பாக். அணு ஆயுதங்கள்- யு.எஸ். ‘கலவரம்’!

Read Time:3 Minute, 58 Second

nuke-250_05112007.jpgபாகிஸ்தானில் நிலவும் குழப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கி விடக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பது குறித்து இதுவரை அமெரிக்கா தெளிவான கருத்தை வெளியிடவில்லை. முஷாரப்பின் நடவடிக்கை குறித்து அதிருப்தியை மட்டுமே வெளியிட்டுள்ளது. புஷ் இதுவரை ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கையில் அங்குள்ள அணு ஆயுதங்கள், அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான ரகசியங்கள் கை மாறி விடக் கூடும் என்ற கலவரத்தில் அமெரிக்கா உள்ளது. இதுகுறித்து தெற்காசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் மூத்த இயக்குநர் ப்ரூஸ் ரீடல் கூறுகையில், பாகிஸ்தானில் தற்போது நிலவும் நிலையைப் பார்த்தால், அவர்களின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் வசம் சிக்கிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக அல் கொய்தாவினரின் கையில் அவை சிக்கும் பெரும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார். அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோசப் பிடன் கூறுகையில், முஷாரப் மேற்கொண்டுள்ள நடவடிக்கையைப் பார்த்தால், இதற்கு மேலும் முஷாரப்பை மையமாக வைத்து திட்டமிடுவதை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானை மையமாக வைத்து கொள்கையை உருவாக்க வேண்டிய நேரம் அமெரிக்காவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்திருக்கும் உத்தரவை முஷாரப் திரும்பப் பெறாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் என்பதை அதிபர் புஷ், முஷாரப்புக்கு தெளிவாக சொல்ல வேண்டும்.

அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராணுவத்தின் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டும். இதற்கு அமெரிக்க அரசு முன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, பாகிஸ்தானுடன் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெப் மோரல் கூறுகையில், வருடாந்திர அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது என்றார்.

முஷாரப்பின் நடவடிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதால்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சை அமெரிக்கா ஒத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை
Next post கிரிமினல் வழக்கு – கிரகலட்சுமி கோரிக்கை