வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நிராகரிப்பு: எம்.பி.யோகராஜன் கவலை!!

Read Time:4 Minute, 12 Second

r.yogarajan_0_4அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பற்றியோ அவர்கள் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் கவலை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50,000 வீட்டுத் திட்டம் கடந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அந்த திட்டத்தை முன்னெடுக்காத இந்த அரசாங்கம் இம்முறை மலையக மக்களை முற்றாக நிராகரித்திருப்பதானது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

அடுத்த வருடத்துக்காக சமர்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனித்தனி வீடுகளை கட்டித்தருவதாக இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. அத்தோடு கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் 50,000 வீடுகளை கட்டித்தருவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் இதுவரை நடந்தபாடில்லை.

தனியார் துறையினரையும் இந்த அரசாங்கம் கருத்திற்கொள்ள வில்லையென்றே சொல்ல வேண்டும். தனியார் துறையினருக்கு 10,000 ரூபா குறைந்த பட்சம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. அப்படி பார்க்கின்ற போது பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை குறைப்பது போன்ற ஒரு நிலைமையையே இது காட்டுகிறது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் போது உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு மாதத்திற்கு தலா ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் எந்தவொரு உள்ளூராட்சி சபைக்கும் இந்த ஒரு மில்லியன் தொகையானது மாதாந்தம் ஒதுக்கப்படவில்லையென்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான மாதாந்த ஒதுக்கீட்டை இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனவே, அரசாங்கம் மொத்தத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளது. எனவே இந்த வரவு – செலவுத் திட்டம் தேர்தலை இலக்குவைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது.

கவனிப்பாரற்று கிடக்கும் பெருந்தோட்ட காணிகளை கையேற்கப் போவதாக கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையே இம்முறை வரவு- செலவு திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வாறு கவனிப்பாரற்று கிடக்கும் பெருந்தோட்டங்களை கையேற்று அதனை பாதுகாக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை: பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்!!
Next post விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு!!