மோதல் பகுதிகளில் மக்கள் பட்டினி: உணவுப் பொருள்களை அனுப்புமாறு புலிகள் கோரிக்கை

Read Time:3 Minute, 51 Second

இலங்கையின் வடபகுதியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பட்டினியைப் போக்குவதற்கு உடனடியாகக் கப்பல்கள் மூலம் உணவுப் பொருள்களை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடபகுதியில் தொடரும் மோதல்களால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு காயப்பட்டுவருவதுடன், பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மமனிதநேயப் பணியாளர்களையும், உணவுப் பொருள்களையும் அனுப்புமாறு இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுமென அந்தக் கடிதத்திலல் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. “கடந்த சில தினங்களில் இந்தப் பகுதியில் 9 பேர் பட்டினியால் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் கொல்லப்படும் அபாயம் உள்ளது” என நடேசன், ஐ.நா. செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதியொன்று தமக்கும் அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மோதல் பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பாமல் இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை இராணுவத்தினர் மீறியிருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஏ.பி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களைப் பயன்படுத்தி அரசாங்கப் படைகள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுப் பலர் காயமடைவதாகவும் புலித்தேவன் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவத்தினரின் எறிகணைகளில் பெருமளவானவை பொதுமக்கள் இருக்கும் பகுதிகளிலேயே வீழ்ந்து வெடிக்கின்றன. இதனால் அவர்கள் தமது இருப்பிடங்கள் மற்றும் பதுங்கு குழிகளை மாற்றவேண்டியுள்ளது. ஷெல் தாக்குதல்களால் மக்கள் வெளியேற அஞ்சுகிறார்கள்” என புலித்தேவன் ஏ.பி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மோதல் பகுதிகளில் மக்கள் பட்டினி: உணவுப் பொருள்களை அனுப்புமாறு புலிகள் கோரிக்கை

  1. புலிகளின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை எடுத்துப்பார்க்கையில் வன்னியில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு விடுதலை போராட்டம் என்பது அடிப்படையில் மக்களுக்கானது. எனவே அது முழுக்க முழுக்க மக்களை சார்ந்தே நிற்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் அகங்கார அதிகார நலன்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகிறது. புலிகள் தமது கேள்விக்கிடமற்ற அதிகார அகங்கார நலன்களையே சுயநிர்ணய உரிமை என்கிறார்கள். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் பட்டுத் துப்பட்டாவினால் புலிகள் தமது குரூர சொரூபத்தை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
    தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
    மக்கள்மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள்மீது அடக்குமுறை செலுத்தும் புலிகள், ஆயுதங்கள்மீது மட்டுமே தமது முழு நம்பிக்கையையும் வைத்து வந்துள்ளனர். மேலும் ஒரு விடுதலை போராட்டத்தின் வெற்றி என்பது தனது பிரதான எதிரி யார்; என்பதை இனம்காண்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் புலிகள் சாதாரண தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களை எதிரியாக தீர்மானித்து, அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த மக்களை மட்டுமல்லாது, நீதியை விரும்பும் அனைத்து மக்கள் உட்பட, சகல வளங்களையும் திரட்டிப் போராடாமல், ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்பதை உலகின் பல விடுதலைப்போராட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட பல போராளிகள், ஜனநாயகவாதிகள், கல்விமான்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து தமது எதேச்சாதிகார ஏகத்தலைமையை மக்கள்மீது திணித்துள்ளனர்
    புலிகள் தாம் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போரிடும் ஒரு இயக்கம் என்று தம்மை சொல்லிக்கொண்டாலும், உண்மையில் புலிகள் அவ்வாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கமானது எல்லா இன மக்கள் மீது கொள்ளவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக, புலிகள் சாதாரண சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக கொலைவெறி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். சிங்கள மக்களின் கிராமங்கள், புத்தகோவில்கள், பஸ்கள், புகைவண்டிகள், சந்தைகள், பஸ்நிலையங்கள், அரசகாரியாலயங்கள் என சகல இடங்களிலும் புலிகள் சிங்கள மக்களை தாக்கியும் கொலைசெய்தும் வருகின்றனர். அதேபோல, சிறுபான்மையினரான, முஸ்லீம் மக்கள் மீதும், தொடர்ச்சியாக தாக்குதல்களை நடாத்தி, புலிகள் அவர்களை படுகொலைசெய்து வருகின்றனர். 1990ல் வடக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லீம் மக்களை ஒரு சில மணித்தியாலயங்களில் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்ததுடன், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புகுந்து தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நுர்ற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டும் கொன்றனர். அத்துடன், தொடர்ச்சியாக முஸ்லீம் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொலைசெய்வதுடன், அவர்களது சொத்துக்களையும் அபகரித்தும், அழித்தும் வருகின்றனர். சிங்கள மக்கள் மீதும், முஸ்லீம் மக்கள் மீதும் புலிகள் மேற்கொள்ளும் இத்தாக்குதல்கள் அப்பட்டமான தமிழ் இனவெறி செயல்பாடுகளேயன்றி வேறொன்றுமல்ல.
    அதேநேரத்தில், புலிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான பல்வேறு விடுதலை இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பனவற்றை அழித்தும், அவற்றின் உறுப்பினர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் வந்துள்ளனர். அத்துடன் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், மனித உரிமைவாதிகள், அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களையும் நூற்றுக்கணக்கில் கொன்றொழித்துள்ளனர். வடக்கு – கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளான – பேச்சு, எழுத்து, கூட்டம் கூடுதல், சுதந்திர நடமாட்டம் போன்ற அனைத்தையும் முற்றுமுழுதாக புலிகள் தடைசெய்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, புலிகள் ஒருபோதும் ஒரு விடுதலை இயக்கமாக இருக்கமுடியாது. உண்மையில் அது, அடிப்படையில் ஒரு தமிழ் இனவாத இயக்கமாகும்.
    மறுபக்கத்தில், புலிகள் தனிநாட்டுக்கான போராட்டம் என்ற போர்வையில் நடாத்தி வருகின்ற அழிவுகரமான யுத்தம், இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை என்பனவற்றுக்கு சவாலாக அமைந்துள்ளதுடன், தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்துவந்த, சாதாரண வாழ்க்கையை கூட சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது. புலிகளின் இந்த யுத்தத்தால், தமிழ்மக்கள் இன்று ஒரு தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து, சொந்த நாட்டிலும், உலகெங்கிலும் ஒர் அகதி கூட்டமாக மாறியுள்ளனர்.
    இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளையும் புலிகள் சீர்குலைத்ததுடன், மீண்டும் மீண்டும் யுத்தப்பாதையையே தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். எமது அயலிலுள்ள நெருங்கிய நட்பு நாடான இந்தியா தலையிட்டு, தமிழ்மக்களுக்கு ஓரளவு நீதியான ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒப்பந்தமொன்றை 1987ல் உருவாக்கியபோதும், பிரேமதாச போன்ற சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து புலிகள் அதை முறியடித்ததுடன், இந்தியாவுடன் யுத்தம் ஒன்றிலும் ஈடுபட்டு, அந்நாட்டின் தலைவரான ராஜீவ் காந்தியையும் கொலைசெய்தனர். அதேபோல, சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டபோதும், புலிகள் அதையும் ஏற்க மறுத்துவிட்டனர்
    புலிகளின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், அவர்கள் ஜனநாயக வரம்புகளுக்குள் உள்ளடக்கப்பட முடியாத, ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து நிற்கிறது. புலிகளை ஜனநாயக முறையில் கையாள்வதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விகண்டுவிட்டன. புலிகளது வரம்பற்ற எதேச்சாதிகார போக்கை கட்டுப்படுத்தும் அல்லது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உள்ள, தமிழ் அமைப்புகளோ தனிமனிதர்களோ எவருமே இன்று தமிழ் சமூகத்தில் கிடையாது. அவர்கள் எல்லோரையும் புலிகள் ஏற்கெனவே கொன்றொழித்துவிட்டனர். புலிகள் அமைப்பு என்பது, இன்று சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமின்றி, தமிழர்களுக்கும் பிரச்சினைக்குரிய ஒர் அமைப்பாகிவிட்டது. மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கு தேவையான சரியான அடிப்படைகளை உருவாக்காமல் நடாத்தப்படும் எந்தவொரு போராட்டமும், இறுதியில் தோல்வியைத் தழுவும் என்பதை புலிகளின் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாறு எடுத்துக்காட்டி நிற்கிறது.

Leave a Reply

Previous post நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம
Next post வன்னியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை