முதல் பெண் துபாஷி! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 31 Second

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துபாஷி பொறுப்பிற்கு முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மொழிபெயர்ப்பாளராக துபாஷிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு சபாநாயகருக்கு உதவியாக துபாஷிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் துபாஷிகளாக ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது முதல்முறையாக துபாஷி பொறுப்பில் ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் என்பவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுதும் கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவரும் அவரே. அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய அதிகாரம் மிக்க பதவி சபாநாயகர் பதவி என்பதால் பாரம்பரிய முறைப்படி அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் துபாஷி என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு கொண்டவர், சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து, சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர், அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். துபாஷி என்பவர் சபாநாயகர் வருவதை உறுதி
செய்யும் நபராகவும் கருதப்படுகிறார்.

“இது போன்ற முக்கிய பொறுப்பில் என்னை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் 60 வயது நிரம்பிய ராஜலட்சுமி. “நான் சென்னை பொண்ணு. கோடம்பாக்கத்தில் தான் பள்ளி படிப்பு. திருமணமாகி மூன்று பசங்க பிறந்துட்டாங்க. திருமணத்திற்கு முன்பே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். அதை தவறாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்திடுவேன். குடும்பம், குழந்தைகள் என இருந்த எனக்கு ஒரு நாள் திடீரென இன்டர்வியூக்கு வர சொல்லி கடிதம் வந்தது. அந்த நேரத்தில் கலைஞர் ஐயா ‘பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு’ கொடுத்திருந்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் என் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

சட்டமன்ற அலுவலக உதவியாளருக்காக நிறைய பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். இறுதியில் ஐந்து பெண்கள், ஏழு ஆண்கள் என 12 பேர் தேர்வானோம். அப்போது இந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஆரம்பத்தில் பெண் எம்.எல்.ஏக்களுக்கு உதவியாளராக எங்களை நியமித்தார்கள். 1990 அக்டோபர் 1 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். அன்று முதல் நிறைய அதிகாரிகளுக்காக வேலை பார்த்துள்ளேன். முதன் முதலில் பெண் எம்.எல்.ஏ விடுதியில் பணியில் அமர்த்தப்பட்டேன். அடுத்து தலைமை செயலகத்தில். இங்கு சட்டமன்ற அலுவலக உதவியாளர்,

தேர்வு நிலை அலுவலக உதவியாளர்,
கமிட்டி ஆபீசருக்கு தபேதா, துபாஷி
என்று, இன்று ஒரு இடத்திற்கு வந்துள்ளேன்.

எங்கள் வீட்டில் நான்தான் முதல்
அரசு வேலையில் இருக்கும் நபர்” என்கிறவர்,
துபாஷியாக தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

‘‘துபாஷிக்கான உடை கொடுக்கப்பட்டு, உடுத்திய பின் சபாநாயகர் ஐயாவிடம் பி.எஸ்.ஆர் (Police Service Representative) என்னை அழைத்து சென்றார். என்னைப் பார்த்தவர், ‘சந்தோஷம்மா… இது உனக்கு நல்லா இருக்கு’ன்னு சொன்னார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது சபாநாயகர் ஐயாவை அழைத்து வருகையில் ‘அம்மா வீடியோவில் எல்லாம் ஃபேமஸ் ஆகிட்டாங்க…’னு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு அதை செயல்பாட்டிலும் செய்து காட்டி, என்னை முதல் பெண் துபாஷியாக்கிய முதல்வர் ஐயாவுக்கு நன்றி சொல்ல இந்த நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிப்பவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார் தன் வேலையில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ராஜலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நில் கவனி பல்!! (மருத்துவம்)
Next post அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி!!(மகளிர் பக்கம்)