தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்!!

Read Time:20 Minute, 30 Second

timthumb (5)தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்பாகம் – 1

துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப த>ோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் துரோகத்தன்மை என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காண்பிப்பதற்காகவே.

யதார்த்தத்தில் துரோகிகள் என்று அவர்களது அரசியல் எதிரிகளால் அழைக்கப்படுபவர்கள் அவர்கள்மீது சாட்டப்படும் குற்றங்களின்படி குற்றவாளிகள் இல்லை, மற்றும் அத்தகைய ஒரு விளக்கத்துக்கு தகுதியானவர்களும் இல்லை. துரோகத்தன்மை என்பது பயங்கரமான கோயபல்சியன் நடவடிக்கையாகும் அதன்படி அரசியல் எதிரிகள் துரோகிகள் என போலியாகச் சித்தரிக்கப் படுகிறார்கள் அல்லது படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள்.

Traitorizationசமகால தமிழ் அரசியல் பிரசங்கத்தில் குறிப்பிடும் ‘துரோகி’ என்கிற முத்திரை, பொதுவாக தமிழர் பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மற்றும் எதிரியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளவர்கள் என குற்றம் சாட்டப்படும் தமிழர்களையே குறிக்கிறது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் அவசியமில்லை. அதற்குத் தேவையானதெல்லாம் நாஸி ஜேர்மனியின் ஹெர் கோயபல்ஸ் வாதிட்டதைப் போல, துரோகி என்கிற கூவலை பல நிலைகளிலிருந்தும் திரும்பத் திரும்ப இடைவிடாது கூவும் பிரமாண்டமான பிரச்சார முயற்சி மட்டுமே.

அடோல்ப் ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த போல் ஜே கோயபல்ஸ், “ நீங்கள் ஒரு பொய்யை பெரிய அளவில் சொல்லி அதையே திரும்ப திரும்ப கூறினால் இறுதியில் மக்கள் அதை நம்பிவிடுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

துரோகி என்கிற குற்றச்சாட்டை திரும்பத் திரும்ப தொடர்ந்து சொல்லி வருவது, தமிழ் தேசியவாத அரசியலின் செயல்முறை பிரயோகமாகும். ஷேக்ஸ்பியர் சொல்லியருப்பதைப் போல, இந்த பிரச்சார யுத்தத்தில் கூட்டத்தில் ஒருவர் துரோகி எனக்கூவினால் ஏனையோரும் அவரைத் தொடர்ந்து அதையே கூவுவார்கள்.

தமிழ் தேசியவாத அரசியலில், தங்கள் அரசியல் எதிரிகள் என்று உணரப்பட்டவர்களை துரோகிகள் என்று அழைப்பதற்கு கோயபல்ஸின் நுட்பம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. சாதாரணமாக வித்தியாசமான ஒரு அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதே அந்த விடயத்தில் அவர்களை துரோகிகள் என அழைப்பதற்கோ அல்லது எதிரிகளுடன் கூட்டு வைத்துள்ளார்கள் என்று சொல்வதற்கோ போதுமானது.

இந்த இரண்டு விஷயமும் பிரச்சினைக்குரியதாக இருப்பதுடன் எதிரி என்பதை தெளிவாக வரையறுப்பதும் கடினமாக உள்ளது. மேலும் இந்த விடயத்தின் தன்மையும் அதேபோல எதிரியை அடையாளம் காண்பதும் அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளானது.

இந்த மாற்றங்கள் இருந்த போதிலும் மாறாமல் இருந்தது துரோகத்தனம் மட்டுமே. துரோகத்தன நடவடிக்கையின் வெற்றி உண்மையான பொருள் மூலம் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் எது உண்மையாக இருக்கும் எனப் பிரச்சாரம் செய்யும் திறன் மூலமே அது தீர்மானிக்கப்பட்டது.

அது மூர்க்கத்தனமான தமிழ் தேசிய அரசியலில் நிலவிய முழுமையான உண்மையோ அல்லது உயர்ந்த யோசனையோ அல்ல. இறுதியில் வெற்றியடைந்தது எதுவென்றால் ஒரு பக்கத்தினரை துரோகி என வர்ணம் பூசும் மறுபக்கத்தினரின் சக்தி வாய்ந்த பிரச்சாரமே.

தங்க மூளை என்பதற்கு ஒரு சுவராஸ்யமான உதாரணம், ஒரு காலத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தங்க மூளை என வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினத்தின் விதிதான்.

கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரான பாராளுமன்ற உறுப்பினர் நவரத்தினம் 1968 கட்சிப் பதவியை உதறித் தள்ளிவிட்டு தமிழர் சுயாட்சிக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார்.

இலங்கை தமிழரசுக் கட்சி தழுவி வந்த கொள்கையான கூட்டாட்சி முறைக்கு மாறாக அவர் மிகவும் தீவிரவாத கொள்கையான தமிழ் அரசாங்கம் அல்லது சுயாட்சி முறையை பின்பற்றினார்.

நவரத்தினத்தின் கட்சி 1970 தேர்தலில் தமிழருக்கு சுயாட்சி என்கிற கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது, அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டாட்சி முறையான தீர்வையே தொடர்ந்து வாதிட்டு வந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சி நவரத்தினத்தின் பிரிவினைவாத கொள்கை தமிழர்களுக்கு பாதகமானது எனக் கண்டித்து, தமிழர் சமூகத்தை பெரிய ஆபத்தில் சிக்கவைத்துள்ளதாக அவர்மீது குற்றம் சாட்டியது.

1970ல் புளியங்கூடலில் பிரபலமான ஒரு வாய்வழி தர்க்கம் இடம்பெற்றது, அதில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வி.நவரத்தினம் ஆகியோர் ஒரு பகிரங்க விவாதம் நடத்தினார்கள். பிரிவினைவாதம் தமிழர்களுக்கு தற்கொலைக்குச் சமமானது என அமிர்தலிங்கம் நாவன்மையுடன் வாதிட்டார்.

புதிய கட்சியை உருவாக்கியது தமிழர் ஐக்கியத்தை துண்டாடும் செயல் என அங்கு தெரிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் வி.நவரத்தினமும் அவரது சக வேட்பாளர்களும் தமிழர் விடயத்தில் துரோகிகள் எனத் தூற்றப்பட்டார்கள்.

அவர்கள் அனைவரும் தோல்வியுற்றதுடன் 1970 தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி மீண்டும் ஒருமுறை 13 ஆசனங்களுடன் தனிப் பெரும் தமிழ்க்கட்சியாக தேர்வானது.

தங்கமூளை மனிதர் எனப் புகழப்பட்ட நவரத்தினம் இப்போது அரசியலில் மறக்கடிக்கப்பட்டதுடன் துரோகி என்கிற களங்கத்துக்கும் ஆளானார். விஷயங்கள் மாற்றம் பெற்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியும் மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் ஒன்றாக இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) எனும் அமைப்பை 1976ல் உருவாக்கின. இப்போது ரி.யு.எல்.எப் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு தேவை என வாதிடத் தொடங்கியது.

பிரிவினைவாதம் தற்கொலைக்கு ஒப்பானது எனக்கூறிய அதே தொகுப்பிலிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகள், இப்போது தமிழ் ஈழத்தை முன்மொழியும் தீவிர அமைப்புக்களாக மாறினர்.

அத்தகைய மாற்றமடைந்த சூழ்நிலையில் நவரத்தினம் சொன்னது சரியென நிரூபணமாகியுள்ளது என ஒருவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. பிரிவினைவாதத்தை பிரதான தமிழ் கட்சிகள் ஆதரித்த போதிலும்; சுயாட்சியை பிரேரித்ததுக்காக துரோகி என அழைக்கப்பட்ட மனிதர் தொடர்ந்தும் மறக்கடிக்கப் பட்டவராகவே இருந்தார்.

1977 தேர்தலில் ரி.யு.எல்.எப் வெற்றி வாகை சூடியபோதிலும், நவரத்தினம் திரும்பவும் தோல்வியடைந்தார். ஒரு தீர்க்கதரிசியாக கௌரவப் படுத்தப்பட வேண்டிய நவரத்தினம் இன்னமும் துரோகி என்ற பெயருடன் வாடிக் கொண்டிருந்தார்.

அதுதான் தமிழ் தேசிய அரசியலில் இருந்த பிரச்சார பலம். ஒரு தீர்க்கதரிசி துரோகியாக சித்தரிக்கப்பட்டு நிரந்தரமாகவே கண்டனத்துக்கு இலக்கானார்.

சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடற் புராணத்தில் உள்ள ஒரு கதை, தனது பக்தரான திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்காக சிவன் எப்படி உதவினார் என்பதை விபரிக்கிறது. அரசனின் கட்டளையிலிருந்து மாணிக்கவாசகரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் நரிகளைப் பரியாக்கியும், பரிகளை நரிகளாகவும் மாற்றி அவருக்கு உதவியதை இந்தக் கதை விபரிக்கிறது.

தமிழ் தேசியவாதிகளின் பிரச்சாரமும் இப்படித்தான் ஒரு வீரனை துரோகியாகவும் மற்றும் ஒரு துரோகியை வீரனாகவும் மாற்றும் வலிமை மிக்கது.

“நவரத்தினம், தங்கமூளை என வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் இப்போது அரசியலில் மறக்கடிக்கப் பட்டவர் அவரது கௌரவம் துரோகி என களங்கப்பட்டுள்ளது. விஷயங்கள் மாறிவிட்டன. இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டும் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை(ரி.யு.எல்.எப்) 1976ல் உருவாக்கின”.

இந்த துரோகத்தனமான நடவடிக்கையினைத் தொடர்ந்த அபத்தமான தர்க்கத்தை கபட நாடகமாகத்தான் கருத முடியும், ஆனால் உண்மையில் அது படிப்படியாக ஒரு தீவிரமான வடிவத்தை ஏற்றது. மக்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்பட்டது இனிமேலும் ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கையாக இருக்க முடியாது. அது சோகமான ஒன்றாக மாறியது.

இந்த துரோகத்தனமான நடவடிக்கை பெருமளவிலான அரசியல்வாதிகளை, அரசாங்க அதிகாரிகளை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு நபர்களை,ஊடகவியலாளர் போன்றவர்களை போட்டியிடும் அரசியல்வாதிகளால் துரோகிகளாகக் கருதி கொல்லுமளவுக்கு வழியமைந்ததுதான் தமிழ் அரசியலில் உள்ள மிகப் பெரிய சோகம்.

மேலும் எண்ணற்ற நபர்கள் உடல் ரீதியாக கொல்லப்படா விட்டாலும், துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு குணாதிசய ரீதியில் கொல்லாமல் கொலை செய்யப்பட்டார்கள்.

அநேகமாக எல்லா தமிழ் அரசியல் குழுக்கள் மற்றும் அமைப்புகள் யாவும் இந்த துரோகத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்கள், ஆனால் அதில் பெரும் பங்குக்கு உரித்துடையவர்கள் மக்களுக்கு துரோகிகள் எனப் பட்டம் சூட்டி அவர்களை பூண்டோடு அழித்த புலிகளே.

தமிழ் சமூகத்தின் சிறப்பான மனிதர்களை துரோகிகளாக கருதி அவர்களை விரிவாக அழித்தொழித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ).

புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் அரசியலின் உயர்மட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்ககை ஸ்ரீலங்கா மற்றும் இந்திய ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டவர்களை விட அளவுக்கு அதிகம். இந்த துரோகத்தனமான நிகழ்வின் மற்றொரு அம்சம் எதுவும் நிலையானதல்ல என்பதே. அனைத்துமே மாறக்கூடியவை.

தமிழ் அரசியல்கட்சிகள் மற்றும் குழுக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை எதிர்த்தபோது அல்லது புலிகளை விட்டு சுதந்திரமாகிய போது, அவர்களுக்கு துரோகிகள் என முத்திரையிடப்பட்டது.

எனினும் எல்.ரீ.ரீ.ஈ அல்லாத சக்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை (ரி.என்.ஏ) உருவாக்கியதுடன் புலிகளுக்கு அடிபணிந்து நடப்பவர்களாக மாறியதுடன் இந்த துரோகி என்கிற களங்கம் அகன்று போனது.

துரோகிகள் தேசப்பற்றாளர்களாக சுத்திகரிக்கப் பட்டார்கள். இதன்படி ஒரு காலத்தில் காட்டிக்கொடுப்பவர் என வர்ணிக்கப்பட்ட ஈபிஆர்எல்எப் தலைவரான சுரேஸ் என்கிற கந்தையா பிரேமச்சந்திரன் இப்போது ரி.என்.ஏயின் பேச்சாளராகி ஒரு தமிழ் தேசப்பற்றாளராக பேசி வருகிறார்.

மறுபக்கத்தில் மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜா மற்றும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் வித்தியாசமான அனுபவங்களுக்கு உள்ளானார்கள்.

மாத்தையா எல்.ரீ.ரீ.ஈ யின் துணைத் தலைவராக இருந்த அதேவேளை கருணா எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்தார், அவர்கள் இருவருமே மற்றவர்களை துரோகிகள் என கண்டனம் தெரிவித்து கொலை செய்ய ஆணை வழங்க இயலுமானவர்களாக இருந்தார்கள்.

அவர்களின் கட்டளைப்படி துரோகிகள் என கருதப்பட்டு பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும் இந்த இரண்டு மூத்த புலித் தலைவர்களும் வௌ;வேறு கட்டங்களில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் குற்றவாளியாக்கப்பட்டார்கள், அவர்கள் துரோகிகளாக உருமாறினார்கள்.

அவர்களின் விசுவாசிகளும் துரோகிகள் எனக் கருதப்பட்டு கொல்லப்பட்டார்கள். மாத்தையாவும் கூட கொல்லப்பட்டார், ஆனால் கருணா சரியான தருணத்தில் வேறு கப்பலில் பாய்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

யாராவது இன்னொருவரை துரோகி என பழிகூறி அவனையோ அல்லது அவளையோ கொல்வதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது என்கிற தார்மீகக் கேள்விக்கு அப்பால், அதில் பயங்கரமான ஒரு உண்மை உள்ளது, துரோகிகள் என கருதி கொல்லப்பட்டவர்களில் அநேகர் அந்த விளக்கத்துக்கு சற்றும் பொருத்தமற்றவர்கள் ஆவார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களை எதிர்ப்பவர்களைவிட வித்தியாசமான அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் துரோகிகளாகக் காட்டப்பட்டவர்கள் அரசியல் வழிகளில் மற்றவர்கள் முன்னேறுவதற்கு இடையூறாக இருந்தவர்கள் ஆவர்.

அரசியல்வாதிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக சந்திரனை பிடித்துத் தருவதாகக் கூட வாக்குறுதிகளை வழங்கினார்கள். பின்னர் அதை நிறைவேற்ற முடியாத தங்கள் இயலாமைக்கு சமாதானம் கூறுவதற்காக தங்கள் எதிரிகளை துரோகிகள் என்று பழி கூறினார்கள்.

ஏனென்றால் இந்த துரோகிகளால் தான் தங்களால் வாக்களிப்பட்ட இலக்கினை அடைய முடியவில்லை என அவர்கள் புலம்பினார்கள்.

துரோகத்தனத்தின் மற்றொரு அம்சம் தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்துவது. தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு ஒற்றை அமைப்பு அல்லது கட்சியை சுற்றியே வலம் வரவேண்டும் என விவாதிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் அதன் அர்த்தம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதாகும்.

தமிழர்களின் வாக்கை துண்டாடும் ஏனைய கட்சிகள் மீது துரோகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவளித்து தெரிவாக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் ஏனைய கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் துரோகிகள் என்கிற நியாயப்படுத்தலே இருந்தது.

ஜனநாயக அரசியல் ஆயுதம் தாங்கிய போர்க்குணத்துக்கு வழி ஏற்படுத்திய போதும் தமிழர்களின் ஒற்றுமை பற்றிய வலியுறுத்தல் தொடர்ந்தது. கட்சி இயக்கத்துக்கு வழி ஏற்படுத்தியது. இங்கும் தமிழர்களின் ஒற்றுமையை விளக்குவதற்காக குறிப்பிட்ட இயக்கத்துக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஏனைய இயக்கங்கள் துரோகிகளாகக் காட்டப்பட்டன. இந்த அணுகுமுறை விரைவிலேயே மோதல்கள் ஏற்படவும் பின்னர் உடன்பிறப்புகளைக் கொலை செய்யும் யுத்தமுறைக்கும் வழியமைத்தது.

தமிழ் ஈழம் என்கிற பலிபீடத்தின் முன் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்பவர்களாக கருதிய இளைஞர்கள்மீது துரோகிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அதே தமிழ் சமூகம் அதை மேன்மைப் படுத்தியது….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் இடுப்பை கிள்ள தயங்கிய நடிகர்!!
Next post உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது?