By 8 September 2015 0 Comments

ரணிலின் இந்திய விஜயம் குறித்து மோடிக்கு கருணாநிதி கடிதம்!!

813344009Untitled-1தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். இந்த மாத மத்தியில் அவரும், அக்டோபர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழர்களுடைய மனக்குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.

13–2–2015 அன்று தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு தங்களுடைய அன்பான கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன். அதில் பின்வருமாறு நான் விளக்கியிருக்கிறேன்:

“இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே சிறிசேனா இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனித நேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே மைத்திரிபால சிறிசேனவுக்கு விரும்பி வாக்களித்தார்கள்.

தேர்தலின் போது அவரும், அவருடைய கூட்டணிக் கட்சியினரும் அளித்த வாக்குறுதிகளை தமிழர்கள் உண்மையிலேயே நம்பினார்கள்.

இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும், அவர் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகச் சிறிய முன்னேற்றம் அல்லது முன்னேற்றமே இல்லை என்கிற அளவுக்குத் தான் நிலைமை நீடித்து வருகிறது.

தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல. 4–வது முறையாக இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்றவுடனே ரணில் விக்ரமசிங்க கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது “விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப்போர் 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தற்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஏற்படும் உகந்த சூழ்நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு மறுநாள், ரணில் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டி விவரங்கள் 24–8–2015 அன்று வெளியிடப்பட்டுள்ளன. ரணில் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றித் தன்னுடைய கருத்துகளை அந்தப் பேட்டியிலே வெளியிட்டிருக்கிறார்.

அ) மாகாணக் கவுன்சில்கள் உண்மையிலேயே நல்ல பணி ஆற்றுவதற்கான வழி வகைகள், ஆ) மாகாணக் கவுன்சில்களுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் மற்றும் இரண்டுக்கும் இணைந்து இருக்கும் அதிகாரங்கள், இ) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உண்மையான பிரச்சினை யாதெனில், தங்களுடைய நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பின் மூலமாக அகற்றப்பட்ட தமிழர்களை மீள் குடியிருப்பின் மூலம் அமர்த்துவது தான்.

ஈ) சட்டம்–ஒழுங்குப் பிரச்சினைகளில் மாகாணக் கவுன்சில்களுக்குத் தலையிடும் உரிமை. உ) இந்திய நாடும் ஏற்றுக் கொண்ட 13வது அரசியல் சட்டத்திருத்தம். ஊ) இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு உள்நாட்டு விசாரணை நடத்துதல் போன்ற பல்வேறு கருத்துகளை ரணில் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக ரணில் வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.

2002–ம் ஆண்டு இலங்கைப் பிரதமராக இருந்த போது ரணில் நோர்வே நாட்டு ஓஸ்லோ நகரில், விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தை முடிவில், ஒன்றுபட்ட இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கு என்று ஒரு மாநிலமும், தமிழர்களுக்கு என்று மற்றொரு மாநிலமும் ஆக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதை உலகத்தமிழர்கள் மறந்து விடவில்லை.

உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை, அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஐ.நா. மேற்பார்வையில் “பொது வாக்கெடுப்பு” நடத்தப்பட வேண்டுமென்பதே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடாகும். இவ்வகையான அரசியல் தீர்வு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

இலங்கைக் கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் தொடர்ந்து நீடித்து வரும் கொடுமையைத் தாங்கள் அறிவீர்கள்.

தாங்கள் இலங்கைப் பிரதமரோடும், இலங்கை ஜனாதிபதியுடனும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தினால் நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியாக இருந்த போது, சுதந்திரமான, சர்வதேச விசாரணை வேண்டும் என்று மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக, தற்போது ஐக்கிய அமெரிக்கா, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை மேற்கொள்வது தொடர்பாக புதிய திருத்தப்பட்ட தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வர விருப்பதாக பரவலாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்காவினுடைய திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தேடுவதில் ரணில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்திலே உள்ள நாங்களும், உலகத் தமிழர்களும் கேடு விளைவிக்கும் அமெரிக்க நாட்டின் இந்தத் தீர்மானத்தை முற்றாக எதிர்க்கிறோம். அமெரிக்காவும், இலங்கையும் மேற்கொள்ளும் இத்தகைய தந்திரத் திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்குமானால், வரலாறு மன்னிக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடுநிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத்தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றியுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

தாங்கள் இலங்கை ஜனாதிபதியோடும், இலங்கைப் பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி எழுதி உள்ளார்.Post a Comment

Protected by WP Anti Spam