By 18 April 2009 2 Comments

புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை

lttecanadatigerஇலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ‘பயங்கரவாதிகளுக்காக உண்ணாவிரதம் இருத்தல்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 16ம் திகதி அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆக்கமொன்றிலேயே இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக கனேடிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் கனேடிய பாராளுமன்றத்துக்கு அருகில் தமிழர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் புலிக்கொடி ஏந்தப்படுவதை அந்தப் பத்திரிகை கண்டித்துள்ளது. “தீவிரவாத கனேடிய முஸ்லிம்கள். ஹிஸ்புல்லா அல்லது ஹமாஸ் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டம் செய்யும் போது ஏற்படுகின்ற வெறுப்பே தமிழர்கள் புலிக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்யும் போதும் எமக்கு ஏற்படுகிறது” என்று குறிப்பிடும் அந்தப் பத்திரிகை, “அவர்கள் கனேடிய கொடிகளுக்கு அருகில் புலிக்கொடிகளை ஏந்திநிற்பது இன்னும் மோசமான விடயம். அது எமது நாட்டை அவமதிக்கும் செயல்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறது. சிறுவர்களைப் பலவந்தமாகப் போரில் ஈடுபடுத்துகின்ற, அரேபிய நாடுகளில் அறிமுகமாக முன்னரே மோசமான பல பயங்கரவாதத் தாக்குதல்களைச் செய்திருந்த புலிகள் இயக்கத்தின் கொடி கனடாவில் பறக்க விடப்படுவது ஆத்திரமூட்டும் செயல் என்றும் அந்தப் பத்திரிகை சாடியுள்ளது. “நாம் முன்னரும் பல தடவைகள் எழுதியதைப்போல, கொழும்பிலுள்ள சிங்கள மேலாதிக்கம் கொண்ட அரசாங்கத்தினால் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து நாம் அனுதாபம் கொள்ளாமல் இல்லை” என்று மேலும் குறிப்பிடும் அந்தப் பத்திரிகை, தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் மனிதாபிமானமற்ற உத்திகளைக் கடைப்பிடித்திருக்கா விட்டால் தமிழ் மக்கள் நிச்சயமாக தமது கோரிக்கைகளுக்கான உலக அனுதாபத்தைப் பெற்றிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தாலும், கனடாவிலுள்ள பல்வேறு அமைப்புக்களுக்கூடாகவும் விடுதலைப் புலிகளுக்குப் பெருந்தொகைப் பணம் சேர்க்கப்பட்டதாகவும், அவ்வாறு பணம் கொடுக்காத பலரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நசனல் போஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றி, புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட அந்த இயக்கதைச் சேர்ந்த பலரையும் சுற்றிவளைத்திருப்பதாலேயே கனடாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளார்கள் என்று குறிப்பிடும் அந்தப் பத்திரிகை, “உண்மையிலேயே இவர்களுக்கு அங்கே அல்லல்படும் மக்கள் குறித்த அனுதாபம் இருக்குமாயின், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளிடம் கூறவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, சுவிற்ஸர்லாந்து, நோர்வே உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்கள் அடிப்படையில் வடக்கு மக்களின் அவலங்களில் குவிக்கப்படாமல், விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் புலி ஆதரவுப் போராட்டங்களாகக் காணப்படுவதால், அவை எதிர்பார்த்த பயனை மக்களுக்குத் தரவில்லை என்று இந்த நாடுகளின் இராஜதந்திரிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “சரியோ, தவறோ இந்த நாடுகளிலெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பின் கொடியை பாரியளவில் ஏந்திக்கொண்டு போராட்டம் செய்தால், அவை அந்த நாடுகளுக்கு எரிச்சலூட்டுமே தவிர, தமிழ் மக்களின் உண்மையான அவலங்கள், நியாயமான கோரிக்கைகள் மீது அனுதாபத்தைப் பெற்றுத் தராது” என்று அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். “உலக ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தமிழர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது மட்டும் உண்மை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.2 Comments on "புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை"

Trackback | Comments RSS Feed

 1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  தமிழ் ஈழ வெறியிலும் புலி மயக்கத்திலும் இருக்கும் புத்தி பேதலித்த முட்டாள்களால் வேறு என்ன செய்ய முடியும்

 2. Nakeeran says:

  உண்மை… கனடா நாறிப் போய்விட்டது….
  படித்த மனிதரை மட்டும் எடுத்து இருந்தால் இந்த நிலை வருமோ??

  கண்டவன் போனவன், ரவுடி எல்லோரும் அகதி எண்டு வந்து, கனடாவை நாறடிக்கினம் ..

  கனடாவுக்கு இது தேவை தான் ஹிஹி

Post a Comment

Protected by WP Anti Spam