விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேசவிரோதம் தான்; ஜெயலலிதா பேட்டி

Read Time:6 Minute, 43 Second

விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேச விரோதம் தான் என்று ஜெயலலிதா கூறினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தலைமை கழகத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் ஜெயலலிதா நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் யார் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தாலும் அவர்கள் தேசவிரோத, தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக கருதி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சட்டம் பாய்வதில் அர்த்தம் இல்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் செய்தி வெளியிட்டதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதியை கைது செய்திருக்க வேண்டும். பொதுக் கூட்டங்களை நடத்தி விடுதலைப்புலிகளை பாராட்டி பேசுவதையும் அனுமதிக்க முடியாது. பேரணிகள் நடத்துவதையும் அனுமதிக்க முடியாது. இத்தகைய கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி அளித்தால் தமிழக அரசையே கலைக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. நாகா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் அரசே பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதுபோன்ற வியாக்யானத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாடும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு

தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியைப் பற்றி பேசுவோம். சிந்திப்போம். இப்போது எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும், காங்கிரசானாலும், பாரதீய ஜனதாவானாலும் ஒரு காலகட்டத்தில் வைகோவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. என்னை பொறுத்தவரை இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பல வருடங்களுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். முன்பு காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இருந்தபோது நான் கிருஷ்ணசாமிக்காக தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். இப்போது அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டது அறிந்ததும் மனிதாபிமான அடிப்படையில் அவரை நான் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

2011-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார், கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

அணு ஒப்பந்தத்தில் எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. இதனை முழுமையாக எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தமே தேவையற்றது. இந்த விவகாரத்தால் தேர்தல் விரைவில் வரத்தான் செய்யும்.

3-வது அணி என்று ஒன்றுமில்லை. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி பற்றிய கேள்வி தேவையில்லை. குஜராத்தில் தேர்தலே வரப்போகிறது, இந்த நேரத்தில் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்பதில் அர்த்தமே இல்லை.

பாதுகாப்பு

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. பாதுகாப்பு கொடுத்திருப்பதாக ஏதோ சொல்கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. அது எப்படி சென்னையில், தமிழ்நாட்டில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக ஜெயலலிதா வழக்கம் போல தனது சொந்த காரிலேயே கட்சி அலுவலகத்துக்கு வந்தார். கட்சி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்.

தென்சென்னை, திருவண்ணாமலை, கடலூர் கிழக்கு, நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., இரு கம்ïனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மொத்தம் 950 பெண்கள் உள்பட 2783 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சுலோச்சனா சம்பத், சேகர்பாபு, கலைராஜன், வரகூர் அருணாசலம், வீரைகறீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி
Next post தலை நிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை! -ப்ரியாமணியின் புதிய சந்தோஷம்!