ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 25 Second

மாடர்ன் உலகம் என்றுமே அழகு மற்றும் உண்மை தன்மையை சுற்றியே பிணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டு விஷயங்களும் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களால் என்றுமே வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் எப்போதும் ஃபேஷன் மட்டுமே ஒருவர் அணியும் உடை மூலம் அவரின் அழகு பிரதிபலிப்பது மட்டுமில்லாமல், அவரின் கலாச்சாரம், மனநிலை, ஆளுமை மற்றும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி வருகிறது என்பதில் சந்தேகமில்லை என்று சொல்லலாம். ஃபேஷனுக்கு மட்டும் தான் அழகியலோடு இன்றைய யதார்த்த நிலையினை சேர்ந்து இணைக்கும் சக்தியுண்டு. இதை ‘கலையின் யதார்த்த வடிவம்’ என்று குறிப்பிடலாம்.

பல்வேறு கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஃபேஷன் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பல தீவிர மாற்றங்களை சந்தித்துள்ளது. மேலும் அதற்கு ஏற்ப தன்னுடைய நிலையையும் மாற்றி அமைத்துக் கொண்டுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியால் ஃபேஷன் உலகம் பல்வேறு டிசைன்கள், ஸ்டைல் மற்றும் டிரண்டுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஏற்படும் மாற்றத்தினால், அந்தந்த காலத்தில் உள்ள தலைமுறையினரின் பண்புகளை ஃபேஷன் மூலமாக வெளிப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக கருதப்படுவது குழுந்தைகளுக்கான உடைகள். இவையும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஃபேஷன் உலகில் குழந்தைகளுக்கான உடைகளில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஃபான்ட் உடைகள் என்றால் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகள். சமூகத்தில் நிலவும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் குழந்தைகளுக்கான உடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உடைகள் மூலம் ஒருவர் எந்த சமூக இனத்தை சேர்ந்தவர் என்று கண்டறிவது மட்டுமில்லாமல் அவர்கள் எந்த வர்கத்தை சேர்ந்தவர்கள், பாலினம் என பல்வேறு வேறுபாடுகள் மூலம் வகைப்படுத்தலாம். பச்சிளம் குழந்தைகளின் உடைகளின் அடுத்த நிலை குழந்தைகளின் உடைகள். இன்று சமூகத்தில் மற்ற பொருட்கள் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளதோ அதேபோல் குழந்தைகளின் உடைகளும் பெரிய மாற்றத்தை கண்டுள்ளதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளின் பாலினங்களைக் கொண்டு அவர்கள் உடையின் நிறங்கள் பிரிக்கப்பட்டன. நிறங்கள் மூலம் ஆண், பெண் என அவர்களின் உடைகளில் மாறுபாடு காண்பிக்க முக்கிய காரணம், பழங்காலத்தில் சிறுவர்களும் பெண்கள் போல் உடை அணிந்திருந்தார்கள். இவர்கள் ஆண் குழந்தைகளா அல்லது பெண் குழந்தைகளா என்று தெரிந்து கொள்ள உடைகளை நிறங்கள் மூலம் வேறுபடுத்தி வந்தனர். பெண் குழந்தைகளின் உடைகள் அனைத்தும் பிங்க் நிறத்திலும் ஆண் குழந்தைகள் உடைகள் நீல நிறத்திலும் வடிவமைக்கப்பட்டன. இந்த நிற ஃபார்லா இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்கள் இன்றைய டிசைனர்கள்.

பழங்கால குழந்தைகளின் உடைகளின் புகைப்படம் மற்றும் ஓவியங்கள் மூலமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு அவர்கள் ஆண் அல்லது பெண் குழந்தைகளா என்று பாகுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆடைகள் மட்டுமே பாலினத்தை பாகுபாடு ஏற்படுத்தாது என்பதால் தலைமுடி அலங்காரமும் அவர்களின் தோற்றத்தினை தீர்மானிக்க உதவுகிறது. பெண் குழந்தைகள் அழகான ஆடைகளும் நீண்ட தலைமுடியும் கொண்டிருந்தனர். ஆண் குழந்தைகள் ஆடைகளுக்கு கீழ் பேன்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவர்கள் தலைமுடியையும் கத்தரித்துக் கொண்டனர். இருப்பினும் இன்றைய காலத்தின் பரிணாம மாற்றத்தினால் பெண்களும் ஆண்களைப் போல் பேண்ட் அணிய பழகிக் கொண்டுள்ளனர்.

ஆனால் சிறுவர்கள் பெண்களின் உடைகளை அணியும் மனப்பக்குவத்திற்கு இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் 19ம் நூற்றாண்டில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் இருவரும் ஒரே மாதிரி தான் உடைகளை அணிந்துவந்தனர். இருப்பினும் அந்த காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகள் போல் பேன்ட் அணியவில்லை என்றாலும், அவர்களின் அணியும் உடையின் ஸ்டைல் மற்றும் டிசைன்களில் எந்த வித மாற்றமும் இருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவு வரை பெண் குழந்தைகள் கவுன், ஸ்மாக்ஸ், பான்டாலெட்ஸ் மற்றும் பின்னபோர் உடைகளை தான் அணிந்து வந்தனர்.

எல்லா சமூகத்திலும் குழந்தை பருவத்தினை ஒரு குறிப்பிட்ட வயது வரை வரையறுக்கப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அவர்கள் பருவம் அடையும் வரை அவர்களின் வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்களின் திறன் மற்றும் வரம்புகள், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சமூகத்தில் எதிர்பார்ப்புகள் உள்ளன. அதன் படி ஒவ்வொரு சகாப்தத்திலும் அவர்களின் தோற்றத்தில் ஆடை பெரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. குழந்தைகளின் ஆடைகள் குறித்த வரலாற்றினை மேலோட்டமாக பார்த்தால், அவர்கள் வளர்ப்பு முறைகள், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குழந்தை மற்றும் பெரியவர்கள் அணியும் உடையில் உள்ள வித்தியாசங்கள், ஒற்றுமைகளை குறித்து நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடியும்.

20ம் நூற்றாண்டு வரை பச்சிளம் குழந்தைகள் முதல் சிறிய குழந்தைகள் வரை அவர்களின் உடைகளில் தனித்துவமான பொதுவான ஸ்டைல்களை பார்க்க முடியும். குறிப்பாக இவர்களின் உடையில் பாலினம் குறித்த வேறுபாடுகளை நாம் பார்க்க முடியாது. குழந்தைகளின் ஆடைகளில் இந்த தோற்றம் 16 நூற்றாண்டில் உருவானது என்று வரலாற்றில் குறிப்பிட்டுள்ளது. அந்த காலத்தில் ஐரோப்பிய ஆண்கள் மற்றும் வயது அதிகமான சிறுவர்களின் பேன்டுகள் தொடைப் பகுதியில் தளர்வாகவும், கால்களை இறுக்கி பிடிக்கக்கூடிய பேன்டினை அணிந்தார்கள். இதற்கு முன்பு ஆண் பெண் இருவருமே கவுன் மற்றும் டியூனிக் போன்ற உடையினை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஆண்கள் பைர்பர்கேட் உடையினை அணிய ஆரம்பித்த பிறகு தான் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் மிகவும் தெளிவாக தென்பட ஆரம்பித்தன. பிரீச்சஸ் என்ற உடை ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதே சமயம் பெண் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்கர்ட் வகை உடையினை அணிந்து வந்தனர். நவீன கண்களுக்கு பழங்காலத்தில் உள்ள சிறுவர்கள் ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்திருந்தாலும், அவர்கள் இந்த உடையில் பெண்களைப் போல் தோற்றமளித்தார்கள். ஆனால் சமகாலத்தில் சிறுவர், சிறுமியர் இருவரும் சிறிய குழந்தைகளுக்கு பொருத்தமான ஒரே மாதிரி தோற்றமளிக்கும் உடையினை அணிந்து வந்தனர்.

சமூகத்தின் தேவைகளுக்கு இணங்க ஃபேஷன் துறையிலும் அனைத்து வயதினருக்கும் சமமான கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இருப்பினும் கடந்த காலத்தில் ஆடை உற்பத்தியாளர்கள் குழந்தைகளுக்கான உடைகள் தயாரிப்புகள் புறக்கணிக்கப்படாலும் இன்று ஃபேஷன் துறையில் குழந்தைகளின் உடைகளுக்கு என தனிப்பட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வயதிற்கு ஏற்ப மாறுபட்ட ஆடைகளை அணிந்து மகிழ்கிறார்கள். கடந்த சில வருடமாகத்தான் குழந்தைகளுக்கான உடைகள் பிரபலம் அடைந்து வருகிறது.

குழந்தைகளுக்கான ஆடை தொழில் பிரபலமடைந்து வருவதால், ஆடையை வடிவமைப்பாளர்கள் பிறந்த குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை அவர்களுக்கான ஆடை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்களுக்கான டிசைன்களும் பன்முகப்படுத்தப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கான உடைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது. பெரிய சூப்பர்மார்க்கெட்களிலும் குழந்தைகளின் உடைகளுக்கான பிரத்யேக செக்‌ஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துணிக்கடைகள் ஒரு பகுதி குழந்தைகளுக்கான உடைகள் என பிரித்திருப்பது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான தனிப்பட்ட கடைகளும் இப்போது மார்க்ெகட்டில் பிரபலமடைந்து வருகிறது.

இவர்களுக்காகவே கண்களை கவரும் வண்ணங்களில் உடைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நிறம் மற்றும் டிசைன்கள் கொண்டு வடிவமிக்கப்பட்ட உடைகளை இப்போது குழந்தைகள் கூட விரும்புவதில்லை. அவர்கள் தங்களுக்கு பிடித்த நிறம் மற்றும் டிசைன்களையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அதனால் அவர்களின் மனநிலை அறிந்து அந்தந்த டிரண்டிற்கு ஏற்ப உடைகளை டிசைனர்கள் வடிவமைத்து வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்களின் கற்பனை திறனுக்கு தீனி போடுவது மட்டுமில்லாமல் அவர்கள் உடைகளிலும் ஒரு அழகியல் உணர்வினை கொடுக்க முடிகிறது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள், அவர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோ மற்றும் சிண்ட்ரெல்லா, ஸ்னோவயிட் போன்ற கதாப்பாத்திரங்கள் மட்டுமில்லாமல் அதிலும் பலவிதமான அணிகலன்களை புகுத்தி டிசைன் செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மனநிலை என்ன என்பதை இன்றைய டிசைனர்கள் நன்கு தெரிந்து கொண்டு அவர்களின் அனைத்து தேவை மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

ஃபேஷன் துறையினர் குழந்தைகளுக்காகவே கண்கவர் உடைகளை வடிவமைத்து வருகிறார்கள். பல டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும் உடைகளைப் பார்த்து ஒரு நிமிடம் குழந்தைகள் கூட பிரமிப்பாகிவிடுகிறார்கள். எதை எடுப்பது எதை விடுப்பது என்று அவர்களே குழம்பும் வகையில் குழந்தைகளுக்கான இன்றைய ஆடை உலகம் பரந்த விரிந்துள்ளது. மேலும் பெரியவர்கள் போல் இவர்களும் அவர்களுக்கு பிடித்த உடையினை பொறுமையாக பார்த்து தேர்வு செய்யவே விரும்புகிறார்கள். பெற்றொர்கள் ஒரு உடையினை தேர்வு செய்தாலும், அது அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு குழந்தைகளுக்கான ஆடை உலகம் பல வித டிசைன்கள் மற்றும் வண்ணங்களுடன் உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் குழந்தைகள் எப்படி பொம்மைக் கடைகளை வெறித்து பார்க்கிறார்களோ அதேபோல் தான் தங்களுக்கான ஆடைகளையும் அவர்கள் பார்க்கிறார்கள். இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு ஆடைகள் மீதான அவர்களுக்கு ஏற்படும் அழகியல் உணர்வு குறித்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

ஆடைகள் பொறுத்தவரை விலை அதிகமாக இருந்தால் தான் அதன் தரமும் நன்றாக இருக்கும் என்ற கருத்து நிலவி வந்தது. இது குழந்தைகளின் உடைக்கும் பொருந்தும். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் ஆடைகளின் விலை எல்லாரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதனால் தரமான மற்றும் விரும்பும் பொருத்தமான உடைகளைக் கூட குறைந்த விலையில் நம்மால் பெற முடிகிறது. மேலும் குழந்தைகளுக்கான ஆடைகளின் விலைக் குறைய பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவை கணிசமான ஆடை இறக்குமதி, சந்தையில் பல தள்ளுபடி கடைகள் தோன்றுவது மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் துணிக்கடைகளுக்கு இடையே சமமான விநியோகம் போன்ற முக்கிய காரணங்களால் குழந்தைகளின் உடைகளின் விலை குறைந்துள்ளது.

பொதுவாக குழந்தைகளுக்கான உடைகள் என்றால் நாம் கடைகளில் போய் வாங்குவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஆன்லைன் கடைகளும் குழந்தைகளுக்கான ஆடை விற்பனையில் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. கடைகளில் விற்கப்படும் ஆடைகளை விட ஆன்லைனில் விற்கப்படும் உடைகளின் விலை மிகவும் குறைவு என்பதால் மக்களின் கவனம் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறியுள்ளது. அதே சமயம் வித்தியாசமான டிசைன்கள் மற்றும் தரத்திலும் எந்த மாற்றம் இல்லை என்பதால், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் ஆன்லைனில் உடைகளை வாங்க முன்வந்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருவது மட்டுமில்லாமல், ஆடை சரியாக இல்லை என்றால், அதை மீண்டும் பெற்றுக் கொண்டு அவர்களே அதனை நம்முடைய சரியான அளவிற்கு மாற்றியும் கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் விட நூற்றுக்கணக்கான உடைகள் மற்றும் பல வித டிசைன்களை நாம் பார்த்து தேர்வு செய்யவும் எளிதாக இருக்கிறது.

நேரடியாக ஷாப்பிங் போகும் போது உடை வாங்க ஒரு கடை, அணிகலனுக்கு ஒரு கடை, ஷுவிற்கு ஒரு கடைன்னு பல கடைகள் ஏறிச் சென்று வாங்க வேண்டும். ஆன்லைனில் அப்படி இல்லை. இருக்கும் இடத்திலேயே இவை அனைத்தும் நம் விருப்பம், நிறம் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப வாங்கலாம். இதனால் நேரம் மற்றும் உழைப்பு அனைத்தும் மிச்சமாகும். வரும் இதழில் குழந்தைகளின் உடைகள் எவ்வாறு பரிணாம மாற்றம் அடைந்துள்ளது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)
Next post வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)