By 11 October 2014 0 Comments

லாட்டரியில் ரூ. இரண்டரை கோடி பரிசு விழுந்ததாக ரூ.65 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமி கைது!!

c5d2ac17-c34a-4ec6-b3f0-b50fc5ff9c6c_S_secvpfநாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக, மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என மனிதர்களின் அனைத்து தேவைகளையும் வீண் அலைச்சலின்றி அமர்ந்த இடத்தில் இருந்தே வெகுசுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

இந்த தொழில்நுட்ப புரட்சி பல கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் அதே வேளையில், சில ஊடுருவல் (ஹேக்கிங்) பேர்வழிகளுக்கும் காமதேனுவாக இருந்து வருகிறது.

குறிப்பாக நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சில சமூக விரோதிகள், இந்தியர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக இணையதள மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும்போது அவர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள விபரங்களை இந்த பலே பேர்வழிகள் திருடி விடுகின்றனர்.

இதற்காக, ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் போடும் ஊழியர்களை நட்பாக்கிக் கொள்ளும் இவர்கள், அவர்களின் துணையுடன் இயந்திரத்திற்குள் அட்டையை செலுத்தும் நுழைவாயில்களின் பின்புறத்தில் மிகவும் நுட்பமான ரகசிய ‘மைக்ரோ கேமரா’க்களை பொருத்தி, பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் அட்டையில் உள்ள 12 இலக்க ரகசிய கணக்கு விபரங்களை அந்த மைக்ரோ கேமரா வழியாக அமர்ந்த இடத்தில் இருந்தே பதிவு செய்து கொள்கின்றனர்.

அதில் உள்ள தகவல்களின்படி, உடனடியாக போலி அட்டைகளை தயாரித்து, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுரண்டி, துடைத்து விடுகின்றனர். இது மோசடியில் முதல் ரகம்.

இரண்டாவது ரகமாக, ‘ஆன்லைன்’ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் இணைய பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை அவர்களது கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவுவதின் மூலம் உளவறிந்து, அந்த கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) பயன்படுத்தி அவரது பணத்தை சூறையாடுவதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு வெளிநாட்டு லாட்டரி குலுக்கலில் பல நூறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகவும் ‘பிராஸஸிங் ஃபீஸ்’ ஆக சில லட்சம் ரூபாயை செலுத்தினால், பரிசுக்குரிய பணத்தை ஒரு ’பெரிய வேனில் ஏற்றி’ அனுப்பி வைப்பதாகவும் இவர்கள் மோசடி வலை விரிக்கின்றனர்.

இவ்வகையில், குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற கப்பல் நிறுவன மேனேஜரிடம் 65 லட்சத்து 76 ஆயிரத்து 790 ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு ஆன் லைன் லாட்டரியில் அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக அறிவித்த ஒரு நைஜீரிய கும்பல், அந்த பரிசை உறுதிப்படுத்திக் கொள்ள வும், பணத்தை இந்தியாவில் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவும், முதல் தவணையாக 10 அயிரத்து 500 ரூபாயை வங்கியில் செலுத்தும்படி கூறியது.

இதை நம்பிய அந்த முன்னாள் மேனேஜரும் அவ்வாறே செய்தார். பின்னர், இந்த பரிசுத் தொகையை பெறுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்காக என்றும், அடுத்தடுத்து, பல்வேறு காரணங்களை கூறியும் டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல வங்கிகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்யும்படி அவர்கள் ஆசை காட்டினார்கள்.

பரிசு தொகையை அடைய விரும்பியவர், அவர்கள் கூறியவாறு எல்லாம் செய்தும், அடுத்தடுத்து அவரிடம் இருந்தும் பணம் கறப்பதில் மட்டுமே அந்த மோசடி கும்பல் குறியாய் இருந்தது.

இதை அந்நபர் உணர்ந்துக் கொள்வதற்குள் சுமார் 65 லட்சம் ரூபாய் கரைந்துப் போனதை அறிந்ததும், இந்த மோசடி தொடர்பாக அவர் சூரத் நகர போலீசில் புகார் அளித்தார்.

குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, குற்றவாளிகள் டெல்லியில் இருந்து இயங்கி வருவதாக தெரியவந்தது. இதனையடுத்து, டெல்லிக்கு விரைந்த குஜராத் போலீசார், எஸேகா மைக்கேல் ச்ஹுக் வ்னேமே கே(47) என்ற ஆசாமியை கைது செய்து குஜராத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Post a Comment

Protected by WP Anti Spam