கிண்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை!!
கிண்டி, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அன்னபூரணி (61). நேற்று இரவு அவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் தூங்கினார். மற்றொரு அறையில் அவரது மகனும், மருமகளும் இருந்தனர்.
இன்று அதிகாலை அன்னபூரணியின் மருமகள் எழுந்து வந்து பார்த்த போது முன்பக்க அறையில் பலத்த காயத்துடன் அன்னபூரணி மயக்க நிலையில் இருந்தார். அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகையை காணவில்லை.
மேலும் வீட்டு வாசலில் கட்டப்பட்டு இருந்த நாயும் மயங்கி கிடந்தது. வீட்டு கதவு பூட்டும் உடைந்து இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அன்னபூரணியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது.
கொள்ளை குறித்து அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து அன்னபூரணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் சிலர் இன்று அதிகாலை வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதிகாலையில் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அன்னபூரணி எழுந்துள்ளார். அவர்களை வெளியில் செல்லுமாறு கூச்சலிட்டதால் கொள்ளை கும்பல் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் அன்னபூரணி மயக்கம் அடைந்து விட்டார். பின்னர் அவர் அணிந்து இருந்த செயின், கம்மல் உள்பட 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.
வீட்டின் மற்றொரு அறையில் கதவை பூட்டி அன்னபூரணியின் மகனும், மருமகளும் தூங்கியதால் கொள்ளையர்கள் வந்தது தெரியவில்லை. வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருக்கிறார்கள். இதுபற்றிய விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அன்னபூரணி வீட்டில் உள்ள நாயிடம் சிக்காமல் இருப்பதற்காக கொள்ளையர்கள் திட்டமிட்டு அதற்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து இருக்கிறார்கள். இன்று காலை 10 மணியளவில் தான் நாய் கண்விழித்தது.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.