மருதனார்மடத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவம் பலி- 14 பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்று கொண்டிருந்த பேரூந்து கிளைமோர் தாக்குதலில் சிக்கியதில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உடுவில், சுன்னாகத்தை சேர்ந்த வி.கஜந்தன் (வயது 21), கே.துரைராஜா (வயது 60) மற்றும் தெல்லிப்பளையைச் சேர்ந்த டி.சபாரட்நாயகம் ஆகியோர் காயமடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மருதனார்மடம் சந்திக்கு அருகாமையில் மானிப்பாய் – மருதனார்மடம் வீதியில் விடுமுறையில் வீடு செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி விமானத்தளத்துக்கு இன்று புதன்கிழமை முற்பகல் 11.05 மணியளவில் இராணுவத்தினரின் பேரூந்து சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது.
வீதிக்கு அருகே மரம் ஒன்றில் அக் கிளைமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இராணுவத்தினர் அனைவரும் பலாலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி கப்டன் ஈ.ஆர்.எஸ்.எச்.பி.ஏ. சிறீவர்த்தன, லெப். பி.ஜி.எஸ்.ஜி.குமார மற்றும் லான்ஸ் கோப்ரல் யு.எஸ்.திலகரத்ன ஆகிய அதிகாரிகள் உயிரிழந்தனர் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். பின்னர் 2 இராணுவத்தினர் மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் வழமைபோல அப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.