‘ஷ்யாம் சிங்கா ராய்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 34 Second

ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டின், கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்சில் தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பார்க்கக் கிடைக்கிறது. ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர் உள்ளிட்டவர்களின் சிறப்பான கலைநயத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

திரைத்துறையில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என ஒரு குறும்படத்தை இயக்குகிறார் வாசு (நானி). அந்த குறும்படத்தின் கதாநாயகியாகக் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. குறும்படம் முடிந்ததும், தயாரிப்பாளரை அணுகும் நானிக்கு சினிமா இயக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, அதை பாலிவுட்டில் மறு ஆக்கம் செய்யும் அளவு வெற்றியின் உச்சத்தை அடைகிறார் நானி. ஆனால், நானி இயக்கிய திரைப்படங்கள் அவரது திரைக்கதை அனைத்துமே வங்காளத்தைச் சேர்ந்த ஷ்யாம் சிங்கா ராய் எனும் புரட்சி எழுத்தாளரின் நாவலை அப்படியே தழுவி உருவாக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஷ்யாம் சிங்கா ராயின் அண்ணன் மகன்கள் நானி மீது வழக்கு தொடர்ந்து அவரை சிறையில் அடைக்கின்றனர்.

மடோனா செபஸ்டின் நானியின் வழக்கறிஞராகச் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினாலும், அனைவரையும் கவரும் நடிப்பின் மூலம் மிளிர்கிறார். சாய் பல்லவி, பெங்காலில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு நடனமாட வரும் தேவதாசி மைத்திரேயியாக நடிப்பிலும் நடனத்திலும் நம்மை வசீகரிக்கிறார். நானி, ஷ்யாம் சிங்காராய் கதாபாத்திரத்தில் பெங்காலி-தெலுங்கு பெற்றோருக்குப் பிறந்த எழுத்தாளராகவும், பாகுபாடுகளை எதிர்க்கும் புரட்சியாளராகவும் கம்பீர நடிப்பில் ஆழமாக மனதில் நிற்கிறார்.

ஷ்யாம் சிங்கா ராயின் வாழ்க்கையில் சாய் பல்லவி அறிமுகமானதும் இருவரின் வாழ்க்கையுமே புரட்டிப்போடப்படுகிறது. சாய் பல்லவி பெற்றோர்களால் கோவிலுக்குத் தத்து கொடுக்கப்பட்ட தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷ்யாம் சிங்கா ராய் வசிக்கும் ஊரில் நவராத்திரியை முன்னிட்டு அங்கிருக்கும் ஒரு கோவிலில் ஒன்பது நாட்களும் நடனமாடத் தேவதாசி குழுவினருடன் சாய் பல்லவி அங்கு வருகிறார். தேவதாசிகள் வாழும் அந்த கோவிலில் குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலதரப்பட்ட பெண்கள் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடவுளின் மனைவிகளாக கருதப்பட்டு கடவுளுக்கு நிகரான மரியாதையை மக்களிடமிருந்து பெறுகின்றனர்.

ஆனால் கோவிலுக்குள்ளோ அங்கிருந்து வெளியே செல்ல முடியாமலும் யாரிடமும் பேச முடியாமலும் ஒரு அடிமையாகவே வாழ்கின்றனர். இது தவிரத் தேவதாசிகள் அனைவரது கழுத்திலும் அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதை நினைவு கூறும் விதத்தில் ஒரே மாதிரியான தாலியைச் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அணிந்திருக்கின்றனர்.இதுவரை கோவிலைவிட்டு வெளியே வராத மைத்திரேயி, ஷ்யாம் சிங்கா ராய் அழைத்ததும் வெளியே வருகிறாள். நவராத்திரியின் கடைசி நாளான ஒன்பதாவது நாள், முதல் முறையாக மைத்திரேயி, கோவிலுக்கு வெளியே பார்வையாளர்கள் யாரும் இல்லாமல், தனக்காக மட்டுமே நடனமாடுகிறாள். அதனை அவள் தன் சுதந்திரத்தை ருசிக்கும் காட்சியாக இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.

70களின் நானி-சாய் பல்லவியின் காதல் கதை, பெங்காலி பின்னணியில் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் சாய் பல்லவியின் கதாபாத்திரங்களுக்கு இருந்த பலமான திரைக்கதை, வாசு-கீர்த்தி பாத்திரத்திற்கு இல்லை. அந்த நவீன காதல் கதை ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாகவே நகர்கிறது. 70களின் காதல் கதையைக் கூட்டி நவீன கதையை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. புரட்சி எழுத்தாளராகக் கம்பீர பாத்திரத்திலும், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குநராகவும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நானி கச்சிதமாக நடித்துள்ளார்.

ஏற்கனவே ‘நான் ஈ’ திரைப்படத்தில் ஈயாக மறுபிறவியில் வில்லனை எதிர்க்கும் நானி, இத்திரைப்படத்தில் தன் முன் ஜென்ம நினைவுகளைப் பெறுகிறார். தேவதாசி முறைக்கு எதிராகவும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராகவும் பேசும் இக்கதையில் மீண்டும் மறு ஜென்மம் போன்ற கதை பாணியை அமைத்து, அதை நீதிமன்றத்தில் வாதிடுவது முரணாகவே அமைந்துள்ளது.

ஒரு தோட்டா ஒருத்தனிடம் மட்டுமே வேலை செய்யும். ஆனால் ஒரு வார்த்தை லட்சக்கணக்கானோரிடம் புரட்சியை உருவாக்கும் எனக் கூறும் நானி, எப்போதும் போல கதாநாயகியைக் காக்கும் ஹீரோவாக, அனைவரும் கணிக்கக்கூடிய கதைக்களமாகவே இருந்தாலும் நல்ல கமர்ஷியல் படத்துடன் அதில் கொஞ்சம் மெசேஜ் என அளவான திரைக்கதையுடன் அமைந்திருக்கிறது ஷ்யாம் சிங்கா ராய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)
Next post முதியவர்களையும் காதலியுங்கள்! (மகளிர் பக்கம்)