தந்தையைக் கொன்று சூட்கேஸில் வைத்துவீசிய மகன்கள்!

Read Time:3 Minute, 47 Second

Tamilnadu-suitcase.jpgஇந்திய தமிழ்நாடு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்து பின்னர் குற்றாலத்தில் வீசிய மகனை போலீஸார் கைது செய்தனர். இன்னொரு மகனை தேடி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள செம்பட்டையன்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்கிற சிந்தாமணி. இவரது மனைவி இலஞ்சியம்மாள்.
இவர்களுக்கு விஜயக்குமார், இன்னாசி முத்து, தாமஸ், ராமமூர்த்தி, ராஜா என்ற மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். 65 வயதான கணபதி, தனது சொத்துக்களை ஐந்து மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்துக் கொடுத்து விட்டு கடைசி மகன் ராஜாவுடன் சேர்ந்து வசித்து வந்தார்.

தான் புதிதாக வாங்கியுள்ள நிலத்தில் ராஜா ஆழ்துளைக் குழாய் கிணறு தோண்டினார். அங்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால், மற்ற நான்கு சகோதரர்களும், தங்களது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச தண்ணீர் தருமாறு கோரியுள்ளனர். ஆனால் இதற்கு ராஜாவும், கணபதியும் மறுத்து விட்டனர். இதனால் அவர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதி தோட்டத்திற்குச் சென்ற கணபதி வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், கணபதி காணாமல் போன நாளிலிருந்து ராமமூர்த்தியையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் கணபதியை கடைசியாக ராமமூர்த்தி மற்றும் தாமஸ் ஆகியோர் சந்தித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தாமஸை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

கணபதியை கடந்த 28ம் தேதி தோட்டத்திற்குச் சென்று தாமஸ்தான் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை சூட்கேஸில் வைத்து தாமஸும், ராமமூர்த்தியும், தங்களது சகோதரர் விஜயக்குமார் வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் ஒரு ஆட்டோவில் குற்றாலத்திற்குக் கிளம்பினர். பேரருவிக்குச் செல்லும் வழியில் உள்ள சிறுவர் பூங்காவிற்குள் சூட்கேஸைக் கொண்டு சென்று அருவி நீர் செல்லும் வழியில் தூக்கி வீசியுள்ளனர்.

போலீஸார் தாமஸை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்று பிணம் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டக் கூறினர். அந்த இடத்தில் சூட்கேஸில் கட்டப்பட்ட நிலையில் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாமஸை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளை தாக்குவது கஷ்டமல்ல பொது மக்கள் குறித்தே சிந்திக்கிறோம் – பெர்னாண்டோ புள்ளே
Next post மும்பையில் ரெயில்கள் தகர்ப்பு: குண்டு வெடிப்பு பலி 190 ஆக உயர்வு