் வங்கிக்கணக்கு.

இந்த சம்பவத்தில் வங்கி அலுவலர் சொல்லிச் சேமிக்கும் பழக்கம் உருவானது என்றால் அதற்கும் மேலே நமக்கே – நம்முள்ளே இந்த நல்ல பழக்கம் ஏற்படவேண்டும் என்பதே இன்றைய சிந்தனை. ஒரு முட்டையில் உள்ள உயிருக்குத் தேவையான வெப்பத்தை அடைகாக்கும் தாய்க்கோழி தரலாம்; ஆனால் அந்த முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவரும் உந்துதல் அந்த உயிருக்குத்தானே உள்ளது. அதுபோல வங்கிகள் சேமிப்புத் திட்டங்களைத் தரலாம், மற்றவர்கள் விரிவாக சேமிப்பைப் பற்றிப் பேசலாம்; ஆனால் சேமிக்கவேண்டும் என்ற உந்துதல் அந்த முட்டையை உடைத்து வெளிவரும் உயிருக்கு இருப்பதுபோல அவரவர்க்கு இருக்க வேண்டும்.

மேலே சொன்ன மூட்டைச் சம்பவமும், முட்டை உதாரணமும் நிதர்சன உண்மைகள். இவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பெருகும் நன்மைகள். பற்பசையிலேயே பாதுகாப்பு வளையம் தேடும் நமக்கு நம் பணத்துக்காக பாதுகாப்பு வளையம் தேவைதானே! அந்த வளையம்தான் வங்கிகள்.

தொடர்வைப்புச் சேமிப்புத் திட்டம் (Recurring Deposit)

வங்கிகள் நமக்கு பயன்தரும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. மலையிலிருந்து விழும் அருவிக்கு நடுவே சுழலும் சக்கரங்களை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். விழுந்து செல்லும் நீரைக் கால்வாய்கள் மூலம் வயல்களில் பாய்ச்சி வேளாண்மை பெருக்கலாம். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அந்த இடத்தின் வருமானத்தை உயர்த்தலாம். இருப்பது ஒரு அருவி என்றாலும் அது ஒரு கருவியாக செயல்பட்டு எண்ணற்ற பயன்களை தருகிறது. அதுபோலத்தான் வங்கிகள். பல்வேறு திட்டங்களை வழங்கும் வங்கிகளால்தான் வாழ்க்கை வளமாகிறது. வங்கிகள் வழங்கும் திட்டங்களில் தொடர் வைப்புத் திட்டம் மிகச்சிறப்பானதாகும்.

காரணம் நடுத்தரக் குடும்பங்கள், அதாவது தின / வார / மாத வருமானமுள்ள நடுத்தரக் குடும்பங்கள் மிகுந்துள்ள நமது நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் சேமிப்பு தொடர் வைப்பாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட காலம் வரை சேமிப்பதே தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டமாகும். சேமித்த தொகை அக்குறிப்பிட்ட கால முதிர்வில் வட்டியுடன் நமக்குப் பெருந்தொகையாகத் திருப்பிக் கிடைப்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சம். சேமிக்க வேண்டிய கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும். கணக்கின் முதிர்வு காலம் (Maturity Period) என்று நிர்ணயித்து பத்து வருடங்கள் வரை சேமிக்கலாம். இன்று பண மதிப்பின் வீழ்ச்சியினால் அனைவரும் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவுக்குத்தான் சேமிக்கின்றனர்.

தொடர் வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.100/-, அதன்பிறகு ரூ.10/- இன் பெருக்கத்தில் பணம் செலுத்தலாம். அதிகபட்ச வைப்புத்தொகை என்று வரம்பில்லை. சில வங்கிகளில் ரூ.100/- இன் பெருக்கத்தில் பணம் செலுத்த அனுமதிக்கின்றனர். கணக்கு துவங்கும் போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் தான் நாம் சேமிக்கும் தொகைக்கு வழங்கப்படும். இடையில் வங்கி வட்டி விகிதங்களை மாற்றினாலும் அப்புதிய வட்டி விகிதம் ஏற்கனவே தொடங்கப்பட்ட வைப்புக் கணக்கிற்குப் பொருந்தாது.

உதாரணமாக இன்று ஒரு வருட காலத்திற்கு 6% சதவிகித வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால் அந்த வட்டி விகிதப்படியே வைப்பு முதிர்வடையும் வரை கணக்கிடப்படும். இடைப்பட்ட காலத்தில் வங்கி ஒரு வருட கால வட்டி விகிதத்தை 5.75 % என்று நிர்ணயித்து 0.25% குறைத்து விட்டால், இந்தப் புதிய வட்டி விகிதம் ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்கிற்குப் பொருந்தாது. மூத்த குடிமக்கள் (Senior Citizen) இந்த வகை சேமிப்பிலும் மற்றவர்களுக்கு வழங்கும் வட்டியுடன் 0.50% அதிக வட்டி பெறலாம். வருங்காலச் செலவுகளுக்காகத் திட்டமிட்டு சிறுகச் சிறுக சேமித்து, பெருந்தொகையாகப் பெற இந்த தொடர்வைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.

ஆவணங்கள்

தொடர்வைப்புக் கணக்கைத் துவக்க நாம் வழங்க வேண்டிய ஆவணங்கள்

(1) தனிநபர் புகைப்படம் (Passport -size Photo) (சில வங்கிகளில் போட்டோ எடுக்கும் வசதி உள்ளது)
(2) தனிநபர் புகைப்பட அடையாள அட்டையின் நகல்
(3) கணக்குத் துவங்குபவரின் இருப்பிடச் சான்று நகல்
(4) பான் கார்டு (அ ) படிவம் எண் 60 / 61

அதே வங்கியில் சேமிப்புக் கணக்கு நடைமுறையில் இருந்தால் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை வழங்க வேண்டாம். தொடர்வைப்புக் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தினையும், பணம் செலுத்தும் சீட்டினையும் (Pay -in- Slip) பூர்த்தி செய்து வங்கி அலுவலரிடம் வழங்கவேண்டும். நாம் தொடர் வைப்பாகச் செலுத்தவேண்டிய தொகை நம் சேமிப்புக் கணக்கிலிருந்து மாற்றவேண்டும் என்றால் நம்மிடம் அதற்கான பணமாற்றப் படிவத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு சேமிப்புக் கணக்கில் பற்றுவைத்து – தொடர்வைப்புக் கணக்கிற்கு மாதத்தவணைத் தொகையை மாற்றுவர். தொடர் வைப்புக்காக ரூ 50000/- மற்றும் அதற்குமேல் நேரடியாக பணமாகச் செலுத்த முடியாது.

வருமானவரிச் சட்டத்தின்படியும், ரிசர்வ் வங்கியின் வங்கிகள் இயக்க நெறிமுறைகளின்படி ரூ. 50000/- மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கின் வழியாகத்தான் செலுத்தமுடியும். இந்தக் கணக்கை தனிநபர் கணக்காகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம்.

சிறப்பம்சங்களும் பிற நிபந்தனைகளும்

இணையவழிச் சேவை மூலம் நாம் ஒவ்வொரு மாதமும் அந்த மாதத் தவணைத் தொகையை (Instalment) சேமிப்புக் கணக்கிலிருந்து தொடர்வைப்புக் கணக்கிற்கு மாற்றலாம். வங்கியே குறிப்பிட்ட நாளில் மாற்றிக் கொள்வதற்கான நிலைக்கட்டளை (Standing Instruction) அனுமதியை கணக்கு துவக்குபவர் வழங்கலாம். தொடர்வைப்பின் முதிர்வு காலத்தில் வட்டியுடன் கிடைக்கும் பெருந்தொகையை, உடனடியாகப் பணம் தேவையில்லையெனில் நிலைவைப்பாக (Fixed Deposit) வங்கியில் சேமிக்க நாம் முன்னரே நிலைக்கட்டளையை (Standing Instruction) எழுத்து மூலம் வழங்க முடியும். இதன் பயன் என்னவெனில் கணக்கின் முதிர்வு காலத்தில் நாம் வங்கிக்குச் சென்று செயல்பட வேண்டியதில்லை. நேரமிச்சம் என்பதோடு, நாம் சேமித்த தொகைக்குத் தொடர்ந்து வட்டி கிடைக்கும். மேலும் வட்டிக்கு வட்டி என்று கூட்டு வட்டியாக பணம் பாதுகாப்பாகப் பெருக வாய்ப்புள்ளது. தொடர் வைப்புக் கணக்கிற்கு பாஸ்புத்தகம் அல்லது வைப்புநிலை அறிக்கை (Statement) வங்கியால் வழங்கப்படுகிறது.

மேலும் சேமித்த பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை அதாவது 90% வரை கடனாகப் பெறலாம். கடனுக்கு நாம் செலுத்தும் வட்டி, வங்கி தொடர்வைப்புக்குத் தரும் வட்டியைவிட 2% அதிகமாகும். நாம் சேமிக்கும் வங்கிகளின் கிளைகளுக்கிடையே தொடர் வைப்புக் கணக்கை நாம் மாற்றிக்கொள்ளலாம். வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள், பணிமாற்றம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இந்த கணக்கு மாற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்வைப்புக் கணக்கைத் துவக்கிய வங்கிக் கிளைக்குச் சென்றுதான் நாம் விரும்பும் கிளைக்குக் கணக்கை மாற்ற விண்ணப்பம் தரவேண்டிய அவசியமில்லை. நாம் மாற்றலாகிச் செல்லும் இடத்தில் இயங்கும் அதே வங்கியின் கிளையில் நமது கணக்கினை மாற்ற விண்ணப்பத்தை வழங்கிச் செயலாக்கம் பெறலாம். இது சேமிப்பு, நிலைவைப்பு ஆகிய கணக்குகளுக்குப் பொருந்தும். நாம் நிலைவைப்பு / தொடர்வைப்புக் கணக்கில் உள்ள பணத்திலிருந்து ஒரு பகுதியைக் கடனாகப் பெற்றிருந்தால் அந்த கடன் கணக்கும் நமது வைப்புக் கணக்குடன் புதிய கிளைக்கு மாற்றப்படும். ஆனால் வீட்டுக்கடன், கல்விக்கடன், தொழிற்கடன், சொத்து அடமானக்கடன், தனிநபர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன் கணக்குகளை வங்கி புதிய இடத்திற்கு மாற்றாது.

வைப்பின் முதிர்வு காலத்திற்கு முன்னரே பணம் எடுக்கும் வசதி உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளலாம். பகுதி, பகுதியாகப் பிரித்தும் பணம் எடுக்கலாம். முதிர்விற்கு முன்னரே பணம் எடுக்கும்போது வைப்புத்தொகை எத்தனை நாட்கள் / மாதங்கள் இருந்ததோ அந்த காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி சதவிகிதத்தில் 0.50% அல்லது 1.00 % அபராத வட்டியாக குறைத்துக் கொண்டு வட்டி கணக்கிட்டு வங்கி வழங்கும். இயன்றவரை வைப்புத் தொகையின் முதிர்வு காலத்தில் பணமெடுப்பதே நலம்.

அந்தந்த தேதிக்குள் தவணைத் தொகையைச் செலுத்தவில்லையென்றால், அபராதக் கட்டணம் (Penalty) என்று வங்கி நிர்ணயித்துள்ள தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சில வங்கிகள் தவணைத் தொகையை நாம் அதிகரித்துச் செலுத்தும் வசதியையும் தருகின்றன.

வாரிசுதாரர் (Nomination) நியமன வசதி

தொடர் வைப்பிற்கும் வாரிசு நியமன (Nomination) வசதி உள்ளது. வாரிசுதாரர் நியமனம் குறித்து முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தாலும் வாசகர்களின் நினைவூட்டலுக்காக மிக முக்கிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

(1) கணக்கின் முதிர்வு காலத்திற்கு முன்போ அல்லது கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கு முன்போ கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால் அந்தப் பணத்தை அதற்குரிய வட்டியுடன் சேர்த்துயாருக்கு வழங்கலாம் என்பதை எழுத்துமூலம் வங்கிக்கு அறிவிப்பதே ‘வாரிசுதாரர் நியமனம்’ ஆகும்.

(2) கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் கணக்கில் உள்ள தொகைக்கு நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் ‘அறங்காவலர் (Trustee)’ என்ற அடிப்படையில் உரிமைகோரி கணக்கிலுள்ள பணத்தை அதற்கான வட்டியுடன் பெறலாம்.

(3) நேரடி குடும்ப வாரிசு (Legal Heir) நியமிக்கப்பட்ட வாரிசுதாரராக (Nominee) இல்லாமல் வேறொருவராக இருப்பின் இறந்தவரின் கணக்கிலுள்ள பணத்தைக்கேட்டு நியமிக்கப்பட்ட வாரிசுதாரரிடம் சட்டப்படி நீதிமன்றம் மூலமாகத்தான் உரிமை கோரலாமேயொழிய வங்கியிடம் கணக்கில் உள்ள தொகையைக் கேட்டுப் பெறமுடியாது.

(4) நியமிக்கப்படும் வாரிசுதாரரின் பெயர், வயது, முகவரி, உறவுமுறை ஆகியவற்றை வங்கிக்கு அதற்கான வாரிசுதாரர் நியமனப் படிவத்தில் (Nomination Form DA 1) எழுதிக் கையெழுத்திட்டுத் தரவேண்டும். கூட்டாக (Joint) தொடங்கி நடைபெறும் கணக்கு என்றால் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும். நியமிக்கப்படும் வாரிசுதாரர் 18 வயது பூர்த்தியாகாதவராக (Minor) இருந்தால் அவருக்கான ஒரு பாதுகாவலர் (Guardian) குறித்த விவரங்களை படிவத்தில் குறிப்பிடவேண்டும். வாரிசுதாரர் அயல் நாட்டில் வசிக்கும் இந்தியராகவும் (Non-Resident Indian – NRI) இருக்கலாம்.

(5) கணக்கு வைத்திருப்பவர் நியமிக்கப்பட்ட வாரிசுதாரரை எந்த நேரமும் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

சில குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தைக்காக மாதா மாதம் சேமிக்கும் பழக்கத்தில் இந்தத் தொடர் வைப்புக் கணக்கைத் தொடங்குகின்றனர். சிலர் தனக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு (Increment ) கிடைக்கும்போது அந்தப் பணத்தை உடனே தனக்கில்லையென்று மாதா மாதம் தொடர் வைப்பாகச் சேமிக்கும் சிறப்பையும் காணலாம். தொடர்வைப்புக்குச் செலுத்தும் தவணைத்தொகையை மாதச் செலவுகளின் பட்டியலில் சேர்த்துக் கணக்கெழுதும் குடும்பங்களையும் பார்க்கலாம்.

அவர்கள் செலவைச் சேமிப்பாக மாற்றுபவர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்தத் தொடர்வைப்புக் கணக்கு குறித்து சொல்லித்தந்து அவர்களிடம் பணம் தந்து மாதா மாதம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் கிடைக்கும் பெருந்தொகை பிள்ளைகளே சம்பாதித்து சேமித்ததுபோல ஒரு மகிழ்வைத்தரும். இந்த இனிமையான பழக்கம் பல தேனீக்களை உருவாக்கி வாழ்க்கையில் சுவையைக் கூட்டும். அன்பை மீட்டும்.

சேமிப்பின் சிறப்பு

வீட்டிலேயே சேமித்தால் முன்னர் சொன்னது மாதிரி ‘உண்டியல் வாயை அகலமாக்கிப் பார்ப்பார் தேதி இருபத்தொண்ணிலே’ என்ற கதைதான் நடக்கும். அதனால்தான் வங்கிகளில் சேமிக்க வேண்டும். நீரை நிலம் சேமிப்பதால்தான் பூமி வளம் பெறுகின்றது. வெப்பத்தைக் கடல் சேமிப்பதால்தான் நீர் ஆவியாகி மேகமாகின்றது. வானம் காற்றைச் சேமித்து மேகங்களைக் குளிர்விப்பதால்தான் மழை பொழிகின்றது. இவ்வாறு ஐம்பூதங்களும் சேமிக்கும்போது நாம் சேமிக்கவேண்டாமா?

சேமிப்பை இயற்கை மட்டுமே நமக்கு உணர்த்துவதில்லை. நமக்குள் இருக்கும் நம் கண்கள் சேமிக்கும் காட்சிகள்தான் நமது அனுபவங்களைப் பெருக்குகின்றன. நம் செவிகள் சேமிக்கும் கருத்துக்கள்தான் நம் அறிவை உயர்த்துகின்றன. நம் மூக்கின் சுவாச இயக்கச் சேமிப்புதான் பிராணவாயு என்னும் வைப்பாகும். வாய் சேமித்து உண்ணும் உணவும், அந்த உணவு கிடைக்கப் பேசும் மொழிகளும் நம் உடம்பை வளர்க்கின்றன.

‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்னும் திருமூலரின் திருமந்திரம் மெய்யின் சேமிப்பே உயிராகிறது என்று விளக்குகிறது. இப்படி ஐம்பொறிகளும் சேமிக்கும்போது நாமும் சேமிக்க வேண்டாமா? சேமிப்புதான் நம் கவலைகளை நீக்கும். கவலைகள் நீங்கி உள்ளம் மகிழ்வானால் நம் உடலும் நலமாகும். நாம் சேமிக்கத் துவங்கிவிட்டோம் வங்கிகளில். வங்கி அந்தச் சேமிப்பைப் பாதுகாக்கும். அதே சமயம் வங்கிகளில் கிடைக்கும் பிற வசதிகள் என்னென்ன… அவற்றை எவ்வாறு நாம் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். பார்ப்போம் அடுத்த இதழ்களில்…Post a Comment

Protected by WP Anti Spam