கூடுவாஞ்சேரி அருகே குடிசைக்கு தீ
ஊரப்பாக்கம் அடுத்த காரணைப் புதுச்சேரி ஊராட்சி காளியப்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (60), கார் மெக்கானிக். மனைவி சுலோசனா (55). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி ஆனந்தன் (38) & ரேவதி (32). இவர்கள் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அருகே உள்ள அனுமந்தபுரம் கோயிலுக்கு சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், இவர்களது ஓட்டு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். அருகில் இருந்த குடிசைக்கும் தீ வைத்தனர். குடிசையில் இருந்த ஜன்னல், கதவு, சைக்கிள் போன்றவை தீயில் எரிந்து நாசமானது.கோயிலுக்கு சென்றவர்கள் நேற்று திரும்பி வந்தபோது, வீடு தரைமட்டமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.