கடலை இடி உருண்டை…தூயமல்லி பட்டை முறுக்கு…பூங்கார் அரிசி அதிரசம்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 16 Second

தங்குவதற்கு வீடு, உடுத்த உடை இருந்தாலும், இவற்றில் மிகவும் முக்கியமானது நாம் உண்ணும் உணவு. இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய பாரம்பரிய உணவினை எல்லாம் மறந்துவிட்டோம். இன்ஸ்டன்ட் உணவுகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த வாகை விக்டோரியா அவர்கள் பாரம்பரிய தின்பண்டங்களை மரபு மாறாமல் கொடுத்து வருகிறார். இந்த உணவின் சிறப்பம்சமே இவை அனைத்தும் இயற்கை விவசாயம் மூலம் பயிர் செய்யப்படுபவை.

‘‘என்னோட சொந்த ஊர் தஞ்சாவூரில் திருக்கானூர்பட்டி என்ற கிராமம். எங்க கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை தான் என்பதால், ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வரை நான் தஞ்சாவூரில் படிச்சேன். பி.ஏவும் அங்கு தான் படிச்சேன். அதன் பிறகு எம்.ஏ சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படிச்சேன். நாங்க கிராமத்தில் பால் வியாபாரம் தான் செய்து வந்தோம். அதாவது வீடு வீடா சென்று பால் கறந்து, அதை கடைகளுக்கு கொடுத்து வந்தோம்.

என்னுடைய ஒன்பது வயசில் இருந்தே நான் பால் கறந்து வருகிறேன். இதற்காக காலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பால் கறக்க போயிடுவேன். கல்லூரி படிக்கும் போது மாலையும் போய் பால் கறப்பேன். இப்படியே பால் கறப்பது கல்லூரிக்கு போவதுன்னு என்னுடைய காலம் கழிந்தது. அதனால் எனக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கை மேல் விரக்தி ஏற்பட்டது. அதனால் ஒரு இட மாற்றம் வேண்டும்னு நினைச்சேன்.

என் எம்.ஏ படிப்பை சென்னையில் படிக்க விரும்பிதான் லயோலாவில் சேர்ந்தேன். படிப்பு முடிச்சிட்டு எனக்கான ஒரு வேலையை தேடிக்கொண்டு இங்கு நகரத்திலேயே வாழ்க்கையை கழிக்கலாம்னுதான் சென்னைக்கே வந்தேன்.கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் நகர வாழ்க்கைக்கு மாற்றிக் கொள்ள முடியவில்லை. சின்ன வயசில் இருந்த வேலைக்கு சென்றதால் என் உடல் நகர வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது. வயசுக்கு மீறிய உழைப்பு செய்ததால், சின்ன சின்ன வேலைகள் செய்தாலும் என் உடலை சோர்வு பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை. மருத்துவரை சந்தித்தேன். ஒரு பெரிய லிஸ்ட் போட்டு மருந்து கொடுத்தாங்க.

சாப்பாட்டுக்கு சரிசமமா மருந்துகள் சாப்பிட ஆரம்பிச்சேன். ஆனாலும் எனக்கு அதில்பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு நோயாளி போலானேன். எதற்காக சென்னைக்கு வந்தேனோ அந்த எண்ணம் மாறி படிப்பு முடிஞ்சதும் ஊருக்கே போயிட்டேன். அந்த சமயத்தில் நான் நினைத்த ஒரே விஷயம் இனி மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பது தான். அதற்கான மாற்று இயற்கை சார்ந்த உணவுகளில் இருக்குன்னு புத்தகங்கள் படித்து தெரிந்து கொண்டேன். மாத்திரைகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். இயற்கை சார்ந்த உணவு மற்றும் பழக்கவழக்கத்திற்கு மாறினேன். இப்ப நான் மருத்துவமனைக்கு சென்றே ஐந்து வருஷமாகுது’’ என்றவர் தனக்குள் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையை கண்டறிந்து அதற்கான தீர்வினையும் புரிந்து கொண்டுள்ளார்.

‘‘சின்ன வயசில் இருந்தே நான் தூங்கிய நேரம் மிகவும் குறைவு. எவ்வளவு தான் நம்முடைய உடல் அதை ஏற்றுக் கொள்ளும். ஒரு கட்டத்தில் அதை வெளிப்படுத்த தானே செய்யும். முதலில் எனக்கு அது புரியல. மாத்திரைகளை சாப்பிட்டும் என் பிரச்னை தீரவில்லை என்று தெரிந்த பிறகு தான் என்னைப் பற்றி நானே ஆய்வு செய்தேன். நிறைய புத்தகங்கள் படிச்சேன். அப்போது நான் கண்டறிந்த ஒரே விஷயம் தூக்கமின்மையால் ஏற்படும் உடல் உபாதைகள். சரியான தூக்கம் இல்லை என்றால் அது முதலில் வயிறு சார்ந்த பிரச்னையை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது அஜீரண கோளாறு. எனக்கு செரிமான பிரச்னை தான் முக்கிய பிரச்னையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து மாதவிடாய் பிரச்னையும் ஏற்பட்டது.

இதனால் உடல் பருமன். பலர் என் உடல் பருமனைப் பார்த்து கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுவே ஒரு வித மன உளைச்சலை ஏற்படுத்தியது. இயற்கையை மீறி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கான பாதிப்பினை நாம் தான் சந்திக்க வேண்டும் என்பதை என்னுடைய 22 வயதில் புரிந்து கொண்டேன். ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் என்னுடைய உடலில் மாற்றத்தை ஏற்படுத்தியது’’ என்றவர் பனை ஓலை சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

‘‘நகர வாழ்க்கை வேண்டாம் என்று நான் எங்க ஊருக்கே வந்துட்டேன். அங்கு சும்மா இருக்க பிடிக்காமல், பனை ஓலைகள் கொண்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. அவரும் பக்கத்து கிராமம்தான். விவசாயம்தான் செய்து வந்தார். அப்போது தான் உலகம் முழுக்க ஆட்டிப் படைத்த கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. எல்லாரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. என்னுடைய பனை ஓலை தொழிலும் முடங்கி போனது. இரண்டு வருஷம் கொஞ்சம் சிரமமாகத்தான் கழிந்தது. அந்த சமயத்தில் தான் என்னுடைய நண்பர் சத்யன் அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.

அவர் கடலை உருண்டையை உரலில் இடித்து செய்து கொண்டிருந்தார், எனக்கு ஏற்கனவே இயற்கை சார்ந்த உணவு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், எவ்வாறு செய்கிறார் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டேன். என்னுடைய அம்மா வீட்டில் உரல் இருந்ததால் முதலில் சிறிய அளவில் நான் வீட்டில் சாப்பிடுவதற்காக செய்து பார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. கொரோனா காலமும் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தது. அதனால் இதையே தொழிலாக செய்யலாம்ன்னு முடிவு செய்தேன்.

முதலில் கடலை மற்றும் வெல்லம் தரமானதா வாங்கணும். குறிப்பா ரசாயன மருந்து தெளிக்காத இயற்கை முறையில் விளைவித்த கடலையை தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் குறிக்கோளாக இருந்தேன். எங்க அம்மா வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மில் இருக்கு. அங்கு எங்க ஊரில் விளையும் கடலை எல்லாம் உடைக்க வருவாங்க. அவங்களிடம் சொல்லி மானாவரி கடலை (மருந்து அடிக்காதது) வாங்கி அதில் உருண்டையை செய்தேன். அதன் பிறகு இயற்கை விவசாயம் செய்பவர்களை சந்தித்து அவர்களிடமும் கடலை வாங்கி வருகிறேன்.

பொதுவா கடலை உருண்டைக்கு வெல்லத்தை பாகு காய்ச்சி தான் செய்வாங்க. கடலையின் தோலை உரிச்சிடுவாங்க. நாங்க அப்படி செய்ய மாட்டோம். கடலையை சுமார் அரைமணி நேரம் அதன் தோல் கருகாம வறுக்கணும். அதன் பிறகு உரலில் போட்டு இடிப்போம். நல்லா பொடியானதும் வெல்லத்தை தனியாக இடிப்போம். இடிக்கும் போது ஏற்படும் சூட்டில் வெல்லம் சாக்லெட் போல் நல்லா ஜவ்வு மாதிரி வரும். பிறகு கடலை மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கை சூட்டிலேயே உருண்டையா பிடிப்போம். இதே முறையில் தான் எள்ளு இடி உருண்டையும் செய்கிறோம். நன்றாக வறுத்து இடித்து செய்வதால், உருண்டை ஆறு மாசம் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இது தவிர பூங்கார் அரிசியில் அதிரசம் செய்கிறோம்.

பூங்கார் அரிசி பெண்களின் உடலை வலுவாக வைத்துக் கொள்ள உதவும். கர்ப்பப் பைக்கு நல்லது. மாப்பிள்ளை சம்பா முறுக்கு மற்றும் தூயமல்லியில் பட்டை முறுக்கு செய்கிறோம். மேலும் அந்த சமயத்தில் என்ன தானியம் கிடைக்கிறதோ அதில் முறுக்கு மற்றும் இனிப்புகளை செய்து தருகிறோம். உரலைப் பொறுத்தவரை அதை சரியான முறையில் போட தெரியணும்.

இல்லைன்னா கை வலிக்கும். என்னையும் சேர்த்து நான்கு பேர் இருக்கோம், அதில் ஒருத்தர் இடிச்சா இன்னொருத்தர் கடலை வெளியே போகாமல் தள்ளி விடுவாங்க. இப்படி மாற்றி மாற்றி இடிப்போம். கடலைக் கூட மாற்றி மாற்றி தான் வறுப்போம். காரணம் அதில் இருந்து வெளியாகும் வெப்பம் நம் உடலில் உள்ள ரத்தத்தை சுண்ட வச்சிடும். சில சமயம் இடுப்பில் ஈரத்துணிக்கட்டிக் கொண்டு வறுப்போம்.

இரண்டரை வருஷமா செய்து கொண்டு இருக்கேன். பெரிய அளவில் மார்க்கெட்டிங் எல்லாம் செய்யல. ஆனால் சமூக வலைத்தளத்தில் என்ன பலகாரம் இருக்குன்னு பதிவு செய்வேன். அதைப்பார்த்து வாங்குவாங்க. ஆர்டரின் பேரிலும் செய்து தருகிறோம். இங்க இரண்டு கடைகளில் ரெகுலரா இந்த பலகாரங்களை சப்ளை செய்கிறேன். அங்க நல்லா விற்பனையாகுது. எங்களின் பலகாரம் குறித்து கேள்விப்பட்ட தஞ்சாவூர் கலெக்டர் இங்குள்ள உழவர் சந்தையில் ஸ்டால்கள் அமைத்து கொடுத்துள்ளார்.

இப்போது அம்மா வீட்டில் தான் இதை செய்து வருகிறேன். இங்கு தான் உரல் உள்ளது, மேலும் இடமும் விசாலமாக இருக்கும் என்பதால், என்னுடைய பிசினசை இங்கு இருந்து தான் செய்கிறேன். இதை மேலும் பெரிய அளவில் செய்யும் எண்ணம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை நம்முடைய ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவில் தான் உள்ளது. அதை பாரம்பரியம் மாறாமல் சாப்பிட பழகினாலே எந்த நோயும் நம்மை அண்டாது. என்னால் முடிந்த வரை மக்களுக்கு தரமான உணவு கொடுக்கணும் அவ்வளவுதான். அதையும் நேர்மையா உண்மையா கொடுக்கணும்’’ என்றார் வாகை விக்டோரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…!! (மருத்துவம்)
Next post வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)