ஜெ.க்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர்!!

Read Time:5 Minute, 38 Second

1543032351Untitled-1ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரை பின்தொடர்ந்து சென்று வீடியோ எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 27-ம் திகதி பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் பிணை கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி ஏ.வி.சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.வி.சந்திரசேகர், ´ஊழல் என்பது மனித உரிமைக்கு எதிரானது. பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடியது. நாட்டின் எந்த மூலையில் ஊழல் நடந்தாலும் கருணை காட்டமுடியாது´´ என தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு நீதிபதி ஏ.வி.சந்திரசேகர் வீட்டிற்கு புறப்பட்டார். அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் சென்று கொண்டிருந்தார்.

நீதிபதி சந்திரசேகரின் காரை விட்டல் மல்லையா சாலையில் தொடங்கி லால்பாக் சதுக்கம் வரை ஒரு கார் பின் தொடர்ந்து சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த நீதிபதி சந்திரசேகர், லால்பாக் சிக்னலில் அந்த காரை உற்றுக் கவனித்தபோது அதில் ஒரு வாலிபர் த‌னது செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த நீதிபதி பாதுகாவலரிடம் அந்த காரை மடக்கி பிடிக்குமாறு உத்தரவிட்டார். பாதுகாவலர் இறங்கி சென்று காரை வழிமறித்தபோது அவர்கள் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.

இருப்பினும் காரின் பதிவெண்ணை குறித்துக்கொண்ட நீதிபதியின் பாதுகாவலர் இது தொடர்பாக வில்சன் கார்டன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

காரின் பதிவெண்ணைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோரமங்களாவில் வசிக்கும் ராஜேஷ் ரெட்டி (28) என்பவரையும் காரின் சாரதி அசோக் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 353 (அரசு ஊழியருக்கு தொந்தரவு கொடுத்தது) மற்றும் 341 (தவறான உள்நோக்கத்துடன் நடந்துகொண்டது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் பொலிஸார் இரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். வீடியோ எடுத்த ராஜேஷ் ரெட்டி கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்பதும் அவர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் நீதிபதியை வீடியோ எடுத்த விவகாரத்தில் அதிமுகவினருடன் தொடர்பு இருக்கிறதா? அல்லது கூலிக்காக இவ்வாறு செய்தார்களா? அல்லது வேறு சில வழக்குகளுக்காக நீதிபதி ஏ.வி.சந்திரசேகர் வேவு பார்க்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

அவர்களிடம் இருந்த தொலைபேசி, லேப்டாப், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பெங்களூர் பொலிஸார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நீதிபதியை பின் தொடர்ந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து பெங்களூர் (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீலிடம் கேட்டபோது,

´´இப்போதைக்கு எந்த தகவலும் சொல்லமுடியாது. 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைதானவர்களுக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை. தேவையில்லாமல் அரசியல் பிரச்சினையை கிளப்பாதீர்கள்´´ என்றார்.

மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு வருகிற 27-ம் திகதி விசாரணைக்கு வருகிறது. அதனை நீதிபதி ஏ.வி.சந்திரசேகர் விசாரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.​

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமாக காரோட்டிய பெண் சிறையில்!!
Next post போ… நான் கோபமா இருக்கேன்…!!