By 3 December 2014 0 Comments

இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…! – எஸ். ஹமீத்

mus.leaders-01இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும் ஊகிக்கக் கூடுமாயிருக்கிற ஓர் அரசியல் ஆரூடம் இது.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு’ இப்படித்தான் இந்த முஸ்லிம் கட்சிகளின் இறுதி முடிவு அமையப் போகிறது.

இவ்வாறு ஹேஷ்யம் கூறுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதிற் பிரதானமானது பயம். மகிந்தவைப் பற்றியும் அவரது சகோதரர் கோத்தபாய பற்றியும் இவர்களிடமிருக்கும் அந்த அதீத பயம்தான் முதலாவதும் முக்கியமானதுமான காரணம்.

தனது வெற்றிக்காக எதையும் செய்யும் துணிச்சலும் சண்டித்தனமும் மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் இருப்பதாக நம்பி இந்த முஸ்லிம் தலைவர்கள் தொடை நடுங்குவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஒருவேளை தாம் மைத்திரிக்கு ஆதரவளித்தும் மகிந்த வென்றுவிட்டால் மிக மோசமான பழிவாங்குதல்களுக்குத் தாமும் தம்மைச் சார்ந்தவர்களும் ஆளாக நேரிடுமென்ற அந்த அச்சத்தின் காரணமாக ,இவர்களது இறுதித் தீர்மானம் மகிந்தவுக்கு ஆதரவாகவே இருக்கும்.

இரண்டாவது மைத்திரியோடு இணைந்து கொள்ள இருக்கும் சாவகாசம் அல்லது கால அவகாசம். தாம் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி,ஒருவேளை மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்டாலும் கூட இவர்களுக்கு அது அரசியல் ரீதியான இலாபம்தான். ஏனெனில் இருக்கவே இருக்கிறது தொடர்ந்து வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தல்.

சாவகாசமாக அத்தேர்தலில் தமது ஆதரவை மைத்திரிக்கு வழங்கிக் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது இவர்களின் இப்போதைய கணிப்பீடு.

இது எப்படிச் சாத்தியமெனில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வென்றால் கூட அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவருக்குச் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு நிச்சயமாகத் தேவைப்படும்.

அதனால், தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்காதவர்களையும் அணைத்துக் கொண்டு ஒரு பலமுள்ள அரசாங்கத்தை அமைக்கவே அவர் முடிவு செய்வார்.

எனவே அப்போது மைத்திரிக்கு ஆதரவை வழங்கிக் கொள்ளலாம் என்று இந்த முஸ்லிம் கட்சிகள் இப்போது முடிவு செய்து விட்டன. இந்த முடிவு இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

இதனை இன்னொரு கோணத்திலும் சொல்லலாம். அதாவது ‘மைத்திரிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வழங்கிக் கொள்ளலாம். அதனால் எந்த நட்டமும் ஆபத்துக்களும் ஏற்பட்டுவிடப் போவதில்லை’ என நம்பும் இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் – அல்லது இக் கட்சிகளிலுள்ள பெரும்பாலோனோர், மகிந்தவுக்கு இப்போது ஆதரவு வழங்கா விட்டால் அதன் பின்னர் எப்போதும் ஆதரவு வழங்க முடியாது என்பதோடு மிக மோசமான விளைவுகளுக்கும் உள்ளாகலாமென எண்ணுகிறார்கள்.

இந்த எண்ணத்தின் வெளிப்பாடாக ‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு’ என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளிவருமென்று நம்பலாம்.

உண்மையிலேயே , இலங்கை முஸ்லிம் உம்மத்தின் ஆதங்கம் வேறு மாதிரியாகவிருக்கிறது. மிகப் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள் தமது சமூகத்தின் மீது கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாயங்களுக்கெதிரான குரலாகத் தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

பொதுபல சேனா செய்த அட்டூழியங்களின் பின்னணியில் இருந்ததாக அவர்கள் நம்பும் ஜனாதிபதிக்கெதிராகத் தமது வாக்கைப் பாவித்து ‘வஞ்சம்’ தீர்க்க முயல்கிறார்கள். தமது ஆத்திரத்தை-எதிர்ப்பை-அதிருப்தியை-மனக் குமுறலை வாக்காயுதத்தின் மூலம் வெளிப்படுத்த எண்ணுகிறார்கள்.

அவ்வாறான ஒரு மன நிலைமையில்தான் இந்தக் கட்டுரையாளனும் காணப்படுகின்றான். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் எண்ணங்களுக்கப்பால் தமது சொந்த இருப்புப் பற்றியும் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளதே!

எல்லாவற்றையும் அலசிப் பார்க்கும் போது நமது அரசியற் கட்சிகளின் முடிவு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘மகிந்தவுக்கே ஆதரவு’ என்றுதான் இருக்கும்.

– எஸ். ஹமீத்Post a Comment

Protected by WP Anti Spam