PCODயும் சரும பிரச்சனைகளும்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 7 Second

தோல்தான் நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. நம் உடலுக்குள் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் முதலில் நம் தோலில்தான் தோன்றும். சிறிய பிரச்சனைகளில் தொடங்கி, மிகப்பெரிய பிரச்சனைகளை கூட தோல் நமக்கு முதலில் காண்பித்து விடும். பெண்களை பாதிக்கும் PCOD பிரச்சனையை, தோலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து ஆரம்பத்திலேயே கணிக்கலாம் என்கிறார் தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சையத் இக்பால்.

‘‘PCOD எனும் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடு இன்றைய பெண்களை அதிகம் பாதித்து வரும் பிரச்சனையாகும். கருமுட்டையில் நிறைய நீர் கட்டிகள் ஏற்படுவதால் வரும் பிரச்சனை இது. பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடு எதனால் பெண்களை தாக்குகிறது எனும் துல்லியமான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த பிரச்சனையின் முக்கிய காரணமாக நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள், சரியான உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்களை இந்த பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடு தாக்குகிறது.

இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில், அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. உடல் எடை அதிகரிப்பால், இளம் பெண்கள் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாட்டால் பாதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெண்கள் குறிப்பாக கருத்தரிக்கும் வயதிலிருக்கும் பெண்களில் பொதுவாகவே 20 – 30 சதவீதத்தினர் பாலி சிஸ்டிக் ஓவரி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாட்டில், கர்ப்பப்பைக்குள் நீர்கட்டிகள் உருவாகும். இந்த நீர் கட்டிகளிலிருந்து ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும். அப்போது ஆண்களுக்கு மட்டுமே சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் PCODயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சுரக்க ஆரம்பிக்கும். அதனால் ஆண்களுக்கு ஏற்படும் சில மாற்றங்கள் பெண்களுக்கும் ஏற்படும். அதாவது முகங்களில் லேசான மீசை, தாடி வளர்வது, முகப்பருக்கள் அதிகரிப்பது, தலை முடி உதிர்வது போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

இது தவிர இன்சுலின் எதிர்ப்பு மூலம் ஏற்படும் தோல் பிரச்சனைகளும் இதற்கான அறிகுறிகள்தான். இன்சுலின் சர்க்கரையை மட்டும் கட்டுப்படுத்தாமல், நம் மொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும். அதாவது இன்சுலின் சுரந்தாலுமே, அவை உயிரணுக்களுக்குள் சென்று, நம் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்காது. உயிரணுக்களுக்குள் இன்சுலின் செல்லாததால், அவை இன்சுலின் சுரக்கவில்லை எனும் சிக்னலை மூளைக்கு அனுப்பும். உடனே மூளை இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும். இதனால் இன்சுலின் அப்படியே தேங்கி சருமத்தில் திட்டுகளாக வெளிப்படும். கழுத்தில் தோல் முடிச்சு இருப்பதும் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாட்டிற்கான தோன்றும் அறிகுறிதான். முகத்தில் எண்ணெய் வடிவதும், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதினால்தான்.

இந்த சரும பிரச்சனைகளை குணப்படுத்த முதலில் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாட்டிற்கான சிகிச்சையை அளிக்க வேண்டும். அந்த சிகிச்சையின் போதே மருத்துவரின் பரிந்துரைப்படி தோல் பிரச்சனைகளுக்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ளலாம். சில லேசர் சிகிச்சையின் மூலம், முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடியை எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்த முடியும். பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடால் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முறையாக மருத்துவர்களிடமிருந்து சிகிச்சை பெறுவது நல்லது.

தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நேரடியாக அழகு நிலையங்களுக்கும் ஸ்பாக்களுக்கும் சென்று அதை மூடி மறைக்காமல், தோலில் ஏற்படும் ஒரு பிரச்சனையின் உண்மையான காரணத்தை நன்கு ஆராய்ந்தால் சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை பல கொடிய நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மூலம் கட்டுப்படுத்திவிடலாம்” என்கிறார் மருத்துவர் சையத் இக்பால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நில் கவனி பல்!! (மருத்துவம்)
Next post முதுமையை தள்ளிப்போடும் நெல்லிக்கனி!! நில் கவனி பல்!! (மருத்துவம்)