என்றுமே ஆனந்தம் (திரைவிமர்சனம்)!!

Read Time:6 Minute, 7 Second

Endrume-Anandhamமயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின் கனவு. மகேந்திரனும் நன்றாகப் படித்து பிளஸ்-2 பாஸாகி, தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவ படிப்புக்காக காத்திருக்கிறார்.

ஒருநாள் நண்பருடன் கடற்கரையில் சென்று கொண்டிருக்கும் போது நாயகி ஸ்வேதா, தற்கொலை செய்வதற்காக கடலில் குதிக்கிறார். அவரை மகேந்திரன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்கிறான். பிறகு நண்பனிடம் இதைப் பற்றி கூறுகிறான். அதற்கு நண்பன், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காதல் தான் காரணமாக இருந்திருக்கும் என்று கூறுகிறான்.

இதை ஏற்காத மகேந்திரன், ஸ்வேதாவின் தோழியின் மூலம் ஸ்வேதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை தெரிந்து கொள்ள செல்கிறான். அங்கு ஸ்வேதாவின் தோழி, உண்மையை கூறுகிறார். ‘ஸ்வேதா காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. அவளுக்கு இரண்டு மாமாக்கள். இருவரும் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ள தீவிர முயற்சி செய்கிறார்கள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. இதற்கு ஸ்வேதாவின் சித்தியும் உடந்தையாக இருக்கிறாள்’ என்று மகேந்திரனிடம் கூறுகிறாள் தோழி.

மறுநாள் மகேந்திரன், ஸ்வேதாவை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு ஸ்வேதா ‘என்னை ஏன் காப்பாற்றினீர்கள்?’ என்று திட்டுகிறாள். அவருக்கு பொறுமையாக அறிவுரைகளை கூறி விட்டு செல்கிறான் மகேந்திரன். இதிலிருந்து ஸ்வேதாவிற்கு மகேந்திரன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

மற்றொரு நாள் மகேந்திரன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை கோவிலில் விட்டு செல்கிறான். இதை ஸ்வேதா எடுத்து வந்து மகேந்திரனிடம் தருகிறாள். அதிலிருந்து மகேந்திரன் ஸ்வேதா மீது காதல் வயப்படுகிறான்.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஸ்வேதாவின் மாமன்கள் ஸ்வேதாவை திருமணம் செய்வதில் தீவிரம் காண்பித்து வருகிறார்கள். ஸ்வேதாவும் மகேந்திரனும் காதல் செய்வது மாமன்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் மாமன்கள் ஸ்வேதாவை கண்டித்து விட்டு மகேந்திரனை தேடிச் சென்று அடித்து விடுகிறார்கள். ஸ்வேதா தன் வீட்டிற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறாள். அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் மகேந்திரன் ஸ்வேதாவை தேடி சென்னைக்கு செல்கிறான்.

இறுதியில் ஸ்வேதாவை தேடிக் கண்டுபிடித்து காதலில் ஜெயித்தானா? தன் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றினானா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், நடனம், காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிறப்பாக தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக காதல் வயப்பட்டவுடன் சந்தோஷமடையும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பால் மிளிர்கிறார். நாயகி ஸ்வேதா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிற்பாதியில் வரும் ராம்ஜி அவருக்கே உரிய பாணியில் நடனம் நடிப்பு என திறம்பட செய்திருக்கிறார். மகேந்திரனின் நண்பர்களாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். இவர்களின் டீக்கடை காமெடி பெரிதாக எடுபடவில்லை.

வில்லியம் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. கண்மணி ராஜாவின் இசையில் 2 பாடல்கள் ரசிக்கலாம்.

காதல் கதையை மையமாக வைத்து அதில் வாழ்க்கையை ரசித்தால் என்றுமே ஆனந்தமாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் விவேகபாரதியை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையில் வலுவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. சில இடங்களில் காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதை சரி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘என்றுமே ஆனந்தம்’ சிறிதளவு ஆனந்தம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில்வே தண்டவாளம் ஓரம் விஷம் குடித்து இளம் தம்பதியர் தற்கொலை!!
Next post மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த கும்பல்!!