வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களை குறிவைத்து; பொலிஸார் எனக் கூறி நகை, பணம் கொள்ளை!

Read Time:6 Minute, 28 Second

stolen-008பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்றும் வீட்டைச் சோதனையிடப் போவதாகவும் கூறிக்கொண்டு கொழும்பு புறநகர் கல்கிஸை ஜனத்தா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூவர் வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் அறையொன்றுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று காலை 11 மணியளவில் வந்த கொள்ளையர்களே தமது கைவரிசையைக் காட்டித் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த வீட்டில் 70 வயதான வயோதிபப் பெண் ஒருவரும் மேலும் மூன்று பெண்களும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினம் மேற்படி வயதான வயோதிபப் பெண்ணின் கனடாவில் இருக்கும் மகனின் பெயரைக் கூறிக் கொண்டு வந்த மூவர் தாங்கள் பொலிஸில் இருந்து வந்திருப்பதாகவும் அவரது மகன் கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே வீட்டைச் சோதனையிடவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, அந்த மூவரில் ஒருவரது கையில் கைவிலங்கு ஒன்றும் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் என நம்பிய அந்த வயோதிபப் பெண் கதவைத் திறந்துள்ளார்.

உள்ளே நுழைந்த அவர்கள் அனைவரையும் சோதனையிட வேண்டும் எனவும் முதலில் வீட்டைச் சோதனையிடும் வகையில் தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் குறித்த மாடி வீட்டில் இரு தளங்களையும் சல்லடையிட்டு சோதனை நடத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி அவர்களின் பெயர் விபரங்கள் அனைத்தையும் கேட்டு பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மேலும், அந்த வயோதிபப் பெண்ணிடம் இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் அவரது உறவினரான பெண்ணிடம் இருந்த நகைகள் அடங்கிய பை மற்றும் சுமார் 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் என்பவற்றை தேடிப் பெற்றுக் கொண்டதுடன் அவற்றை பட்டியல் இடப் போவதாகவும் கூறி மேசையில் வைக்குமாறும் தெரிவித்ததுடன், அனைவரையும் அறை ஒன்றுக்குள் போகுமாறும் பணித்துள்ளனர்.

அன்றைய தினம் குறித்த வயோதிபப் பெண்ணின் கணவரின் ஆண்டுத் திவசம் அனுஷ்டிக்கபட இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குறித்த வயோதிபப் பெண்ணுக்கு சந்தேகம் எழவே அவர் அம் மூவருடனும் வாயாடியுள்ளார். இதனையடுத்து அந்த மூவரில் ஒருவர் அவரது வாயில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டி அறைக்குள் தள்ளிச் சென்று அவரை இருத்தியுள்ளார்.

இவ்வாறு அனைவரையும் மிரட்டி குறித்த அறைக்குள் போட்டுவிட்டு அந்த மூவரும் அறையை பூட்டிய பின் தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் கூக்குரலிடவே அயல் வீட்டவர்கள் வந்து அறையைத் திறந்து அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

குறித்த வான் ஜனத்தா மாவத்தையில் இருந்து பீரிஸ் மாவத்தை ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மறுநாள் கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற பஸ்பண்டி ஒன்றிலிருந்து வெற்றுப் பணப்பையும் தேசிய அடையாள அட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் தனிமையில் வசிக்கும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களின் உறவினர்களை குறிவைத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்றதொரு மற்றொரு சம்பவமும் அண்மையில் இப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வங்கிகள் மூலமும் உண்டியல்கள் மூலமும் பணம் அனுப்பி வைக்கப்படும்போதும், மற்றும் வங்கிகளிலிருந்து பணம் மீளப் பெறப்படும் போதும் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களின் பெயர் விபரங்கள் பரிமாறப்படுவதனால் அதனை வைத்துக் கொண்டே இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, வீட்டைச் சோதனை இட வேண்டுமெனக் கூறி வருபவர் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கும் பொலிஸார் எவராவது இவ்வாறு கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கல்கிஸைப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலுடன் பிறந்த அனுமானின் அவதாரம் : இந்திய பக்தர்கள் பெருமிதம் (video)
Next post மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டிய மணப்பெண்