பிறப்புச் சான்றிதழில் 2வது கணவர் பெயர் பிரச்னையா?(மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 29 Second

என்ன செய்வது தோழி?

அன்புள்ள தோழிக்கு,

நான் எனது பெற்றோருக்கு இளைய மகள். எனக்கு ஒரு அண்ணன். பெருநகரில் வசிப்பதால் நவீனங்களில் ஈடுபாடு உண்டு. ஆனால் காதல் மீது மட்டும் நல்ல ஈர்ப்பு இருந்ததில்லை. சிறுவயது முதலே அப்பா, அம்மா பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணம்தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனாலும் காதலிக்கும் கோரிக்கைகளுக்கு பஞ்சமில்லை. அத்தனையையும் கண்டு கொள்ளாமல் வந்திருக்கிறேன். அந்த கோரிக்கை வரிசையில் நின்றவர் எங்கள் உறவினர் ஒருவர். அவரும் என்னை விரும்புவதாக சொன்னார். எனக்கும் அவர் மீது ஈர்ப்பு உண்டு. ஆனால் காதல் இல்லை. அதனால் காதல் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.

நான் அப்படி சொன்னதை , ‘அவரை எனக்கு பிடிக்கவில்லை’ என்று தவறாக நினைத்துக் கொண்டு விட்டார்.அவர் எனது அப்பா, அம்மாவிடம் வந்து, அவரது பெற்றோர் மூலம் பெண் கேட்டிருந்தால் நான் ஒப்புக் கொண்டு இருப்பேன். காரணம் அப்பா, அம்மா பார்க்கும் மாப்பிள்ளையைதான் திருமணம் செய்ய வேண்டும், காதலித்து திருமணம் செய்யக் கூடாது என்பதில் நான் சிறுவயது முதலே இருந்த உறுதிதான். அதனால்தான் அவரை எனக்கு பிடித்திருந்தும் அவரிடம் அப்படி பதில் சொன்னேன். அந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த உறவினர் என்னிடம் பேசுவதை குறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் என்னை பார்த்தால் அமைதியாக விலகிச் சென்று விடுவார். எனக்கு லேசான வருத்தம் இருந்தாலும், நாளடைவில் அதை மறந்து விட்டேன்.

எனக்கு காதல் மீது மரியாதை இல்லாமல் போனதற்கும்  காரணம் இருக்கிறது. என் பெரியப்பா மகள் ஒருவரை காதலித்தார். வீட்டில் தடுத்தும் கேளாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடியதால் நல்ல வேலை கிடைக்கவில்லை. இடையில் 2 பிள்ளைகள். வசதியான குடும்பத்தில் பிறந்த என் அக்கா வறுமையில் வாடுவதை பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறேன். அவரது கணவர், வெளிநாட்டு வேலைக்கு போனார். அங்கே ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு அக்கா பிள்ளைகளுடன் எங்கோ போய் விட்டார். இன்று வரை எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. இப்படி நான் பார்த்த நெருங்கியவர்களின் காதல் எல்லாம் அப்படித்தான் சோகத்தில் தொடருகின்றன.

இடையில் கல்லூரி முடித்த சில நாட்களில் எனது கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரியப்பா மகளை நினைத்து என் விருப்பத்தை கேட்டார்கள். ‘உங்கள் விருப்பமே என் விருப்பம்’ என்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன். எனக்கு பார்த்த மாப்பிள்ளை அரசுப் பணியில் இருந்தார். அவர்கள் வீட்டில் 4 பெண்கள். ஒரு பையன். அவர்தான் கடைசி. வசதியான குடும்பம். ஆனாலும் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து திருமணம் பிரமாண்டமாக நடந்தது.

கல்யாண வாழ்க்கையும் நன்றாகவே ஆரம்பித்தது. என்னை வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். பகலில் பொழுது போகாவிட்டால், பக்கத்து ஏரியாவில் இருக்கும் அம்மா வீட்டுக்கு போய் சிறிது நேரம் இருந்து விட்டு வருவேன். ஒருகட்டத்தில் அப்படி அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகக் கூடாது என்று சொல்லிவிட்டார். அவர் கோபமில்லாமல் சாதாரணமாக சொல்லவே, ‘போரடிக்குது அதனால்தான் போகிறேன்’ என்று சொன்னதும்
கோபப்பட ஆரம்பித்தார்.

அதன் பிறகு சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் தொடங்கினார். அடித்தால் அவரது அப்பாவோ,  அம்மாவோ எதுவும் கேட்க மாட்டார்கள். கணவர் சத்தம் போட ஆரம்பித்ததும் அவர்கள் தங்கள் அறைக்குள் சென்று விடுவார்கள். போதாதற்கு இரவிலும் குடித்து விட்டு வந்து இயல்புக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவார். இத்தனையும் சமாளித்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானேன். பெண் குழந்தை பிறந்ததால் அவர் மனம் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. குடிப்பதும், அடிப்பதும் முன்பை விட அதிகமானது.

கணவரின் இயல்பை மீறிய பழக்க வழக்கங்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நிம்மதியில்லாத வாழ்க்கை, என் மகளையும் பாதிக்கக் கூடாது என்பதால் அவரை பிரிய முடிவு செய்தேன். அதை எங்கள் வீட்டில் சொன்ன போது, அவர்கள் தயங்கினர். திருமணமாகி ஒரே ஆண்டில் எல்லாம் முடிந்து விட்டதே என்று அழுதனர். ஆனால் எனது அண்ணனும், அண்ணியும் எனது முடிவுக்கு ஆதரவாக இருந்தனர். அதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம்.

அவரோ விவாகரத்து செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘விவாகரத்து செய்துட்டு யாருகூட போகப்போற’ என்று சொல்லி தினமும் அடிப்பார். அந்த அடி உதை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது. அங்கேயும் அவருக்கு செல்வாக்கு. அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் ‘நீ என்ன பண்ணாம ஒரு புருஷனுக்கு கோபம் வந்து அடிப்பான்னு’ கேட்டார். என் கணவரிடம் விசாரித்ததை விட எங்களை விசாரணை என்ற பெயரில் அலை கழித்ததுதான் மிச்சம்.

அதை சமாளிக்க முடியாமல் நீதிமன்றத்தின் உதவியை நாடினோம். கூடவே விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்தேன். அவர் விவாகாரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர், ‘எனது மனைவியும், குழந்தையும் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று நீதிமன்றத்தில் அழுதார். அதனால் வழக்கு 3 ஆண்டுகளுக்கு இழுத்தது. போராடி எங்கள் தரப்பு உண்மையை நிரூபித்து, விவாகரத்து வாங்கினேன். அதுவும் ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்ன பிறகுதான் அவரும் கடைசியில் இறங்கி வந்தார்.அதன்பிறகு அப்பா, அம்மாவுடன் வசிக்க ஆரம்பித்தேன். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இடையில் எனக்கு 2வது திருமணம் செய்ய அண்ணனும், அண்ணியும் தீவிரமாக இருந்தனர்.

அப்பா, அம்மாவை விட எனக்குதான் ‘பட்டதே போதும்’ என்று தயக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் என்னை விரும்புவதாக சொன்ன உறவினர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். அவர் என் அண்ணன் மூலமாக என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்ததாலும், எனக்கும் அவர் மீது ஈர்ப்பு உண்டு என்பதால் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மீண்டும் 29 வயதில் 2வது திருமணம். தனிக்குடித்தனம். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. முதல் குழந்தையிடமும் 2வது கணவர் அன்பாகவே இருக்கிறார்.

குழந்தைகளிடம் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக, என் அண்ணன் யோசனைப்படி, என் மகளை பள்ளியில் சேர்க்கும் போது அப்பா பெயராக 2வது கணவரின் பெயரைதான் கொடுத்திருக்கிறோம். கூடவே பிறப்புச் சான்றிதழும் புதிதாக வாங்கி விட்டோம். அதனால் ஆதார் உட்பட எல்லா சான்றிதழ்களிலும் அப்பா என்ற இடத்தில் 2வது கணவரின் பெயர்தான் இருக்கிறது. இப்போது என் மகள் 10ம் வகுப்பு படிக்கிறாள். மகன் 5வது படிக்கிறான். நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை. என் மகளைப் பொறுத்தவரை என் 2வது கணவரைதான் அப்பா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள். எங்கள் விவாகரத்துக்கு பிறகு என் முதல் கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் மூலம் குழந்தைகள் ஏதுமில்லை. கூடவே அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அந்த பெண்ணும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்.

கட்டுப்படுத்த ஆளில்லாமல், முதல் கணவர் குடிக்கு அடிமையாகி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தும் போய் விட்டார். இந்நிலையில் அவரது பரம்பரைச் சொத்துகளை இப்போது பங்கீடு செய்ய உள்ளனர். அதில் என் முதல் கணவரின் பங்கை ‘உன் மகளுக்கு போய் கேளு’ என்று அவரது உறவினர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டு ரேஷன் கார்டில் இன்னும் என் மகள் பெயர் இருக்கிறதாம். என் மகளுக்கு சொத்து தர வேண்டும் என்பதில் முதல் கணவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். எனக்கும் தகவல் சொல்லி அனுப்புகின்றனர். அப்படி கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், என் மகளுக்கான உரிமையை ஏன் விட்டுத்தர வேண்டும் என்று தோன்றுகிறது. என் 2வது கணவரிடம் இது குறித்து கேட்டதற்கு அவரும் ‘எனக்கு உடன்பாடில்லை… ’ என்று சொல்லிவிட்டார்.

பரம்பரை சொத்தில் உன் மகளுக்கு உரிமை இருக்கிறது. பங்கு பிரிக்க பேச வேண்டும் வா என்று முதல் கணவரின் பெற்றோர் அழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என் மகளின் எல்லா சான்றிதழ்களிலும் 2வது கணவரின் பெயர்தான் இருக்கிறது என்பது தெரியாது. அவரின் மகள்தான் என்பதற்கு எந்த சான்றிதழும் இல்லாத போது, இறந்து போன முதல் கணவரின் சொத்தில், என மகள் உரிமை கொண்டாட முடியுமா? அவள் பிறந்த மருத்துவமனையில், மாநகராட்சி இணையத்தில் அவள் பிறந்த சான்றிதழ் உள்ளது. அதனை பயன் படுத்தலாமா? இப்போது இருக்கும் சான்றிதழும் கேட்பார்களா?

மகளின் அப்பா பெயரை மாற்றி புதிய பிறப்புச் சான்றிதழ் வாங்கியது என்று வெளியில் தெரிந்தால் சட்டப் பிரச்னை வருமா? முதல் கணவரின் சகோதரி ஒருவர் எனது மகளுக்கு பங்கு தருவதை எதிர்ப்பதால் இதையெல்லாம் யோசிக்க வேண்டி உள்ளது? விவாகரத்து செய்து விட்ட முதல் மனைவியான நானோ, இல்லை 2வது மனைவியோ முதல் கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியுமா? சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில் முதல் கணவருக்கு, என் மகள் சட்டப்பூர்வமான வாரிசா? அப்படி அவளுக்கு சட்ட உரிமை இருக்கிறது என்றால் அதை நாங்கள் எப்படி நிரூபிப்பது? அதற்கான சட்ட வழிமுறைகள் என்ன என்று எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் மகள், உங்கள் முதல் கணவருக்குதான் பிறந்துள்ளார். அதற்கு உங்கள் மாமனார், மாமியார் ஆகியோர் சாட்சியாக உள்ளனர். அவர்களும், சில நாத்தனார்களும் ஒப்புக் கொள்வதாக சொல்லியுள்ளீர்கள். அதனால் உங்கள் மகளின் உரிமையை நீங்கள் எளிதில் நிலைநாட்ட முடியும். அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட உங்கள் மகள்தான் முதல் கணவரின் நேரடி வாரிசு என்பதற்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளது. அதை நீங்கள் இப்போதும் மாநகராட்சி இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

து ஆதாரமாக இருக்கும். இப்போது பள்ளி சான்றிதழ் உட்பட வேறு சான்றிதழ்களில் உங்கள் 2வது கணவர் பெயர் இருந்தாலும் பிரச்னையில்லை. பிறப்புச் சான்றிதழ் போதுமானதுதான். அதுமட்டுமல்லாமல் உங்கள் முதல் மகள்தான், இறந்துபோன முதல் கணவரின் ஒரே வாரிசு. அதனால் முதல் கணவர் உயிரோடு இருந்தால் பரம்பரை சொத்தில் என்னென்ன உரிமை, பங்கு அவருக்கு கிடைத்திருக்குமோ அத்தனையும் உங்கள் முதல் மகளுக்கும் கிடைக்கும். ஏனென்றால் அவர்தான் உங்கள் முதல் கணவரின ரத்த வாரிசு. அதற்கு இப்போது இருக்கும் ஆதாரம் போதுமானது.

அதே நேரத்தில் நீங்கள், முதல் கணவரின் சொத்துக்கு வாரிசாக முடியாது. காரணம் உரிமையும், பந்தமும் விவாகரத்து மூலம் முடிந்து விட்டது. அதனால் நீங்களோ, அவரது 2வது மனைவியோ அந்த சொத்துகளில் உரிமை கோர முடியாது. எனவே மூத்த மகளின் உரிமையை நீங்கள் நிலை நாட்டி முதல் கணவரின் சொத்தில் இருந்து உரிய பங்கை பெற முடியும். அதே நேரத்தில் வாரிசு சான்றிதழ் புதிதாக வாங்கியிருப்பதாலும், அதில் 2வது கணவர் பெயர் இருப்பதாலும் பிரச்னை வருமா என்று கேட்டு உள்ளீர்கள். அது தவறுதான். அப்படி பெயர் மாற்றினால் சட்டப்படி தத்து எடுத்தாலும் கூட பெயரை மாற்ற முடியாது. ஆனால் அவர்தான் அப்பா என்று நீங்கள் உறுதியாக சொன்னால் யாரும் எதுவும் செய்ய முடியாது.

அதே நேரத்தில் அந்த சான்றிதழ் குறித்து சொன்னால் தான் முதல் கணவரின் உறவினர்களுக்கு தெரியப்போகிறது. அதனால் சொத்து பெறுவதில் பிரச்னை இருக்காது. புதிய பிறப்புச் சான்றிதழால் பிரச்னை வந்தால் அது தனிப் பிரச்னை. எனவே அதை இந்த விஷயத்தில் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம். அதனால் சொத்தில் பங்கு கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

அப்புறம் முக்கியமான விஷயம். உங்கள் மூத்த மகள். உங்கள் 2வது கணவரைதான் தன் அப்பா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள். கூடவே உங்கள் பிள்ளைகள் இருவரும் தங்களுக்கு ஒரே தந்தை என்ற நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த வித்தியாசம் தெரியக் கூடாது என்றுதான் பிறப்பு சான்றிதழ் முதல் எல்லாவற்றிலும் 2வது கணவரின் பெயரை போட்டிருக்கிறீர்கள். இந்த சொத்து பிரச்னை வெளிப்படையாக தெரிய வரும் போது அவர்களுக்கு மனதளவில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்று பாருங்கள்.

அதனால் சங்கடத்தால் உங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். எனவே எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுங்கள். அதன் பிறகு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்யுங்கள். ஒரு மனநல ஆலோசகரிடமும் கூட ஆலோசனை செய்யலாம். எல்லா ஆலோசனைகளையும் கேட்டு நீங்களாக முடிவெடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்?(மருத்துவம்)
Next post நண்பரின் திடீர் காதல்… நல்லதா? (மகளிர் பக்கம்)