நெல்லை அருகே லாரி டிரைவர் படுகொலை: போலீஸ் விசாரணை!!
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ளது சங்கன்திரடு கிராமம். இங்கிருந்து சேர்மாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது. அருகே மோட்டார் சைக்கிள் கிடந்தது. இன்று காலை அந்த பகுதி வழியே வயலுக்கு சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுத்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதி பார்வதியாபுரத்தை சேர்ந்த இளையராஜா (வயது 35) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவரை மர்ம நபர்கள் நேற்று இரவு கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
சம்பவ இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. வருவாய்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதியில் இரு பிரிவு மக்கள் வசித்து வருகிறார்கள்.
இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட இளையராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாகவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
சராசரியாக தினசரி ஒரு கொலை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.