ஈராக் மீதான துருக்கியின் படை நடவடிக்கை கடுமையான விளைவுகளை தோற்றுவிக்கும்

Read Time:3 Minute, 32 Second

ஈராக்கின் வடபகுதியைத் தளமாகக் கொண்டியங்கும் குர்திஸ் போராளிகளுக்கெதிராக துருக்கி தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்குமானால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்து’மென ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொஸ்யர்ஷ ஷபாறி எச்சரித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஷபாறி நடைமுறையிலுள்ள நெருக்கடி நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதுடன் இவ் விவகாரத்திற்கு அமைதி வழித் தீர்வொன்றை துருக்கி எதிர்பார்க்கவில்லையெனவும் குற்றஞ் சாட்டியுள்ளார். ஈராக் எல்லைக்கருகிலுள்ள தனது நாட்டு எல்லையில் சுமார் 100,000 படையினரை குவித்துள்ள துருக்கி ஈராக்கிலுள்ள குர்திஸ் போராளிகள் மீது படையெடுப்பதற்கான அச்சுறுத்ததலை விடுத்து வருகின்றது. துருக்கி படையினர் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை குர்திஸ் போராளிகள் அடிக்கடி மேற்கொள்வதாகத் தெரிவிக்கும் துருக்கி இப் போராளிகள் ஈராக்கின் வடபகுதியில் நிலைகொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிலைமையை அமைதியாகக் கையாளுவதற்கு ஈராக் வழங்கிய பிரேரணைகளில் துருக்கி ஆர்வம் காட்டவில்லையெனத் தெரிவித்த ஷபாறி, ஈராக்கிலுள்ள குர்திஸ் போராளி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு துருக்கி கோரியதாகவும் இதனைத் தம்மால் நிறைவேற்ற முடியாதென தாம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் இல்லையெனவும் அவர்கள் ஆயுதங்களுடன் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குர்திஸ் போராளிக்கெதிராக துருக்கி நடவடிக்கை எடுப்பதில் தடையில்லையெனத் தெரிவித்த ஷபாறி, சுமார் 100,000 படையினர் டாங்கிகள் மற்றும் பாரிய ஆயுதங்கள் சகிதம் எல்லைகளில் குவிக்கப்பட்டிருப்பது ஈராக்கின் வடபகுதியில் பாரிய படையெடுப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளதென்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளினதும் ஸ்திரத்திற்கு பங்கம் விளைவிக்குமெனவும் ஈராக் அரசும் ஈராக்கிய மக்களும் அயல்நாடொன்றினால் தமது இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கப்படுவதை விரும்பவில்லையெனவும் ஷபாறி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வவுனியாவில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை…!
Next post சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்