சிறுகதை -நெருஞ்சி முள்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 56 Second

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்ற குறளுக்கு வகுப்பில் பொழிப்புரை சொல்லிக் கொண்டிருந்தாள் சிவகாமி. கண்களின் ஓரம் ஈரம் எட்டிப் பார்த்தது. துளிர்த்த நீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு பாடத்தை தொடர்ந்தாள். பிள்ளைகள் பாடத்தில் கவனமாக இருக்க , பள்ளியின் நீண்ட மணி ஒலிக்க, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வகுப்பை விட்டு வெளியே வந்தாள்… ஆங்காங்கே பேச்சும் கும்மாளமுமாக சத்தமாக சிரித்தபடி மாணவிகள் கூட்டம்கூட்டமாக தங்கள் கூடு திரும்ப ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.

மறந்து போன தன் மகிழ்ச்சியை பற்றி யோசித்தபடி மெதுவாக ஸ்டாப் ரூமை அடைந்து, கழுவி கவிழ்க்கப்பட்டிருந்த டிபன்பாக்ஸை ஹாண்ட் பேக்கில் போட்டபடி இருந்தவளை.. இன்னும் கிளம்பலையா? என்ற சக ஆசிரியை நித்யாவின் குரல் கலைத்தது.போகணும்டா!… என்றாள் வெறுமையுடன்.சரி..நான் கிளம்புறேன் அவர் வந்துட்டாரு..ரொம்ப நேரமா காத்திருக்கார் வெளியே என்று அவசரமாக ஓடும் நித்யாவை ஆற்றாமையாக பார்த்து தலையசைத்தபடி நாற்காலியில் ‘தொப்பென’ சரிந்தாள்.

க்கும்!.. சீக்கிரம் போய் மட்டும் என்ன பண்ணிட போறேன் என மனதுக்குள் நினைத்து.. இப்போதே இப்படி என்றால்.. ரிடையர் ஆன பிறகு என்ன செய்ய போகிறோமோ? என்ற நினைப்பே கலக்கத்தை தந்தது. இன்னும் சில வருடங்கள் தான் இருக்கிறது.. அதன் பிறகு …என்ற கேள்விக்குறி மனதை சுட்டது சிவகாமிக்கு. கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தாள்…சட்டென ஒரு வெறுமை சூழ்ந்தது அவள் மனதை போலவே.. மித்ராவும் மிதுனும் இன்னமும் வந்திருக்கவில்லை. கணவர் மதிமாறனும் இரவு ஒன்பது மணிக்கு முன்பு வீடு திரும்புவதில்லை.

அடுப்பை பற்ற வைத்து பாலை சூடாக்கி காபியை கலக்கும் போது..வெளியே ‘குக்கூ’ வென காலிங்பெல் ஓசை.கதவை திறந்தால் வெளியே மதிமாறன்..எதுவுமே பேசாமல் நகர்ந்தவள்.. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டார்..ஏதாவது உடல்நலமில்லையா? என துடித்த பாழும்மனதை ஒதுக்கிவிட்டு மௌனமாக காபியை இருவருக்குமாக கலந்து, டைனிங்டேபிள் மேல் ஒரு டம்ளரை வைத்து விட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டாள். இன்று நேற்றல்ல ஏறக்குறைய இருபது வருடங்களாக நத்தை தன் கூட்டுக்குள் சுருங்கி கொள்வதை போல தன் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் சிவகாமி.

பிள்ளைகளுக்காக எப்போதாவது பேசுவதோடு சரி..மற்றபடி அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்வது என்பது அந்த வீட்டில் எழுதப்படாத ஒப்பந்தம்.
மித்ரா..‘‘ஞாயித்துகெழமை உன்னை பெண் பார்க்க வராங்க….ரெடியாயிரு!’’என்றார் மதிமாறன் பொதுவாக..

அப்பா..அதுக்குள்ள என்ன அவசரம்!… கொஞ்ச நாள் போகட்டுமே என செல்லமாக சிணுங்கினாள்.

இப்ப பண்ணாம எப்ப பண்றதாம்..கிழவி வயசுலையா? காபி மட்டும் வீட்ல போட சொல்லு போதும்….ஸ்வீட் காரம் வெளிய வாங்கிக்கலாம் என்றார். ‘‘அதெல்லாம் சரிப்பா! மாப்பிள்ளை என்ன செய்யுறார்” என்று பெரிய மனுஷன் தோரணையுடன் இடைமறித்தான் மிதுன்.இன்போசிஸ்ல வேலை பாக்குறார்..நல்ல வேலை, சம்பளம், நல்ல குடும்பம்…என்று பொதுப்படையாக சொன்னவரை நக்கலுடன் பார்த்த சிவகாமி..

நல்லா விசாரிக்க சொல்றா! மிதுன்… பல வருஷம் பழகினவனுங்களே பஞ்சமா பாதகம்எல்லாம் பண்ணுறாங்க..இது வேற தெரியாத புது இடமாச்சே என்று குத்தலாக பேசிய சிவகாமியை உற்று பார்த்தபடி எதுவுமே பேசாமல் உள்ளே சென்றார் மதிமாறன்.

ஏன்மா? என முறைத்தான் மிதுன்.மிதுனுக்கும், மித்ராவுக்கும் முதலிலிருந்தே வீட்டு சூழல் ஓரளவு பழகிவிட்டது. இந்த அம்மா ஏன் இப்படியிருக்கிறாள் என கோபமாக வந்தது. எதற்கெடுத்தாலுமே அமிலத்தை தூக்கி வீசுகிறாளே. அப்பா எதுவுமே சொல்வதில்லை.. ரொம்ப தான் இடம் கொடுக்கிறார்.. என மித்ராவும் மிதுனும் மனதுக்குள் நினைத்துக் கொண்டனர். ஆனாலும் உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்திம்மா!…எப்பபாரு குதர்க்கமாவே பேசுற!..அப்பா பாவம் எப்படி தான் உங்கிட்ட இவ்வளவு வருஷமா பொறுமையா குப்பை கொட்டுறாரோ? என ஆதங்கப்பட்டாள் மித்ரா..

மித்ரா சொல்வது உண்மைதான். வாயை திறந்தாலே நெருப்பு கங்கு போல வெளியே வருகின்றது வார்த்தைகள். அது எதிராளியை சுட்டு பொசுக்குவதை அவள் அறியாமல் இல்லை. ஆனாலும் மாற்றிக் கொள்ள இயலவில்லை. ஒரு காலத்தில் வாயை திறந்து இரண்டு வார்த்தை பேசமாட்டாளா என பலர் ஏங்கியதுண்டு..அந்த அமைதி விரும்பியான அன்பும் கருணையுமான சிவகாமி எங்கே போனாள்? சூழலும் நிகழ்வும் அவளை எப்படியெல்லாம் சிதறடித்திருக்கிறது என யோசித்தவளுக்கு தன் மீதான கழிவிரக்கமே பற்றிக் கொண்டது. மித்ராவிற்கு இந்த இடம் தகைந்து விட்டது.. வீடெங்கும் கல்யாண களை. தடபுடலாய் திருமண ஏற்பாடுகள். ஒரே செல்ல மகள் ஆயிற்றே.

‘‘கல்யாணத்திற்கு லோன் போட்ருக்கேன். ஒரு வாரத்தில் வந்துரும்’’ என பொதுப்படையாக சொல்லியவள்… முக்கால்வாசி செலவை நான் பாத்துடுவேன்!மீதியாவது ஏதாவது ஏற்பாடு பண்ண சொல்லுறா உங்கப்பாவை என குத்தினாள் சிவகாமி.கவர்மென்ட் வேலைன்னு ஆணவத்துல ஆடாதம்மா!. அப்பாவும் தான் செய்வார்…தனியார் வேலைன்னாலும் பலவருஷ சர்வீஸ் என முகம் சுளித்தான் மிதுன்.‘சே’ எப்பதான் வார்த்தைகளில் காயப்படுத்துறதை நிறுத்தப்போறீயோ? என சலித்தவனை பொருட்படுத்தாமல் கடந்து போனாள்.

பல வருட தவம் மித்ராவின் திருமணம்.. இதற்காகத்தானே இன்றுவரை இவ்வளவு பொறுமை காத்தாள். இன்று கடமையை செய்த நிறைவு மனதினுள்.. மீதியான தாம்பூல பைகளை உள்ளே எடுத்து வைத்து கொண்டிருந்தவளிடம்.. ‘அம்மா’ என அழைத்தபடி வந்த மித்ராவை கண்டு நிமிர்ந்தவளை இறுக அணைத்த மித்ரா… அம்மா ஒன்று சொன்னா கோபிக்க மாட்டியே? என்று தயங்கியவளை பார்த்து சிரித்தபடி இல்லையென தலையசைத்தாள் சிவகாமி.

அம்மா..நானும் மாமியார் வீட்டுக்கு போக போறேன். இந்த வருடம் மிதுனும் மேற் படிப்புக்காக வெளிநாடு போகப்போறான். இனி வீட்ல நீங்க ரெண்டுபேர் மட்டும் தானே! அப்பா மட்டும் தனியா பீல் பண்ணுவாரும்மா. இனிமேலாவது வார்த்தைகளை அள்ளி வீசாம..அவரை அன்பா பாத்துக்கோம்மா!.. உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்!..என்ற மகளை வாஞ்சையுடன் நோக்கி வெறுமையாக தலையசைத்தாள்.அவருக்கென்ன நல்லாதானே இருக்கார்..நான் பாத்துக்கறேன். கவலைப்படாம நீ உன் வாழ்க்கையை பாருங்க பெரிய மனுஷியே! என
மித்ராவின் மூக்கை செல்லமாக நிமிண்டினாள்.

அங்கிருந்து நகர்ந்து வெளியே வாசலுக்கு வந்த சிவகாமியின் கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது. மனதிலிருக்கும் கசடுகள் வாய்வழியாக வந்து விடுகிறதே எவ்வளவு அடக்கியும்… என்ன செய்ய என மனது துடித்தது. வெளியே சில்லென வீசிய காற்று வெளி புழுக்கத்தை துடைத்தெறிந்தாலும் உள்ளிருக்கும் மனப்புழுக்கத்தை யார் துடைப்பது என உள்ளுக்குள் குமைந்தவளின் அருகே வந்து தோளை தொட்டாள் நித்யா.இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி இருக்க போற சிவகாமி? நீ நடந்ததை மறந்து தான் ஆகணும்.. உன் மன நிம்மதிக்காகவாவது என ஆதரவாக தலையை கோதினாள்.

மறப்பதா? எதை மறப்பது? அப்பா, அம்மாவை, உறவினர்களை எதிர்த்து மதிமாறனை காதலித்து கரம் பிடித்ததையா?சரியான நிரந்தர வேலை அமையாத மதிமாறனுக்காக ஓடி ஓடி உழைத்து குடும்பத்தை காப்பாற்றியதையா?குழந்தைகளை பெற்று போட்டு பச்சை உடம்புடன் வேலைக்கு சென்று உழைத்து கொட்டியதையா?இரண்டாவது டெலிவரிக்கு பிறகு ஆபரேஷன் செய்து தளர்ந்த உடலுடன் துணைக்கும் ஆளில்லாமல் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் ஓடியோடி உழைக்க ….குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு வைத்த வேலைக்காரியுடன் கூட்டு சேர்ந்து தனக்கு துரோகம் இழைத்ததையா? எதை மறக்க சொல்கிறாள் இவள்? என மனது ஓலமிட்டது.

சிவகாமி..இதை மறந்து தான் ஆகணும்..வேறவழியில்லை…. இதனால் உனக்கும் எவ்ளோ மனஉளைச்சல் பாரு என சொல்லியவளை மறித்து… நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டிய அந்த நாட்கள் மீண்டும் நினைவில் வந்து போனது. தான் ஆசையாய் கட்டிய கனவுகோட்டை சுக்குநூறாய் நொறுங்கி விழுந்த தினம். மதிமாறன் இவ்வளவு மதிகெட்ட மாறனாக இருப்பான் என கனவிலேயும் நினைக்கவில்லையே அவள். எவ்வளவு நம்பினாள். அந்த நம்பிக்கைக்கு கிடைத்த சம்மட்டி அடி. எப்பேர்ப்பட்ட துரோகம் அது..

நினைக்க நினைக்க உடலெங்கும் ஒரு தகிப்பு பரவியது. ஆமா நித்யா!…வெளியே யாருகிட்டயும் சொல்லமுடியாம மனசுக்குள்ளயே புழுங்கிட்டிருக்கேன் பல வருஷமாக!.. குழந்தைகள் கிட்ட கூட இவரை பத்தி சொல்லமுடியலை!… சொன்னா குழந்தைகள் இவரை வெறுத்திடுவாங்களோன்னு தயக்கம்.. அவங்க வாழ்க்கை பாழாக போகக்கூடாது என்கிற பயம். தேவையில்லாமல் அம்மா ஒரு ராட்சசி என்ற கெட்ட பெயரை பல வருஷமா சுமக்கிறேன் தெரியுமா?. நான் இதை ஓரளவு மறந்ததால தான் இன்னைக்கும் என் குழந்தைகளுக்கு அப்பாவா இந்த வீட்ல இருக்கார். இல்லைன்னா எப்பவோ இவரை விட்டு போயிருப்பேன். இவர் செஞ்ச தவறுக்கு என் குழந்தைங்க ஏன் அப்பா இல்லாம வளரணும்?

உனக்கு நீயே தண்டனை குடுத்துக்குறே தெரியுமா? என கவலையுடன் கேட்டாள் நித்யா.முன்ன பின்ன தெரியாதவளை வீட்டில் சேர்த்ததுக்கும், நம்பகூடாத மனுஷனை நம்பி வந்ததுக்கும் எனக்கிந்த தண்டனை தேவை தான் என குலுங்கி அழுதவளை செய்வதறியாது பார்த்தாள் நித்யா.

சரி.. ஏதோ நடந்தது நடந்து போச்சு!..அவரை இவ்வளவு வருஷமா தண்டிச்சிட்ட!.. இனியாவது முழு மனசோட மன்னிச்சி மறந்திடு! உன் எதிர்கால நிம்மதிக்காகவாவது! என்னது நிம்மதியா? மனுஷ மனசும் கண்ணாடி மாதிரி தான் நித்யா… ஒருமுறை உடைஞ்சா உடைஞ்சது தான்.. ஒட்ட வைக்குறது ரொம்ப கஷ்டம் …

இதே தவறை நான் செஞ்சிருந்தா இத்தனை வருடத்தில் நான் இழந்ததை ஈடுகட்ட முடியுமா அவரால்? தவறுகளை மன்னிக்கலாம்… துரோகத்தை மன்னிக்க முடியலை என்னால்..என்ன சொல்வது என புரியாமல் பரிதாபமாக பார்த்தாள் நித்யா..நீ சொல்றா மாதிரி மறந்துட்டேன் நித்யா.. மறந்துட்டேன்…ஆனா நிச்சயமா மன்னிக்க முடியலை…ஏன்னா! ரத்தமும், சதையும் , மனசுமுள்ள சாதாரண மனுஷி தானே நானும்….என்று வழிந்த கண்ணீரை துடைத்தபடி மகளை மறுவீட்டிற்கு அனுப்ப கிளம்பினாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்!! (கட்டுரை)
Next post வாங்க ‘thrift’ செய்யலாம்!! (மகளிர் பக்கம்)