கர்நாடக இசையினை கடல் கடந்து கொண்டு செல்ல வேண்டும்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 59 Second

பெற்றோர் காட்டிய வழியில் சற்றும் பிறழாமல் இசைத்துறையில் தனக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து பல கோயில்கள் மற்றும் கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீதத்தில் கால் பதித்து சாதித்து வருகிறார் வித்யா ரங்கராஜன்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்தான். அப்பா ரங்கராஜன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா உஷா ரங்கராஜன் இல்லத்தரசி. 50 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் கூட்டுக்குடும்பமாக பெங்களூருக்கு வந்து இங்கேயே செட்டிலாயிட்டோம். என்னுடைய பள்ளி, கல்லூரி மற்றும் நான் பணியாற்றுவது ஏன் கல்யாணமாகி பெங்களூரிலேயே செட்டிலாயிட்டேன். ஒரு ஐ.டி நிறுவனத்தில் நான் இப்போது சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன்’’ என்ற வித்யா சங்கீதத்தில் தனக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘சங்கீதத்தின் மீது எனக்கு ஆறு வயது முதலே ஆர்வம் ஒற்றிக் கொண்டது. காரணம், என் பெற்றோர்கள். எல்லா பெற்றோர்களும் நினைப்பது போல்தான் என் பெற்றோர்களும் யோசிச்சாங்க. படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், கலை சார்ந்த ஒரு டேலன்ட் இருக்கணும். சிலர் நடனம் விரும்புவாங்க. ஒரு சிலர் ஓவியத்தில் ஈடுபாட்டோடு இருப்பாங்க. என்னை பாட்டு மற்றும் நடனம் இரண்டிலுமே சேர்த்துவிட்டாங்க. கர்நாடக சங்கீதத்தோடு பரதநாட்டியமும் கற்றுக் கொண்டேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

பயிற்சி எடுக்க எடுக்க எனக்கு அதன் மேல் தீராத மோகம் ஏற்பட்டதுன்னு தான் சொல்லணும். 21 வருடமாக என்னை கர்நாடக சங்கீதத்தில் மூழ்கடிக்க செய்த என் முதல் குருவான மீரா அம்மாவுக்கு தான் நன்றியை சொல்லணும். அவர் தான் என் குரல் வளத்தை மேலும் மெருகேற்றினார். அவருடைய அந்த உழைப்பு தான் என் சங்கீதத்தை கேட்கும் பலர் முதலில் பாராட்டுவது என் குரல் வளத்தைதான். அவரிடம் தொடர்ந்து பயிற்சி எடுக்க முடியவில்லை என்றாலும், என்னுடைய குரல் வளத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள தற்போது ராவ் மற்றும் சரத் அவர்களிடம் இசையைக் கற்று வருகிறேன்’’ என்று கூறும் வித்யா பள்ளியில் படிக்கும் போது நிறைய இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

‘‘பள்ளியில் பாட்டுப் போட்டின்னு அறிவிச்சா போதும், என்னுடைய பெயர் தான் முதலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். எங்க பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி மட்டுமில்லாமல் மற்ற பள்ளியில் நடைபெறும் போட்டியிலும் என் பள்ளி சார்பா கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கேன். ஒவ்வொரு முறை பரிசு வாங்கும் போதும், குவியும் கைத்தட்டல்களும் தான் என்னை ேமலும் மேலும் இசைத் துறையில் ஒரு இடத்தினை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

பள்ளி, கல்லூரியில் இசைப் போட்டியில் பங்கு பெற்றாலும், கோயில்களில் விசேஷ நாட்கள், பண்டிகை மற்றும் நவராத்திரி போன்ற தினங்களில் பாடியிருக்கேன். அதனைத் தொடர்ந்து மேடையிலும் கச்சேரி செய்திருக்கேன். ஒவ்வொரு முறை கோயில் கருவறையில் நின்று பாடும் போது, மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். பலமுறை இறைவனின் கழுத்தில் சூடியிருக்கும் மலர்கள் கீழே விழும், கடவுளே நேரில் வந்து ஆசிர்வதிப்பது போல இருக்கும். மற்றொரு சம்பவம் சொன்னால் கண்டிப்பாக சிரிப்பீர்கள்.

அந்த சமயத்தில் வீட்டில் அடிக்கடி கரன்ட் கட்டாகும். உடனே வீட்டில் என்னுடைய பெற்றோர் ‘ஒரு பாட்டு பாடேன்… நீ பாடினா கரன்ட் உடனே வந்திடும்’னு சொல்வாங்க. நானும் ஆரம்பத்தில் ரொம்பவே வெகுளியா பாடுவேன். ஆனா, ஆச்சரியம் என்னென்னா நான் பாட ஆரம்பிச்ச சில நிமிடங்களில் கரன்ட் வந்துவிடும்’’ என்று கூறும் வித்யாவிற்கு பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா அவர்கள், ரஞ்சனி, காயத்ரி என கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் பல பாடகர்களை பிடிக்குமாம்.

‘‘தற்போது நான் ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டே இசைத்துறையில் எனக்கான இடத்தையும் தேடி வருகிறேன். வெகு விரைவில் திரைத்துறையில் எனக்கான இடத்தை நிச்சயம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது கர்நாடகா மற்றும் பெங்களூரில் சுற்றியுள்ள கோயில்களில் மட்டுமே இசைக் கச்சேரி செய்து வருகிறேன். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள பல கோயில்கள் மற்றும் மேடைகளில் கச்சேரிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பல இசைக்கலைஞர்கள் நம் பாரம்பரிய கர்நாடக இசையினை உலகம் முழுக்க கொண்டு சென்றிருந்தாலும், என் குரல் மூலமாக அனைவரும் ரசிக்கும்படி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்’’ என்கிறார் வித்யா ரங்கராஜன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)
Next post ‘என் பொண்ணு சுடுகாட்டில் வெட்டியானோடு தண்ணி அடிச்சிட்டு இருக்கா!’ (வீடியோ)