மாடுகள் எங்க வீட்டுக் குழந்தைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 39 Second

‘சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது தான் நான் நாட்டு மாடு பற்றியே கேள்விப்பட்டேன். சிட்டியில் வளர்ந்ததால் எனக்கு அப்படி ஒரு மாடு இனம் இருப்பதே தெரியாது. அதன் பிறகு தான் அந்த மாடுகள் பற்றி தெரிந்து கொண்டேன்’’ என்று பேசத் துவங்கிய பிரீத்தா… தற்போது பல மாவட்டங்களின் ஆதாரமாக விளங்கும் நாட்டு மாடுகளை வாங்கி அதற்காக ஒரு பண்ணை அமைத்து தன் கணவருடன் இணைந்து பராமரித்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது படிச்சது எல்லாம் சென்னையில் தான். எம்.பி.ஏ முடிச்சிட்டு 2004ல் ஐ.டி யில் வேலைக்கு சேர்ந்தேன். 16 வருஷமா ஐ.டி துறையில் தான் வேலை பார்த்து வருகிறேன். என் கணவரும் அதே துறையில் தான் இருந்தார். மாடுகளை பராமரிக்க வேண்டும் என்பதால், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இதில் இறங்கிட்டார். 2017ல் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த செய்தியை டி.வியில் பார்த்த போது நாட்டு மாடு பற்றி கேள்விப்பட்டேன்.

மேலும் பாலிலும் கலப்படம் செய்வதாக உணர்ந்தேன். அதனால் என்னுடைய குழந்தைக்கு நல்ல பசும்பால் கொடுக்க விரும்பினேன். பலர் பசும்பாலையே பாக்கெட் செய்து தந்தாலும், அதுவும் கலப்படமா இருக்குமோன்னு பயமா இருந்தது. அதனால நாமே மாடு வாங்கி பால் கறந்துக்கலாம்ன்னு முடிவு செய்தோம். ஒரு பசுவும் கன்றுக்குட்டியும் வாங்கினோம். எங்க கார் ஷெட்டினை மாட்டு கொட்டகையாக மாற்றினோம். அந்த மாடு கொடுக்கும் பாலைத்தான் வீட்டிற்கு பயன்படுத்தினோம்.

ஒரு ஆர்வத்தில் மாட்டை வாங்கிட்டோம்… ஆனால் அதன் வளர்ப்பு பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது. அதற்கு என்ன சாப்பிட கொடுக்கணும், எப்படி பராமரிக்கணும், உடம் சரியில்லைன்னா என்ன மருந்து கொடுக்கணும்ன்னு எதுவுமே தெரியல. எங்களுக்கு மாடு ஆரோக்கியமா இருக்கணும். நல்ல தீவனம் கொடுக்கணும். அதனால் இது குறித்து அதனை பராமரிப்பவர்களை நேரில் போய் பார்த்து பேசினோம். அப்போது தான் எங்களுக்கு நாட்டு மாட்டிலேயே நிறைய ரகங்கள் இருக்குன்னு தெரிந்தது. மேலும் நாட்டு மாட்டினை பராமரிப்பவர்கள் ரொம்பவே கஷ்ட நிலையில் இருப்பதும் புரிந்தது. காரணம் நாம் என்னதான் தீவனம் கொடுத்தாலும், இவை பெரிய அளவில் பால் கொடுக்காது.

ஒரு வீட்டிற்கு தேவையான அளவு வேண்டும் என்றால் கிடைக்குமே தவிர அதைக் கொண்டு நாம் பிசினஸ் செய்ய முடியாது. அதனால் பலர் அதனை பராமரிக்க முடியாமல் கொடுத்துவிட்டதாக சொன்னாங்க. அதே சமயம் அதன் சாணம் மற்றும் கோமூத்திரம் கொண்டு பஞ்சக்கவ்யம் தயாரிக்கலாம்ன்னு கேள்விப்பட்டோம். கிராமத்தில் சாணத்தை அப்படியே குமிச்சிருப்பாங்க. சிட்டியில் அப்படி செய்ய முடியாது. எங்க வீட்டில் ஒரு மாடு என்பதால், அதன் சாணத்தை வீட்டு மாடியில் வரட்டி தட்டி வச்சிடுவோம். கோயில் பூஜைன்னு வந்து வாங்கி செல்வாங்க. சிலர் செடிகளுக்கு உரமா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

ஒரு சிலர் உரமாகவே கொடுங்கன்னு கேட்டாங்க. அப்பதான் சாணத்தை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும்ன்னு பார்க்க ஆரம்பிச்சேன். அதைக் கொண்டு நிறைய பொருட்கள் தயாரிக்கலாம்ன்னு தெரிந்து கொண்டேன். முதலில் நம்மாழ்வார் பயிற்சி மையத்தில் சேர்ந்து சாணத்தில் உரம் தயாரிப்பது பற்றி கற்றுக் கொண்டு, உரமாக கொடுக்க ஆரம்பிச்சேன். சேலத்தில் உள்ள சுரபி என்ற கோசாலாவில் சாணம் கொண்டு பல விதமான பொருட்களை தயாரிப்பது குறித்த விளம்பரம் பார்த்தேன்.

அங்கு சென்று பல்பொடி, குளியல் சோப், பாத்திரம் கழுவும் சோப், விபூதி, சாம்பிராணி எல்லாம் கற்றுக் கொண்டேன். சாணம் கொண்டு மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிப்பு குறித்து பூனேயில் பயிற்சி எடுத்தேன். காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்க் கவ்ய வித்யாபீடத்தில் ஆயுர்வேத முறையில் சாணம் மற்றும் கோமூத்திரத்தை மருந்தா எப்படி பயன்படுத்தலாம்ன்னு தெரிந்து கொண்டேன். அதாவது சிறுநீரக பிரச்னை இருந்தா அதற்கு ஒரு மருந்தும், உடல் ஆரோக்கியத்திற்கு தனி மருந்து என ஒவ்வொரு உடல் பிரச்னைக்கு என்ன மருந்து என்று தெரிந்து கொண்டேன்’’ என்றவர் தனக்கு தெரிந்த நாட்டு மாடுகளைப்பற்றி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

‘‘நமக்கு தெரிஞ்சது காங்கேயம் ரகம் மட்டும்தான். சிவங்கை, காஞ்சிபுரம், காரைக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலைன்னு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் வட்டாரத்திற்கும் தனிப்பட்ட நாட்டு மாடுகள் இருக்கு. இந்த மாடுகளை நாம் இழந்துவிடக்கூடாது என்பதால், கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் சென்று அவர்களை மாடுகளை வளர்க்க சொல்லி, அதற்கான பராமரிப்பு முறைகளை நாங்க பார்த்துக் கொள்வதாக கூறினோம். அதாவது சிட்டியில் உள்ளவர்களுக்கு இந்த மாடுகள் பற்றி புரிய வைத்து, அவர்கள் அந்த மாடுகளுக்கான தேவையினை ஸ்பான்சர் செய்ய ஏற்பாடு செய்தோம். மற்றவர்களிடம் சொல்லும் போது நாமும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தின் நாட்டு மாடுகளை வாங்கி, பள்ளிக்கரணையில் தனியாக தொழுவம் அமைச்சு அங்கு பராமரிக்கிறோம்.

மேலும் இனி பால் தராது என்று கசாப்பு கடைகளுக்கு அனுப்பும் மாடுகளின் சாணம் கொண்டு பயன் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பல்லாயிரக்கணக்கான மாடுகள் கசாப்பிற்காக போனாலும், அவை எல்லாவற்றையும் எங்களால் மீட்டு எடுக்க முடியாது அதனால், அழிந்து வரும் நாட்டு மாடு ரகங்களை மட்டும் மீட்டு பாதுகாத்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல், எங்க தொழுவத்தில் இருக்கும் மாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு, குழந்தைகள் உணவு கொடுக்கவும், கோபூஜை செய்யவும், கிரஹப்பிரவேசத்திற்கு வீட்டிற்கு அழைத்து செல்லவும் அனுமதியளிக்கிறோம். தற்போது இப்போது எங்களிடம் 15 ரகத்தில் பசு, காளை, கன்றுக்குட்டி என்று 80 மாடுகள் இருக்கு.

நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வினை வாயால் மட்டுமே சொல்லி புரிய வைக்கமுடியாதுன்னு தெரியும். அதனால் இயற்கை மூலமாக என்ன செய்யலாம் என்று யோசித்து தான் ‘இஷ்தா’ என்ற பெயரில் இந்த பொருட்களை செய்ய ஆரம்பிச்சேன். நாம பயன்படுத்தும் பல் துலக்கும் பேஸ்ட் முதல் கொசுவர்த்தி வரை எல்லாவற்றிலும் ரசாயனம் கலந்திருக்கு. அதற்கான மாற்று சாணம் மற்றும் கோமூத்திரத்தில் உள்ளது. நான் பயிற்சி எடுத்த போது, சாணத்தில் தயாரான பொருட்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

செய்ய கற்றுக் கொண்ட பிறகு நான் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படுத்த கொடுத்தேன். அனைத்தும் ஈகோபிரண்ட்லி என்பதால் இந்த பொருட்களை பயன்படுத்துவதால், நாம ஆரோக்கியமா இருக்க முடியும். காரணம் சாணத்தில் தயாரிக்கப்படும் ஊதுபத்தி முதல் தசாங்கம் என அனைத்தும் காற்றை சுத்திகரிக்கும் தன்மைக் கொண்டது. இந்த பொருட்களின் பயன்பாடு அதிகமானால், மாடு மற்றும் கோசாலை வச்சிருக்கிறவங்க பயன்படுவாங்க. பால் இல்லைன்னாலும், இதன் சாணத்தில் பலன் இருக்குன்னு தெரிந்தா நாட்டு மாடுகள் காப்பாற்றப்படும். பசு மாடு ஒரு சில காலம் வரை தான் பால் தரும். அந்த சமயத்தில் அதன் சாணத்தை பயன்படுத்தினா அழிந்து வரும் இனங்கள் மற்றும் கசாப்பு கடைக்கு போகும் மாடுகளை மீட்டு எடுக்கலாம். அதன் அடிப்படையில் தான் மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

நான் பல இடங்களுக்கு சென்று இந்த பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம்ன்னு கற்றுவந்தாலும், முதலில் ஆய்வு முறையில் தான் செய்து பார்த்தேன். இதனை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்தில் கிடைக்கும். அவை மட்டுமில்லாமல் வேறு என்னெல்லாம் சேர்க்கலாம் என்று பார்த்து ஒரு முழுமையான தயாரிப்பு முறையினை கொண்டு வந்தேன். இப்ப நாங்க எல்லா வகையான பொருட்களை தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் சாணம் வாசனை வருகிற மாதிரி தான் எங்களின் சாம்பிராணி இருந்தது. அதன் பிறகு அதில் இயற்கை முறையில் என்ன பொருட்கள் சேர்த்தால் வாசனை வரும்ன்னு பார்த்து அதை சேர்த்தோம்.

மக்கள் எல்லாரும் கலப்படம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாயிட்டாங்க. நம்ம குளியல் சோப் முதல் பல்பொடி வரை நுரை வரணும். அப்போது தான் மக்கள் அதை ஏற்பார்கள். எங்களின் பொருட்களில் நுரை வராது. அதனால் இரண்டு விதமான குளியல் சோப்பினை தயாரிக்கிறோம். ஒன்று 100% ஆர்கானிக், அதில் நுரை வராது. இரண்டாவது 99% ஆர்கானிக், ஒரு சதவிகிதம் மட்டும் நுரை வருவதற்கான பொருட்களை சேர்த்தாலும். மற்ற சோப்புகள் போல் அதிக அளவு ரசாயனம் இருக்காது. இதன் மூலம் இயற்கை சார்ந்த பொருட்களுக்கு மக்களை மாற்ற முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு’’ என்றவர் மாடுகள் பராமரிப்பு பற்றி விவரித்தார்.

‘‘ஆரம்பத்தில் மாடுகளுக்கு சின்னதா பூச்சிக்கடி மூலமா இன்பெக்‌ஷன் வந்தா கூட பதட்டமாயிடுவோம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா அதற்கு என்ன செய்யணும் மேலும் அதற்கான மருந்துகள், பராமரிப்பு முறை எல்லாம் தெரிந்து கொண்டோம். இந்த ஐந்து வருஷத்தில் அந்த அனுபவமே எங்களுக்கு பாடமாக மாறியது. மாடுகளுக்கு சித்தா மருத்துவம் தான் பின்பற்றுகிறோம். எமர்ஜென்சி நேரத்தில் மட்டும் அலோபதி மருந்துகள் கொடுக்கிறோம். தொழுவத்தில் நான்கு பேர் தங்கி மாடுகளை பார்த்துக்கிறாங்க. மாதம் ஒரு முறை டாக்டர் வந்து பார்ப்பார். மேலும் எமர்ஜென்சிக்கு அங்க ஏரியாவிலேயே டாக்டர் இருக்கார். கைவைத்திய மருந்துகளும் இருக்கும்.

சாணத்தால் செய்யக்கூடிய பொருட்களை நாங்க பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யல. சமூகவலைத்தளம் மற்றும் வாய் வார்த்தையாகவும், நிகழ்ச்சி மூலமா பலர் தெரிந்து கொண்டு வாங்குறாங்க. சாம்பிராணி, ஊதுபத்தி தவிர, பெயின்ட் மற்றும் பேப்பர் தயாரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்கிறோம். கல்லூரி மற்றும் இயற்கை சார்ந்த நிகழ்ச்சியில் மாடு மற்றும் கன்றுகளை கொண்டு போய் நிறுத்த திட்டமிட்டு இருக்கோம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் அவர்களுக்கு மாடுகளைப் பற்றிய புரிதல் மற்றும் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள வட்டாரங்களில் 22க்கு மேல் ரக மாடுகள் இருந்தது. இப்ப இருக்கிற சூழலில் என்னிடம் இருக்கும் மாடுகளை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் அழிந்து வரும் ரகங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு’’ என்றார் பிரீத்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)