இலங்கை போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்!!

Read Time:8 Minute, 24 Second

2540100karunanidhiஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பற்றிய தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு குறித்து கருணாநிதி விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது…

தமிழகச் சட்டப் பேரவை கடந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் அவைக்கு வந்து விதி 110 இன் கீழ் ஓர் அறிக்கையைப் படித்து விட்டுச் சென்று விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர் – அவரது மனச்சாட்சியே அவரைக் கேள்வி கேட்ட காரணத்தாலோ என்னவோ, 16-9-2015 அன்று “அரசினர் தனித் தீர்மானம்” ஒன்றை முன் மொழிந்திருக்கிறார்.

அந்தத் தீர்மானத்தில், “இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை சபை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு அப்போது இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் ஐ.நா. மனித உரிமை சபை, முன்னேற்பாடு தொடர்பான விசாரணையை நடத்தியது. அது குறித்த அறிக்கையை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது.

ஆனால் இதற்கிடையே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டுமென்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை தான் இன்று தாக்கலாக உள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, போர்க் குற்றங்கள் நிகழ்த்தியோர் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு மூலம் இந்தியப் பேரரசு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுவது அவசியம் என்று கூறியிருக்கிறார்.

இதைத் தான் நான் கடந்த 29-8-2015 அன்று “கேள்வி-பதில்” பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தும் பொறுப்பினை, அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசிடமே ஒப்படைக்கப்போவதாக அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே என்ற கேள்விக்கு நான் விடையளிக்கும்போது, “இது குறித்து, ஐக்கிய நாடுகளின் மன்றம் அமைத்த மூவர் குழுவினர் நடத்திய விசாரணையின் மூலம் இலங்கையிலே தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மை என்பது வெளிப்பட்டது.

2014ஆம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்கக் கோரியது. 12-8-2012 அன்று நடைபெற்ற “டெசோ” மாநாட்டிலும், 25-3-2013 அன்று நடைபெற்ற தி.மு.கழக, தலைமைச் செயற்குழுவிலும், 15-12-2013 அன்று நடைபெற்ற பொதுக் குழுவிலும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே “சர்வ தேச நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று” கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக நாடுகளின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே அன்றைய ராஜபக்ஷ அரசு அனுமதிக்கவில்லை. அதனை அப்போதே நான் அறிக்கை மூலமாக வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். தற்போது அமெரிக்க அரசின் முடிவு, நடந்து முடிந்த தமிழ் இனப்படுகொலையை முழுமையாக மூடி மறைத்து, போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்தி உண்மையாகி விடக் கூடாதென்றே நான் விரும்புகிறேன். மாறாக, உண்மையாக இருக்குமானால், வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் அமெரிக்க அரசின் இந்த முயற்சியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறேன்.

இந்தக் கருத்தைத் தான் பேரவை தீர்மானமும் எதிரொலிக்கின்றது என்ற வகையில் கழகத்தின் சார்பில் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்பதோடு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலநிலை சீர்கேட்டால் மத்தளைக்கு சென்ற விமானம்!!
Next post ஹெகலிய, லலித் வீரதுங்க, ஜெயசுந்தரவிடம் எது பற்றி விசாரிக்கப்பட்டது தெரியுமா?