By 19 August 2009 1 Comments

கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!

anitiger020தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, ‘பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார்’ என்பதை அறிவித்து, அடுத்தகட்ட தலைவராகத் தன்னை பிரதானப்படுத்திக் கொண்ட கே.பி., இப்போது இலங்கை ராணுவத்தின் பிடியில்! அவர் பிடிபட்ட விதம் குறித்து சிங்கள ராணுவம் பல்வேறு கதைகளைச் சொன்னாலும், நிஜத்தில் நடந்ததைப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள், சிங்கப்பூரில் உள்ள தமிழீழ ஆர்வலர்கள்.
மர்ம போனும்… மாட்டிய பின்னணியும்!..
”மலேசியாவில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் உள்ள டியூன் ஹோட்டலில் கே.பி., முக்கியமான இருவரை சந்தித்துப் பேசி இருக்கிறார்.  விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த நடேசனின் தம்பியான பாலசிங்கம் பாலேந்திரனும், நடேசனின் மகனும்தான் அந்த முக்கியஸ்தர்கள். அவர்களுடன் கே.பி. பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அதை அட்டெண்ட் பண்ணிப் பேசிய கே.பி., ‘முக்கியமான போன்… அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள்… நான் வெளியே போய் பேசிவிட்டு வருகிறேன்’ எனச் சொன்னபடியே வெளியே போயிருக்கிறார். நடேசனின் தம்பியும், மகனும் இருபது நிமிடங்கள் வரை காத்திருந்து பார்த்திருக்கிறார்கள்.  ஆனால், கே.பி. வரவில்லை. அதன்பிறகுதான் கே.பி. கடத்தப் பட்ட தகவலை அவர்களாலேயே உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. மர்ம போனில் கே.பி-யுடன் யார் பேசினார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. சர்வதேச போலீஸின் துணை இல்லாமலே கடத்தல்காரர்களைப் போல் வந்து, இலங்கையின் ராணுவப் பிரிவினர் ஆடிய சதிராட்டம்தான் இது!” எனச் சொல்கிறார்கள் சிங்கப்பூர் விவரப்புள்ளிகள்.

இலங்கையை அதிரவைத்த அமெரிக்கா!
கே.பி. வளைக்கப்பட்ட பின்னணி குறித்து அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலரிடத்தில் பேசியபோது, ”பிரபாகரனுக்குப் பிறகு ‘இனி ஆயுதப் போராட்டம் இல்லை… அமைதி வழியிலேயே தீர்வு’ என்று அறிவித்து… அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார் கே.பி. இதற்காக உலகநாடுகளின் ஆதரவைக் கோரவும் செய்தார். இந்தக் குரல் ஐக்கியநாடு கள் சபையிலும் ஒலித்து, ‘போர் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னமும் அப்பாவி தமிழர்களை மின்சார கம்பிகளுக்கு நடுவே வைப்பது நியாயமா?’ என பல நாடுகளையும் கேள்வி எழுப்ப வைத்தது. இதனால் ஈழத்தமிழர்களின் தீவிர ஆதரவாளரான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டன், இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தார். அதிபர் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத் துறை அமைச்சகக் கூட்டத்தில் இலங்கையை கடுமையாகச் சாடினார். அதோடு, ‘விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் மீதான தடையை ஏன் அகற்றக் கூடாது?’ என்கிற கேள்வியையும் அமெரிக்க காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்கள் கேட்கத் தொடங்கினார்கள்.
ஜனநாயகப் பாதையில் ஈழப்போராட்டம்தொடங் கினால், அதனை ஆதரிக்கவும் அமெரிக்காதயாரானது. சமீபத்தில் இந்தியா வந்த ஹிலாரி கிளின்ட்டன், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இதுகுறித்து விவாதித்துள்ளார். இந்த விஷயமறிந்துதான் இலங்கை அரசு பதறத் தொடங்கி இருக்கிறது. கே.பி. தலைமையில் ஈழத் தமிழர்கள், அமைதியையே அஸ்திரமாக்கிப் போராடத் துணிவார்கள் என்பதை இலங்கை எதிர்பார்க்கவில்லை. ‘தீவிரவாதம்’ என்ற சொல்லை வியாபாரம் ஆக்கிவந்த ராஜபக் ஷேவுக்கு கே.பி-யின் மிதவாத மூவ் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால்தான் அதிரடியாக அவரைக் கைது செய்துவிட்டார்கள்!” எனச் சொன்னார்கள்.

கே.பி. உயிருக்கு குறி!

”பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு இரண்டுபட்ட புலிகள் இயக்கம் கே.பி. மற்றும் ருத்ரகுமாரன் தலைமை யில் ஒரு அணியாகவும், காஸ்ட்ரோ மற்றும் நெடியலன் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் ருத்ரகுமாரன், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக இருந்தார். எப்படியாவது இதைத் தடுக்க நினைத்த இலங்கை, காஸ்ட்ரோ குழுவினரை கருணா வழியாகத் தொடர்பு கொண்டு அணுகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராக இந்திய அரசும் கே.பி. மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இதையெல்லாம் கணக்குப் போட்டுத் தான் கே.பி-யை சிங்கள அரசு சர்வதேச உளவு அமைப்புகளுடன் கைகோத்து வளைத்திருக்கிறது.

விசாரணை என்கிற பெயரில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் கே.பி-யின் உயிருக்கு எந்த நேரத்திலும் இலங்கை ராணுவம் முடிவு கட்டக் கூடும். இப்போதே கே.பி. ஏகப்பட்ட சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.  கே.பி. கைது குறித்து சர்வதேச அளவில் பிரஷர் ஏதாவது வந்தால், அவரைத் தடாலடியாக இந்தியாவிடம் ஒப்படைத்து, வீணான தலைவலியைக் கொடுக்கவும் இலங்கை திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவை வைத்துத் தன்னுடையை நெருக்கடியைக் குறைத்துக் கொள்ளும் திட்டமே இது..!” என்கிறார், அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர்.
பதறும் வைகோ.. ”மயக்க மருந்தும்…. மிருக வெறியும்…

மூலிகை சிகிச்சைக்காக கேரளாவில் தங்கி இருக்கும் வைகோவிடம் கே.பி. கைது குறித்தும், தனி ஈழப் போராட்டத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினோம். ”உலக மனுதர்மங்களை காலில் போட்டு நசுக்கி விட்டு, பேட்டை ரவுடிகளைப் போல மாறி சிங்கள அரசு கே.பி-யை கடத்தி இருக்கிறது. சர்வதேசங்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த அத்துமீறலை சிங்கள வெறியர்கள் நடத்தி இருக்கிறார்கள். நடேசனின் ரத்த உறவுகளிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கே.பி-யை மர்ம போன் மூலமாக யாரோ வெளியே அழைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.

நான் விசாரித்த மட்டும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த கே.பி-யை மயக்க மருந்து மூலமாக சுயநினைவு இழக்க வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, வீல் சேர் மூலமாக ஹோட்டலை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கிறார்கள். மயக்கம் தெளியாத நிலையிலேயேதான் கே.பி. விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார். ‘கே.பி-யை கண்டவுடன் நாங்கள் சுட்டுக் கொல்லத்தான் நினைத்தோம். ஆனால், சூழ்நிலைகள் சரியாக இல்லாததால்தான் கே.பி-யை உயிருடன் கொண்டு வரவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டு விட்டது!’ என ஒரு சிங்கள அதிகாரியே சொல்லி இருக்கிறார். நாளைக்கு தமிழகத்துக்கே வந்து யாரையும் கடத்திக் கொண்டு போக, சிங்கள ராணுவம் துணியாது என்பது என்ன நிச்சயம்?” எனக் கொந்தளித்த வைகோ, சமீபத்தில் ஈழத்தில் நடத்தப்பட்ட இன்னொரு துயரத்தையும் வேதனையோடு சொன்னார்.

”ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், யோகி, கரிகாலன் என தமிழுலகுக்கு வரமாகக் கிடைத்த வைரங்களை சிங்கள அரசு சித்ரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருந்தது. சில தினங்களுக்கு முன் அவர்களைக் கொலை செய்யவும் சிங்கள ராணுவம் துணிந்து விட்டதாக செய்திகள் வந்தபோது, என் இதயத்து நரம்புகளே அறுந்து போய் விட்டன. ஆற்றாமையும், வேதனையும் என் நெஞ்சத்தை சுக்குச் சுக்காக தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!” என்று குரல் கம்மியபடி சொன்னார் வைகோ.

காட்டிக் கொடுக்கப்பட்டாரா?

”கே.பி-க்கும் புலிகளின் இன்னொரு பிரிவுத் தலைவரான நெடியலனுக்கும் சில நாட்களாகவே மனஸ்தாபங்கள் இருந்து வந்ததாகவும், ‘ஆயுதப் போராட்டம் இல்லாமலே அரசியல்ரீதியான நடவடிக்கைகள் மூலம், தமிழீழம் அமைக்க முடியும்’ என்று கே.பி. கூறி வந்தது, நெடியலன் போன்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. லண்டனில் இருக்கும் புலிகளின் சொத்துகளை அடைவதற்கான போட்டியில் கே.பி. சிக்க வைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில், மலேசியாவில் உள்ள சில இந்து சமயம் சார்ந்த அமைப்புகள் எல்.டி.டி.ஈ. போன்ற, தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு அமைதியைக் குலைக்க முயல்வதாக மலேசிய அரசுக்கு உளவுத் தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதோடு, மலேசியாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர், லிபியாவுடன் ஆயுதப் பரிவர்த்தனையில் தொடர்பு வைத்துள்ளதாக எச்சரித்த சிங்கள அரசு, ‘புலிகளின் நடவடிக்கைகளை மலேசியாவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், அது தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற் றுக்கும் எதிர்காலத்தில் தலை வலியாக அமைந்து விடும்’ என்றும் பயம் காட்டியது. ஆனால், மலேசிய அரசு அதையெல்லாம் சட்டை செய்து கொள்ளவில்லை.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில், தன்னுடைய ரகசிய உளவாளிகளை ஏகத்துக்கும் இறக்கிவிட்டு, தானே நேரடியாக கே.பி. உள்ளிட்டவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியது இலங்கை. கே.பி-க்கு எதிரான சில தமிழர்களின் மூலமாகவே அவருடைய நடமாட்டத்தை அறிந்து, வலை விரித்துப் பிடித்திருக்கிறது சிங்கள அரசு.

மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்தால், மலேசியாவில் தங்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களால் பிரச்னைகள் அரங்கேறக் கூடும் என்பதை யூகித்துத்தான் தாய்லாந்தில் கைது நடந்ததாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை, தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலமாக இலங்கை அரசு பரப்பிவிட்டிருக்கிறது…” என்கிறார்கள்.

கிடுகிடுக்க வைக்கும் கே.பி.!

கே.பி-யின் இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் அவருடைய வளர்ச்சி குறித்தும் விசாரிக்கத் தொடங்கினால், கிடுகிடு ஹிஸ்டரியை ஒப்பிக் கிறார்கள், நடுநிலையான உளவுப் புள்ளிகள்…
”பிரபாகரனின் நம்பகத்துக்குரிய கே.பி., அவருடைய உறவினரும்கூட. அதனால் புலிகளின் வெளியுலக விவகாரங்களையும், ஆயுதக் கொள்முதலையும் நிர்வகிக்க பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் கே.பி. 1987-ல் மலேசியாவில் ஒரு கப்பல் நிறுவனத்தை தொடங்கிய கே.பி-க்கு, அங்கே நிரந்தரமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது புலிகளின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்த மலேசிய அரசு, தேடுதல் வேட்டையையும் தீவிரப்படுத்தியது. அதனால் கே.பி. தாய்லாந்துக்கு பறந்தார். ஏகப்பட்ட பாஸ்போர்ட் களுடன் உலகத்தின் எந்த திசையில் உள்ள நாட்டுக்கும் சர்வசாதாரணமாக சென்று வரக்கூடிய வல்லமை படைத்த வராக விளங்கினார்.
2007-ல் ஒருமுறை தாய்லாந்து அரசால் கே.பி. கைது செய்யப்பட்ட போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்திய அரசு அவரை ஒப்படைக்கக் கோரியது. ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே கே.பி. வெளியே வந்தார். அந்தளவுக்கு தாய்லாந்து அரசின் சகலதுறைகளிலும் தனக்கான ஆட்களை உருவாக்கி வைத்திருந்தார். பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு, புலிகளுடைய சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை கொண்டவராக கே.பி-தான் கருதப்பட்டார். 30.1.09-ம் தேதியன்று புலிகளின் சர்வதேச தொடர்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி., லெபனான், தாய்லாந்து, கிரீஸ், சைப்ரஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் பயணித்து, சர்வதேச தொடர்புகளில் கில்லாடியாக விளங்கினார்.
ஆயுதச் சந்தைகளில் சர்வபல செல்வாக்குப் பெற்ற கே.பி., தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நிறைய கப்பல்களை வைத்துக் கடல் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வந்தார். வெவ்வேறு தோற்றங்களிலும் பெயர்களிலும் மிக ஜாக்கிரதையாக உலவிய கே.பி., புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘பிரபாகரன், பொட்டு அம்மானைக் காட்டிலும் கே.பி-தான் கொடூரமானவர்’ என இலங்கையின் பயங்கரவாத தடுப்பு நிபுணரான ரொகர் குணரத்ன அறிவித்தார். அதன் பின்னர்தான் இலங்கை ராணுவ மேஜர் ஜெனரலான பெரேரோ ‘ஆபரேஷன் கே.பி.’ திட்டத்தை ரகசியமாகத் தீட்டத் தொடங்கினார். அந்தத் திட்டம் இவ்வளவு சீக்கிரத்தில் சக்சஸ் ஆகுமென்று இலங்கை அரசே நினைத்திருக்காது…” எனச் சொல்கிறார்கள் வியப்பு குறையாமல்.

கே.பி. வெளியிடப் போகும் பகீர்!

மலேசியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கே.பி-யை கட்டுநாயகா விமான நிலையத்தில் இருந்து ரகசிய இடத்துக்கு ராணுவத் தரப்பினர் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரிடத்தில் நடத்தப்படும் விசாரணை குறித்து, கொழும்பு பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.
”கே.பி-யைப் பிடித்ததன் மூலமாக இலங்கைக்கு வெளியே தமிழீழ அரசு அமைக்க நடந்த முயற்சிகளை வேரோடு அழித்து விட்டதாக ராணுவம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தற்போது ரகசிய அறையில் வைத்து கே.பி-யை கடுமையான முறையில் விசாரிக்கும் ராணுவ அதிகாரிகள், பல ரகசியங்களை அவரிடமிருந்து கறந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் சொத்துகள், ஆயுதங்கள், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தெல்லாம் ஆரம்பகட்ட விசாரணையிலேயே கே.பி. நிறைய தகவல்களைக் கொட்டி இருக்கிறாராம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கே.பி., ராணுவ சித்ரவதைகளை எதிர்கொள்ள முடியாமல் அடிக்கடி மயக்கமாகி விடுகிறாராம். ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதித் திட்டங்கள், இறுதிக்கட்ட பேச்சு, தமிழகத் தொடர்பு, உலகளாவிய நட்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்போது அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் எங்களிடம் பேசிய சில ராணுவ அதிகாரிகள், ‘பிரபாகரனின் கொடூர முகத்தை கே.பி. மூலமாகவே உலகத்துக்கு வெளிச்சமிடுவோம்’ எனச் சொன்னார்கள். கே.பி-யை பெரிய அளவில் டார்ச்சர் செய்து, அவருடைய வாக்குமூலமாக சில செய்திகளை வெளியிட்டு, உலகத் தமிழர்களையே அதிர வைக்க ராணுவத் தரப்பு தயாராகி விட்டது. மே 18-ம் தேதி பிரபாகரன் கடைசியாக கே.பி-யிடம் பேசிய விவரங்களாக என்னென்ன கட்டுக்கதைகள் ராணுவத்தால் கிளப்பப்படப் போகிறதோ…” எனச் சொன்னார்கள் கொழும்பு பத்திரிகை யாளர்கள்.

அடுத்த தலைவர் யார்?

கே.பி. கைதுக்குப் பிறகு தமிழ் ஈழ முயற்சிகள் முடங்கிவிடாதபடி புலிகளின் புதிய தலைவராகச் செயல்படப் போவது யார் என்கிற பட்டிமன்றம் இப்போதே பரபரக்கத் தொடங்கி விட்டது. கனடா வில் உள்ள ஈழத்தமிழர் தலைவரான டேவிட் பூபாலபிள்ளை, லண்டன்வாழ் ஈழத்தமிழரான முனைவர் அம்பலவாணன் சிவானந்தன் ஆகியோரின் பெயர்கள் இப்போதைக்கு தீவிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி,
சென்னையிலிருந்து இரா. சரவணன்,
சிங்கப்பூரிலிருந்து ஏ. ஆதித்யன்1 Comment on "கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!"

Trackback | Comments RSS Feed

 1. ganesh says:

  hi..
  have you read SUNADAY TIMES ON 16/08/09.
  PLEASE READ.. about K.P
  ITS GOT MORE news for YOU.
  (IDIOT)

Post a Comment

Protected by WP Anti Spam