By 10 November 2021 0 Comments

இன-மத தேசியவாதத்திடம் சரண் புகுதல் !! (கட்டுரை)

அயோக்கியனின் கடைசி சரணாலயம் ‘தேசப்பற்று’ என்று சாமுவேல் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், ‘தேசப்பற்று’ என்பது, இன-மத தேசியவாதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு உள்ளமையால், ‘இன-மத தேசியவாதமே’ அயோக்கியர்களின் கடைசி சரணாலயமாக இருப்பதை அவதானிக்கலாம்.

அரசியலில் மற்ற எல்லா அஸ்திரங்களும் பயன்தராத போது, இலங்கை அரசியல்வாதிகள் கையில் எடுக்கிற அஸ்திரம், ‘இன-மத தேசியவாதம்’ ஆகும். ‘குழு’ அல்லது ‘குழு இணைப்பு’ என்று புரிந்து கொள்ளப்படும் குழுநிலைவாதம் (tribalism), மனித உளவியலில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு விடயமாகும்.

மற்ற விலங்குகளைப் போலவே, மனிதர்களும் குழு உணர்வுடைய விலங்குகள். மனிதர்கள் குழுக்களைச் சேர்ந்தவராக இருக்கவே விரும்புகிறார்கள், அதனால்தான், நாங்கள் கழகங்களையும் அணிகளையும் கட்சிகளையும் விரும்புகிறோம்; ஆதரிக்கிறோம்.

மக்கள் ஒரு குழுவுடன் இணைந்தவுடன், அதன் அடையாளங்கள், அவர்களுடன் வலுவாகப் பிணைக்கப்படும். அவர்கள் தனிப்பட்ட முறையில் எதையும் பெறாதபோதும், தங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு நன்மை செய்ய முயல்வார்கள். தமது குழு அல்லாதவர்களை, அந்நியர்களாகவே அடையாளம் காண்பார்கள். அந்நியர்கள் மீதான சந்தேகம், அச்சம், விரோதம், குரோதம் என்பன ஏற்படும். மனிதர்கள் தங்கள் குழுவுக்காகத் தியாகம் செய்வார்கள்; மற்றவர்களைக் கொல்வார்கள்; தாமும் சாவார்கள்.

அனைவருக்கும், எல்லா இடங்களிலும், குழுநிலைவாத உள்ளுணர்வும் தாம் ஒரு குழுவுக்கு உரியவர்கள் என்ற பிரக்ஞையும் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் குழுநிலைவாதச் சிந்தனைதான், அடையாள அரசியலின் அத்திவாரம். ஆறறிவுள்ள அரசியல் விலங்கான மனிதன், தன் ஆறாம் அறிவான பகுத்தறிவைக் கொண்டு, அரசியலைப் பகுத்தறிந்து ஆதரிப்பான் என்பதே எதிர்பார்ப்பாகும். ஆனால், யதார்த்தம் அதற்கு முரணானதாக இருக்கிறது.

இது பற்றிக் கருத்துரைக்கும் அரசியல் விஞ்ஞான ஆய்வாளரான லிலியானா மேஸன், “பெரும்பாலும், கொள்கைக் கருத்தின் அடிப்படையில் எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதை, குடிமக்கள் தேர்ந்தெடுப்பதில்லை; அவர்கள், எந்தக் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் தங்கள் கொள்கைக் கருத்தை மாற்றிக்கொள்கிறார்கள்… குடிமக்கள், தங்கள் அரசியல் மதிப்புகள் உறுதியானவை; நியாயமானவை என்று நம்ப வேண்டும். இருப்பினும், பெரும்பாலும், கொள்கை அணுகுமுறைகள் குழு அடிப்படையில்தான் வளரும்” என்கிறார்.

அதாவது, பொதுவில் ஒரு மனிதனின் குழு அடையாளம், அவனது அரசியல் அடையாளமாகிறது. குறைந்தபட்சம், அவனது அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறது. சமகால அரசியல் எதிர்நோக்கும் பெருஞ்சவால் இதுதான்.
எல்லாக் கட்சிகளும் அரசியல்வாதிகளும், ஏதோ ஒரு வகையில் இந்த அடையாளச் சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து வௌிவருவதுதான் சமகால அரசியல் பெருஞ்சவால். நிற்க!

இலங்கையைப் பொறுத்தவரையில், ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதம்தான் 1950களில் இருந்து, இலங்கை அரசியலை முன்னகர்த்தும் சக்தியாகத் திகழ்கிறது. பௌத்த பிக்கு, பிரதமரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, கைநீட்டிப் பேசும்போது, பண்டாரநாயக்கா கைகட்டி மௌனித்து நிற்கும் படம், ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்தின் பலத்துக்கு மிகப்பெரிய உதாரணம்.

அதேவேளை, ‘சிங்கள-பௌத்த’ மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக, ஆழ வேரூன்றச் செய்யப்பட்டுள்ள ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாத உணர்வு, ஒரு வகையான தாழ்வுச்சிக்கல் மனநிலையிலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

‘எங்கே இந்த நாடு, சிங்கள-பௌத்தர்களுக்கு இல்லாமல் போய்விடுமோ; எங்கே சிங்களமும் பௌத்தமும் அழிந்துவிடுமோ; எங்கே சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை அடக்கி ஒடுக்கி விடுவார்களோ’ என்ற அச்ச மனநிலை இது.

இதனால்தான் வரலாற்றறிஞர் கே.எம்.டி சில்வா, இதனை “சிறுபான்மையிருடைய மனநிலையிலுள்ள பெரும்பான்மை” என்று விளித்தார். ஆனால், இந்த மனநிலைதான், இலங்கையின் அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பான விடயமாக அமைந்துவிட்டது. இந்த மனநிலையின் மொத்தப் பயனையும், அவர்கள் அறுவடை செய்ய விளைகிறார்கள். அதன் விளைவுதான், இங்கு காணப்படும் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியல்.

அரசியலில் ஏதொவொரு பின்னடைவு ஏற்பட்டாலோ, வேறேதும் தவிர்க்க முடியாத பிரச்சினைகள் ஏற்படும் போதோ, மிகப்பலம் வாய்ந்த திசை திருப்பும் சக்தியாக, இலங்கையின் அரசியல்வாதிகள் இன-மத உணர்வுகளைப் பயன்படுத்தி வருவதை அவதானிக்கலாம். எந்த அரசியல் பிரச்சினையையும் சமாளிக்கத்தக்கதோர் பிரம்மாஸ்திரமாக, இன-மத தேசியவாதத்தைப் பார்க்கிறார்கள்.

மேற்சொன்ன குழுநிலைவாத மனநிலையும், குறித்த குழுவுக்குள்ள தாழ்வுச்சிக்கலும், அதன் விளைவான பாதுகாப்பற்ற மனநிலையும்தான் இந்த பிரம்மாஸ்திரத்தின் மூலக்கூறுகள்.

இன்று நாட்டின் பொருளாதாரம் சரிந்துபோயுள்ளது. கடனைத் திருப்பிச்செலுத்த மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே நாடு திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று எரிவாயுவுக்காக மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். எரிபொருளுக்காக மத்திய கிழக்கு நாடுகளிடம் இலங்கை கையேந்தி நிற்கிறது. அந்தக் கையேந்தலுக்கு பலன் கிடைக்காவிட்டால், நாடே ஸ்தம்பிக்கும் நிலை வரலாம்.

இரசாயன உரத்தை ஒரேயடியாகத் தடைசெய்கிறோம் என்ற ‘அடி முட்டாள்’தனமான முடிவை எடுக்க, யார் ஆலோசனை வழங்கியதோ தெரியாது; அதனால் உள்ளூர் விவசாய, பெருந்தோட்ட உற்பத்திகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

ஆகமொத்தத்தில், இலங்கை மக்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. எதிர்காலம் பற்றிய அச்சம், பலரையும் பீடித்துள்ளதன் விளைவுதான், இன்று இளைஞர், யுவதிகள் வௌிநாடு செல்வதற்கான முயற்சியில் அதிகம் இறங்கியிருக்கிறார்கள். கடவுச்சீட்டுப் பெறுவதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசைகள் இதற்குச் சான்று.

எது இல்லாவிட்டாலும், வாழ நாடு இருக்கிறது என்ற ராஜபக்‌ஷர்களின் ‘அடிப்பொடி’களின் வாய்வார்த்தை, இன்று பொய்த்துவிட்டது. யுத்தகாலத்தில் இருந்ததைவிட மிக மோசமான நிலையை, இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது. யுத்தகாலத்தில் கூட, நாட்டைவிட்டு வௌியேறிவிடவேண்டும் என்று எண்ணாதவர்கள் கூட, இன்று நாட்டை விட்டு வௌியேற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எல்லாம் பொறிந்துவீழும் இந்த வேளையில், மீண்டும் ‘இன-மத’ பேரினவாத அஸ்திரம், கையிலெடுக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர, பெரும் ஆதரவளித்த முக்கிய பௌத்த பிக்குகள் சிலரே, ராஜபக்‌ஷர்களினதும் அவர்களின் ஆட்சியினதும் கடும் விமர்சகர்களாக மாறியிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது ராஜபக்‌ஷர்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பாதுகாவலர்களாகத் தம்மை முன்னிறுத்தும் ராஜபக்‌ஷர்களை, முக்கிய பௌத்த பிக்குகள் விமர்சிப்பதும், எதிர்ப்பதும் அவர்களின் அரசியல் அத்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கிற விடயமாகும்.

மேலும், எல்லாம் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிற சமகால சூழலில், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியைக் காப்பாற்றக்கூடிய கடைசி ஆயுதமாக இருப்பது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம்தான். ஆகவே, வேறு எதையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், அதைப் பாதுகாப்பது அவர்களின் அரசியல் இருப்புக்கும், தப்பிப்பிழைத்தலுக்கும் அவசியமான ஒன்றாகிறது.

இதன் விளைவாகத்தான், தமக்குப் பெரும் ஆதரவாக இருந்து அதன் பின்னர் அண்மைக் காலமாகத் தம்மைக் கடுமையாக விமர்சித்த, முக்கிய பௌத்த பிக்கு ஒருவரை மகிழ்விக்கும் விதமாக, அவரைக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், தமக்கு பெரும் ஆதரவாக இருந்த இன்னொரு பௌத்த பிக்குவை, களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் நியமித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறம் நடக்க, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவும் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிக்குவுமான ஞானசாரவை, ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ ஆக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் நியமித்திருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாத அரசியல் விளையாட்டின் அடுத்த ‘இன்னிங்ஸ்’ஸாகவே, இவை பார்க்கப்பட வேண்டும். எல்லாம் தோற்கிறபோது, தம்மைக் காப்பாற்றும் அருமருந்தாக ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை ராஜபக்‌ஷர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், ராஜபக்‌ஷர்கள் ஒன்றை மறக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. இனமும் மதமும் குழுநிலைமனநிலையும், அரசியலைப் பொறுத்தவரையில் மிகப்பலமான ஆயுதங்கள்தான். ஆனால், பசி, பட்டினி ஆகியவற்றைவிட அவை பலமான ஆயுதம் அல்ல!

பொருளாதாரம் வீழ்ந்து, மக்கள் உணவுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் காத்துக்கிடக்கும் போது, தமது பிள்ளைகள் துன்புறுவதைப் பார்க்கும் போது, எந்த இனவாதமும் மதவாதமும் குழுநிலையுணர்வும், அந்த வேதனையை மறக்கடிக்கச் செய்யாது. அந்த அடிப்படையில், இந்த முறை, இந்த ‘இன-மத’ தேசியவாதத்திடமான சரணாகதி, ராஜபக்‌ஷர்களுக்குப் பயனிக்காது என்றே தோன்றுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam