2009-ம் ஆண்டில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம்: காதலியை கைப்பிடிக்கிறார்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ராணுவப்பயிற்சி முடிந்த பிறகு 2009-ம் ஆண்டு தன் காதலி கதே மிடில்டனை திருமணம் செய்து கொள்கிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிகளின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறார். இவரது காதலி கதே மிடில்டன். இவர் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் லண்டனில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து வருவதால் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக பொழுது போக்கியது உண்டு. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் கொஞ்ச காலம் பிரிந்து இருந்தனர். பிறகு அவர்கள் இருவரும் தங்களை புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்ந்தனர். சமீபத்தில் அரண்மனையில் நடந்த விழாவுக்கு கதே மிடில்டன் சென்று இருந்தார். அப்போது வில்லியமின் குடும்பத்தினரை கதே சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதற்கு முன்பாக ராணுவ பயிற்சி அனைத்தையும் முடித்துவிடவேண்டும் என்று வில்லியம் விரும்புகிறார். 2009-ம் ஆண்டு ஜுலை வரை ராணுவப்பயிற்சி இருக்கிறது. ஜுலையில் தான் பயிற்சி முடிகிறது. அதற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவர் கதேயிடம் தெரிவித்து இருக்கிறார். அதுவரை காத்திருப்பதாகவும், தனக்கும் திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றும் கதே தெரிவித்து விட்டார். திருமணம் செய்து கொள்ள இருப்பதால், கதே தான் பார்த்து வரும் வேலையை ராஜினாமா செய்ய இருக்கிறார். அவர் திருமணம் ஆகும் வரை தன் பெற்றோருடன் தங்கிஇருக்க திட்டமிட்டு இருக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை தன் காதலியுடன் சாண்டிரிங்காம் என்ற இடத்தில் செலவிடுவதற்கு வில்லியம் திட்டமிட்டு இருக்கிறார்.