கருப்பு நிறத்தழகிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 45 Second

‘‘கருப்பு எல்லோராலும் வெறுக்கப்படுகிற நிறம். குறிப்பாக மணப்பெண்ணை பார்க்கும் போது பொண்ணு கொஞ்சம் கருப்பு… அதான் யோசிக்கிறோம்னு சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். இதே பிரச்னையை நான் சந்தித்து இருக்கேன். என்னையும் பெண் பார்த்தவர்கள் என் நிறம் காரணமாக ரிஜெக்ட் செய்தாங்க. ஆனால் இந்த நிறம் தான் எனக்கு உலகளவில் பேரும் புகழும் வாங்கிக் கொடுத்திருக்கு’’ என்கிறார் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேக்கப் கலைஞரான ஸ்ரீ தேவி.

‘‘நிறத்திலேயே கருப்பு நிறம் தான் மிகவும் அழகான நிறம். அவர்களின் சருமம் மிகவும் பளபளப்பாகவும் இருக்கும். இதை யாரும் ரசிப்பதில்லை. வெள்ளையாக சருமம் உள்ளவர்களுக்கு இருக்கும் மதிப்பு கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு கிடைப்பதில்லை. பல கிண்டல், கேலிகள், ஏளனங்கள் என நிறைய நிற ஷேம்களை அந்த நிறத்தினர் சந்தித்து வருகிறார்கள். நானும் அது போன்ற கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறேன். அதனாலேயே நான் என்னை திறமையால் மெருகேற்றிக் கொள்ள நினைத்தேன். எனக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவருக்கு அரேபியாவில் வேலை என்பதால், நானும் அங்கு செட்டிலாகிட்டேன். அங்கு பெண்கள் எல்லாரும் புர்கா அணிந்திருப்பார்கள்.

கண்கள் மட்டும் தான் தெரியும். அந்த சின்ன இடைவெளியில் தெரியும் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கும். அதற்காகவே அவர்கள் பிரத்யேகமாக மேக்கப் ெசய்வார்கள். கண்களை அழகாக்கவே பல அழகு சாதனப் பொருட்கள் அங்கு கிடைக்கும். அங்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், நாம் ஒரு மேக்கப் சாதனப் பொருட்களை வாங்கினால் அதை எப்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இலவசமாக சொல்லியும் கொடுப்பார்கள். நானும் அப்படி நிறைய மேக்கப் சாதனங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

மேலும் சின்ன வயசில் இருந்தே மேக்கப் செய்து கொள்வதில் தனிப்பட்ட ஆர்வமுண்டு. என்னுடைய தாத்தா ெவளிநாட்டில் வேலை பார்த்ததால், அங்கிருந்து மேக்கப் பொருட்கள் எல்லாம் வாங்கி வருவார். அம்மா எனக்கு மேக்கப் போட்டுவிடுவாங்க. அதனால் எனக்கும் மேக்கப் செய்து கொள்ள பிடிக்கும். அதே பழக்கம் அரேபியாவிலும் தொடர்ந்தது. கடையில் விற்கும் மேக்கப் பொருட்களை வாங்கி அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வேன். அந்த சமயத்தில் தான் அங்குள்ள பிரபல மேக்கப் கலைஞர் ஒருவர் என்னை அவரின் மாடலாக வரும்படி கேட்டுக் கொண்டார். என் கணவரும் சம்மதிக்க மாடலானேன். அவருடன் இணைந்து நிறைய நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைச்சது.

அதோட மேக்கப் பற்றியும் கற்றுக்கொண்டேன். இது குறித்து மேலும் படிக்க விரும்பினேன். என் விருப்பத்தை புரிந்து கொண்ட என் கணவர் என்னை லண்டனில் உள்ள மேக்கப் பயிற்சி பள்ளியில் ேசர்த்து விட்டார். தேர்ச்சியும் ெபற்றேன். சர்வதேச அளவில் 2000க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோ, தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்திருக்கேன். என் விரல்கள் அழகுப்படுத்தாத சருமங்களே கிடையாது’’ என்றவர் சிறந்த மேக்கப் கலைஞர், ஐகானிக் பெண், திருமதி பிளஸ் சைஸ் அழகி பட்டம் போன்ற விருதுகள் மட்டுமில்லாமல் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட், 24 மணி நேரம் ஃபேஷன் ஷோ நடத்தி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

கருப்பு நிற பெண்களை அழகாக எப்படி மேக்கப் மூலம் காட்டலாம் என்பது குறித்து மேக்கப் பயிற்சி ஆரம்பிக்க இருக்கும் தேவியின் முதல் முயற்சி அவர்களை அழகாக மேக்கப் செய்யும் மேக்கப் கலைஞருக்கு போட்டி அறிவித்துள்ளார். இதில் பங்கு பெறும் மாடல்கள் அனைவருமே மாநிறத்தினர் அல்லது கருப்பு நிறத்தினர். இது குறித்து விவரித்த போது… ‘‘கருப்பு நிறம் என்றால் அவர்கள் குறிப்பிட்ட நிறங்கள் கொண்ட உடைகள் மற்றும் நகைகள் தான் அணிய வேண்டும் என்ற விதியினை நாமே நிர்ணயித்து இருக்கிறோம். இவர்களுக்கு மேக்கப் போட்டாலும் திட்டு திட்டாகவும் அல்லது அவர்களை வெள்ளையாக தான் மாற்றுகிறார்களே தவிர, அவர்களின் நிறத்தை அழகாக யாரும் எடுத்துக் காட்டுவதில்லை.

அந்த நிலைப்பாடு மாற வேண்டும் என்பதற்காகத் தான் நான் இந்த போட்டியினை சென்னையில் நடத்துகிறேன். கருப்பாக இருக்கும் பெண்களின் உடலில் மெலனின் அதிகமாக சுரக்கும். இது தான் அவர்களின் கருமை நிறத்திற்கு காரணமே தவிர அவர்களும் அழகானவர்களே என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனாலேயே சென்னையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டஸ்கி சருமம் உள்ளவர்களுக்கு எப்படி மேக்கப் செய்யலாம் என்பது குறித்து பிரத்யேக பயிற்சி அளிக்க இருக்கிறேன். என்னுடைய முழு கவனமும் இவர்களை சார்ந்து மட்டுமே இருக்கும்’’ என்றவர் கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு எவ்வாறு மேக்கப் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவரித்தார்.

‘‘பெரும்பாலும் இந்த நிறமுள்ளவர்களின் கைகள் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள நிறத்திற்கு ஏற்ப தான் மேக்கப் செய்யணும். முகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வெள்ளையாக காண்பிக்கிறார்களே தவிர கைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. இதனால் பார்க்க வித்தியாசமாக இருக்கும். ஒருவரின் நிறத்தினை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லையே. அவர்களின் நிறத்தைக் கொண்டே எவ்வாறு அழகாக எடுத்துக்காட்டலாம் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். இதற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபவுண்டேஷன் நிறங்கள் கைகளின் நிறங்களுக்கு ஏற்ப மேட்சாகணும். அடுத்து லிப்ஸ்டிக்… மெரூன், ஆரஞ்ச், பீச்சிங் பிங்க்… ஆரஞ்ச் டிஞ்ச் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

பார்க்க அழகாக இருக்கும். கான்டூர் செய்யும் போது, அவர்கள் நிறத்தில் இருந்து மூன்று ஷேட் டார்க்கான நிறங்கள் பயன்படுத்தணும். அப்பதான் பிரவுன் ஷேடாக பார்க்க அழகாக இருக்கும். சிலர் அவர்களை சிகப்பாக மாற்றிவிடுகிறார்கள். என்ன தான் மேக்கப் போட்டு அழகாக எடுத்துக்காட்டினாலும் எந்த சரும நிறமாக இருந்தாலும் அவர்கள் தங்களின் சருமத்தை இளமையாக மெயின்டெயின் செய்ய வேண்டும். அதற்கு முதலில் அவர்களின் வயிறு சுத்தமாக இருக்க வேண்டும். நாம் தினமும் பலதரப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதெல்லாம் நம்முடைய சருமத்தை பாதிக்கும். முறையான உணவு மற்றும் தண்ணீர் இவை இரண்டுமே சருமத்தின் பாதுகாவலன். இதை தவிர நாம் வெளியே செல்லும் போது சரும பாதுகாப்பிற்காக பல விதமான அழகு பொருட்கள் உள்ளன.

அவற்றை தங்களின் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கருமை நிறத்தினர் வெயிலில் செல்லும் போது அவர்களின் சருமம் சூரியனின் கதிர் வீச்சால் மேலும் கருப்பாக மாறும். அதனால் அவர்கள் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும். சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ச்ரைசிங் கிரீம் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமத்தினர் வாட்டர் பேஸ் மாய்ச்ரைசர் கிரீம் பயன்படுத்தலாம். அதேபோல் அந்தந்த சருமம் உள்ளவர்கள் அதற்கான பொருட்களை வாங்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்றையும் மறக்கக் கூடாது. அதாவது கிளென்சர், டோனர், மாய்ச்ரைசர். எல்லாவற்றையும் விட முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இவை இரண்டுமே அழகான சருமத்தின் பாதுகாவலன்’’ என்று ஆலோசனை கூறினார் ஸ்ரீ தேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை… இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!(மகளிர் பக்கம்)
Next post சம்மர் மேக்கப்! (மகளிர் பக்கம்)