விலங்குகளோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 42 Second

‘உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளால் காட்டில் வாழ முடியாது. காட்டின் அமைப்பு, அங்கு எப்படி தனக்கான உணவினை தேடிக் கொள்ள வேண்டும் என்ற அனைத்து குணாதிசயங்களை இழந்துதான் இவை பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இங்கு தன்னுடைய அன்றாட உணவிற்கும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்குதான் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகளை கொண்டு வந்துவிட்டோம்.

இதே மாதிரி மத்த விலங்குகளும் கூண்டிற்குள் அடைப்பட்டு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இந்த வேலையை செய்கிறேன்’’ என்கிறார் யாமினி. ராஜபாளையத்தை சேர்ந்த இவர் விலங்குகளை மீட்கும் பணியினை தன் முழு நேர வேலையாக செய்து வருகிறார். எந்த நேரத்தில் அழைத்தாலும், உடனடியாக அங்கு செல்லும் யாமினி, சேவை மனப்பான்மையை தாண்டி அந்த ஜீவராசிகள் மேல் இருக்கும் அன்புதான் அவரை இந்த வேலையில் ஈடுபட செய்துள்ளது.

‘‘சொந்த ஊரு சென்னை தான். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பக்கத்துலதான் என் வீடு. என் பெரியம்மா வண்டலூரில் உள்ள பாம்பு பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாங்க. அம்மாவும் வேலைக்கு செல்வதால், பள்ளி விடுமுறை நாட்களில் அம்மா வேலைக்கு போயிருவாங்க. நான் வீட்டில் தனியா இருப்பேன்னு பெரியம்மா என்ன பாம்பு பண்ணைக்கு கூட்டிட்டு போயிருவாங்க. நாள் முழுக்க பாம்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன். பெரியம்மாவும் எனக்கு ஒவ்வொரு பாம்பு மற்றும் அதன் குணாதிசயங்கள் குறித்து எனக்கு சொல்வாங்க. அதனால எனக்கு பாம்புகள் மீதான பயம் இல்லாம போயிடுச்சு.

எனக்கு இயல்பாவே விலங்குகள் மேல ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அங்கு போன பிறகு விலங்குகள் மேல அளவு கடந்த அன்பு ஏற்பட்டது. தெருவில் உள்ள விலங்குகளுக்கு அடிபட்டு இருந்தால், என்ன செய்யணும், யாரிடம் கொண்டு போகணும்னு எல்லாம் எனக்கு அத்துப்படி. கல்லூரி நாட்களில் படிப்பு என்று பிசியாக இருந்துவிட்டதால், என்னால் வண்டலூர் பூங்காவிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் விலங்குகள் கூடவே இருக்கும் வேலையில் ஈடுபட விரும்பினேன். கல்லூரியில் பயோடெக்னாலஜி படிச்சிருந்தேன். அந்த சமயத்தில் வண்டலூர் பூங்காவில் லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்து கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு போன போது, இந்த வேலையை தேர்வு செய்ய என்ன காரணம்ன்னு கேட்டாங்க. விலங்குகள் மேல் இருக்கும் அன்பு மற்றும் அவர்களுடன் இருக்க பிடிக்கும் என்றேன். எனக்கு வேலையும் கிடைச்சது.

தினமும் விலங்குகளை பார்த்துக்கணும், காட்டுல தாயை இழந்த அல்லது தவறிய குட்டி விலங்குகளை பராமரிக்கணும் இதுதான் என்னுடைய வேலை. முதல்ல ஒரு மான் வந்தது. அந்த மான்குட்டிக்கு தினமும் பாலூட்டுவது, தேவையான உணவுகளை கொடுப்பதுன்னு பராமரிச்சேன். அடுத்து ஒரு நீர் நாய் குட்டி அதையும் பராமரிச்சேன். இப்படி எல்லா விலங்குகளையும் பராமரிச்ச அனுபவம் எனக்கு அங்கதான் கிடைச்சது. பராமரிக்கும் போது நம்மை சில சமயம் தாக்கவும் செய்யும். நான் விலங்குகளை நன்கு பராமரிப்பதை பார்த்த டாக்டர் ஒருவர், வெளிநாட்டில் ஒரு கால்நடை மருத்துவமனைக்கு என்னை வேலைக்காக அழைத்துக் கொண்டு போனார்.

ஆனா, எனக்கு அந்த ஊரின் உணவு ஒத்துக்கல. சில மாதம் அங்க வேலை பார்த்தேன். ஆனாலும் எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அந்த சமயத்தில் ராஜபாளையத்துல ஒரு டிரஸ்ட் இருப்பதாகவும், அங்கு ஒரு கால்நடை மருத்துவமனை இருப்பது குறித்து கேள்விப்பட்டேன். அதனால் வெளிநாட்டில் பார்த்த வேலையை விட்டு விட்டு இந்த அமைப்பு மூலமாக செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன்.

நான் விலங்குகளை பராமரித்து வந்ததால், விலங்குகளை பிடிக்க எனக்கு பயம் கிடையாது. அதனால் என்னை விலங்குகள் மீட்புக் குழுவில் சேர்த்து விட்டாங்க. பாம்புகள் அல்லது விலங்குகள் வீட்டிற்குள் புகுந்தா, எங்களுக்கு அழைப்பு வரும். நான் போய் விலங்குகளை பத்திரமா மீட்டு பாதுகாப்பான இடங்களில் கொண்டு போயி விட்டுடுவோம்’’ என்றவர் தன் காதல் கணவரை கரம் பிடித்தது பற்றி விவரித்தார்.

‘‘ஒருமுறை விலங்கு மீட்கும் பணிக்கு சென்றிருந்த போது தான் என் கணவர் முத்துராஜை அவர்களை சந்தித்தேன். நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவர் கலை மீது ஆர்வம் கொண்டவர். அதனால் எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது. அதேபோல் அவருக்கு நான் விலங்குகள் மேல் காட்டும் அன்பு பிடிச்சதால், என்னை விரும்பினார். இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

பொதுவாகவே பாம்புகளையோ அல்லது வனவிலங்குகளையோ மீட்கும் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு கல்யாணம் ஒன்று நடப்பது அபூர்வமானது. காரணம், ஆண்-பெண் யாராக இருந்தாலும், விலங்குகள் சார்ந்து வேலை செய்யும் போது, அதனால் கிடைக்கக்கூடிய அன்பைப் பற்றி அவர்களுக்கு புரிதல் இருக்காது. ஆண் அல்லது பெண் கொடுக்க யோசிப்பார்கள். இதையும் தாண்டி கல்யாணத்திற்கு சம்மதித்தால், அவர்கள் அதன் பின் அந்த வேலையில் ஈடுபட அனுமதிக்கமாட்டார்கள். என் கணவர் என் வேலைப் பற்றி புரிந்து கொண்டதால், திருமணத்திற்கு பிறகு என் வேலைக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை’’ என்றவர் விலங்குகளை மீட்பது குறித்து விவரித்தார்.

‘‘ வனவிலங்குகள் வழி தவறி வந்தாலோ அல்லது தாயை பிரிந்த குட்டிகள் வருவது இவற்றையெல்லாம் மீட்டு நல்ல உடல் நிலைக்கு கொண்டு வந்து காட்டுக்குள் விட்டு விடுவேன். காட்டு எருமைகள், யானைகள் போன்றவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதுதான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. விலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்து வருவதாலும் காலநிலை மாற்றத்தினால் காடுகளுக்குள் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் காடுகளிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு உணவு தேடி வருகின்றன. அவைகளை மீண்டும் காட்டிற்கு அனுப்பி வைப்போம். சில சமயம் மின்கம்பிகளில் ஆந்தை, கழுகு போன்ற பறவைகள் அடிபட்டு இருக்கும். அவற்றை மீட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை அளித்து மீண்டும் அதோட வாழ்விடங்களிலேயே கொண்டு போய் விட்டு விடுவோம். பறவைகளுக்கு கொடுக்கிற சிகிச்சையை மற்ற விலங்குகளுக்கு கொடுக்க முடியாது.

அதனால் மான், யானை குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் தாய் விலங்கிடம் சேர்த்துவிடுவேன். ராஜபாளையத்தில் குரங்குகள் வீடுகளுக்கு வருவது அன்றாட வாடிக்கை. காரணம் குரங்குகளுக்கு மனிதன் உணவு கொடுத்து பழகிவிட்டிருக்கான். அந்த உணவுகளுக்காகவே இவை மீண்டும் மனிதன் வாழும் இடத்திற்கே வரும். அப்படி வரும் குரங்குகளை மீட்டு நாங்க மீண்டும் அவற்றை காட்டிற்குள் விட்டு விடுவோம்.

அதே மாதிரி பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாக, ஃபோன் செய்வாங்க. உடனே அதை பிடிச்சி வேற இடத்துல விட்டிடுவேன். பொதுவாகவே பாம்புகள் மனிதர்கள் வாழ்ற பகுதிகள்ல தான் வாழும். ஏன்னா பாம்புகள் சாப்பிடக் கூடிய தவளை, எலி, பல்லி போன்றவை எல்லாம் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளில் தான் கிடைக்கும். குறிப்பாக நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் பாம்புகள் அதிகமாக இருக்கும். மக்களுக்கு பாம்புகளை கண்டால் ஒரு வித பயம் ஏற்படுவது இயல்பு.

ஆனால் அவை மிக சாதுவானவை. மேலும் எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது. கண்ணாடி விரியன், கட்டு விரியன், நாகப்பாம்பு, சுருட்டை விரியன், ராஜ நாகம் போன்ற பாம்புகளுக்கு மட்டும் தான் விஷம் இருக்கும். வீடுகளுக்குள் அதிகமா வருவது சாரைப்பாம்பு. இது விஷமற்றது. பாம்புகள் தன்னை தாக்க வந்தால் மட்டுமே தான் கடிக்க வரும். மேலும் இவை விஷத்தை தன் இரையை தவிர வேறு எது மேலயும் செலுத்தாது. அதே சமயம் இரை மேல் விஷம் செலுத்தி அவை இறந்த பிறகு அதனை சாப்பிட்டால்தான் பாம்பிற்கு ஜீரணமாகும். ஒரு முறை பாம்பு விஷத்தை கக்கிய பிறகு மீண்டும் அதன் உடலில் விஷம் ஏற ஒரு நாள்கூட ஆகும்.

அது வரை பட்டினியாகதான் இருக்கும். பாம்புகளை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விடும்போதும் சில பாம்புகள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை அமையாவிட்டால் இறந்து விடும். நாய்களை போல பாம்புகளும் தங்களுக்கென எல்லைகளை வகுத்து கொண்டு வாழும். அந்த எல்லைக்குள் புதிதாக வேற பாம்பு வந்தால் அதனுடன் சண்டையிடும். அதில் ஜெயிக்கும் பாம்பு தான் அந்த இடத்தில் வாழ முடியும். ஆனால் ராஜநாகத்தை பொறுத்தவரை அதனை வேறு இடத்திற்கு கொண்டு சென்றால், உடன் அதன் முட்டையையும் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் அவை அந்த முட்டைகளை எங்கு வைத்துள்ளது என்று கண்டறிவது சிரமம். ஒரு விலங்கை பிடித்து காடுகளுக்குள் விடுவது விலங்குகள் மேல வச்சிருக்கிற அன்பு தான் காரணம். ஒரு உயிரினத்தை ஒரு இடத்தில் வச்சு அடைக்கவோ அதை காட்சிப் பொருளாவோ மாற்றக்கூடாது. அது அந்த விலங்கினை கொல்வதற்கு சமம். விலங்குகள் வாழ்வதற்குரிய வாழ்விடங்களை நாம்தான் உருவாக்க வேண்டும். மனிதருக்கான ஆறறிவு, விலங்குகளோடு எப்படி இணைந்து வாழ வேண்டும் என்பதை யோசிப்பதற்காகத்தான். இனி மேலாவது யோசிப்போம்’’ என்றார் யாமினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பித்தத்தை நீக்கும் புதினா!! (மருத்துவம்)
Next post குழந்தைகளே… சிறகடித்து பறக்க வாங்க! (மகளிர் பக்கம்)