கேள்வியின் நாயகனிடம் (ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம்) சில கேள்விகள்”..!! -கனக சுதர்சன்

Read Time:17 Minute, 27 Second

timthumbதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதன் ஜனநாயகக் குறைபாடுகளைப் பற்றியும் அதன் கொள்கைத் தடுமாற்றங்களைப் பற்றியும் அதனுடைய செயற்பாட்டுப்போதாமைகளைப் பற்றியும் பகிரங்கமாகவே விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இந்த விமர்சனங்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சேரும். கூட்டமைப்பின் தவறுகளில் சுரேசுக்கும் பொறுப்புகள் உண்டு. சுரேசுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பலருக்கும் அந்தப் பொறுப்புகள் உண்டு. இவர்களில் 90 வீதமானவர்கள் கூட்டமைப்பைக் கடந்த காலங்களில் ஆதரித்தவர்கள். அதன் மீது எந்த எதிர்க் கேள்விகளையும் கேட்கத் துணியாதவர்கள்.

நேற்று ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில், “தமிழ் மக்கள் பேரவையைப் பற்றிய தவறான கற்பிதற்களுக்கும் பிழையான பரப்புரைகளுக்கும் இடமளிக்க வேண்டாம்“ என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரிவு ஒன்றின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் நீண்ட விளக்கமொன்றினையும் அளித்திருந்தார்.

“தமிழ் மக்கள் பேரவை குறித்து பல்வேறு பட்ட அபிப்பிராயங்கள் சொல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்காக, உருவாக்கப்பட்ட அமைப்பு என்று சொல்லப்படுகின்றது. இதெல்லாம் அர்த்தமற்றது. இது தமிழ் மக்கள் பேரவையை புரிந்து கொள்ளாதவர்களின் கருத்து.

ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது, சமஷ்டி முறை இருக்க வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும், அதிகாரங்கள் இருக்க வேண்டும், என்ன என்ன விடயங்கள் நடைபெற வேண்டும் என்பதனை சரியான முறையில் கூறி அதனை தீர்வுத் திட்டமாக முன் வைத்து தமிழ் மக்களின் ஆலோசனைகளை பெற வேண்டியது முக்கியானதாகும்.

அதனைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யாததால்தான், தமிழ் மக்கள் பேரவை என்பது உருவாக வேண்டியேற்பட்டது. அது மாத்திரமின்றி, தமிழ் மக்கள் மிக பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுகின்றார்கள். அதற்காக தீர்வைக் காணவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியுள்ளது“ என்று கூறியிருக்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் பெற்றிருப்பதால்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்படிச் சொல்கிறாரா? அல்லது, கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின்பு இப்படிக் கூறுகிறாரா? அல்லது இரண்டினாலும்தானா?

நிச்சயமாக பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவின் பிறகுதான் சுரேஸ் இப்படிக் கதைக்கிறார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றியடைந்திருந்தால், சிலவேளை அவரே இப்பொழுது செல்வம் அடைக்கலநாதன் வகித்து வரும் பாராளுமன்றப் பிரதிக்குழுக்களின் தலைவர் பதவியை வகித்திருப்பார். அல்லது அந்தப் பதவிக்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் போர் செய்திருப்பார்.

தேர்தல் தோல்வி சுரேஸை இப்படி ஆக்கியுள்ளது. இதை அவர் மறுக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கலாம்….

1. நீங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இப்பொழுதும் இருக்கிறீர்களா? கூட்டமைப்புப் பலவற்றையும் செய்யத் தவறியதாக நீங்கள் சொல்லும் போது அந்த அமைப்பை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அல்லது அந்த அமைப்புக்கு வெளியே இருந்த ஒருவரே அப்படிக் குற்றம் சாட்ட முடியும்.

கூட்டமைப்பு உரிய பொறுப்புகளைச் செய்யத் தவறியதாக இருந்தால், அதற்கு நீங்களும் தானே பொறுப்பு. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அதனுடைய உத்தியோகபுர்வப் பேச்சாளராகவும் நீங்கள் இருந்திருக்கிறீங்கள். எனவே இதைக் குறித்து உங்களுடைய பதில் என்ன?

2. நீங்கள் இந்தத் தடவையும் தேர்தலில் வெற்றிபெற்றுப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டிருப்பீர்களா? இப்படித் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில் இணைந்திருப்பீர்களா?

3. இப்பொழுது இந்த மாதிரித் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதனுடைய தலைமையையும் பகிரங்கமாக விமர்சித்து எதிர்க்கும் நீங்கள் முன்னர் அதைச் செய்யாதது ஏன்? அவ்வப்போது சில புறுபுறுப்புகளைச் செய்தது ஒன்றும் புரட்சிகரமான நடவடிக்கை அல்ல. உங்களுடைய கட்சியின் பெயரே புரட்சிகர முன்னணி என்பதை அழுத்தமாக வாசித்துப் பார்க்கலாம்.

4. முன்னர் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபுர்வப் பேச்சாளராகவும் இருந்த போது தமிழ் மக்கள் முகம் கொடுத்து வந்த எந்தப் பிரச்சினைக்காகவாவது தீர்வைக் காண்பதற்காக உங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் கூட்டமைப்பு உழைத்ததா? அதற்கான உந்து விசையையும் ஊக்கத்தையும் நீங்கள் வழங்கினீர்களா?

5. அப்படி நீங்களும் கூட்டமைப்பும் பாடுபட்டிருந்தால், அதன்மூலமாக என்ன பிரச்சினைகளைக் கூட்டமைப்புத் தீர்த்து வைத்தது? குறைந்த பட்சம் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்தியதா? அரசியற் கைதிகளை விடுவித்ததா? காணாமற் போனோர் விவகாரத்திற்கு ஏதாவது பரிகாரம் காணப்பட்டதா? குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும் ஆதரவற்ற சிறார்களின் எதிர்காலத்துக்குமாவது கட்டமைப்புகளை உருவாக்கியதா?

இப்படி எதையுமே செய்யாத கூட்டமைப்பை, ஒரு அரசியற் கட்சியாகப் பதிவு செய்ய முடியாமல் இதுவரையில் இருக்கும் கூட்டமைப்பை சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒருபோதுமே எதிர்த்தது கிடையாது.

திரு. கஜேந்திரகுமாரைப் போல, சம்மந்தனையும் கூட்டமைப்பின் அரசியற் குறைபாடுகளையும் எதிர்த்து சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேறவில்லை.

பதிலாகச் சம்மந்தனைப் பற்றியும் சுமந்திரனைப் பற்றியும் சிறிதரனைப் பற்றியும் இன்னும் தன்னுடைய சகபாடிகளைப் பற்றியும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்ததைத் தவிர, அவர் ஒரு கலகக்காரனாகச் செயற்படவில்லை.

இப்பொழுது திரு. விக்கினேஸ்வரன் போர்க்கொடி தூக்கியதைப் போல சுரேஸ் சிறு தடியைக்கூடத் தூக்கியது கிடையாது. இவ்வளவுக்கும் அவர், திரு. கஜேந்திரகுமாரையும் திரு. விக்கினேஸ்வரனையும் விட ஆயுதப்பயிற்சி பெற்று விடுதலைத்தாகம் உள்ள ஒரு போராளியாக இருந்தவர்.

விக்கினேஸ்வரனின் கலகம் நீதியானதா? சரியானதா? என்ற வாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும் அவர் கூட்டமைப்பை – அதன் தலைமைப்பீடத்தை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெற்றுப் பதவியில் இருந்து கொண்டிருக்கும் போதே அதைச் செய்கிறார். சுரேஸ் அப்படிச் செயற்படத் தவறியிருக்கிறீர்கள் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

இது சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதான குற்றப்பத்திர வாசிப்பு அல்ல. தமிழ் மக்கள் பேரவையை நியாயப்படுத்துவதற்காக மக்களுக்குச் சப்புக் கட்டும் தவறான காரியத்தின் மீதான கேள்விகளே இவை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதன் ஜனநாயகக் குறைபாடுகளைப் பற்றியும் அதன் கொள்கைத் தடுமாற்றங்களைப் பற்றியும் அதனுடைய செயற்பாட்டுப்போதாமைகளைப் பற்றியும் பகிரங்கமாகவே விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இந்த விமர்சனங்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சேரும். கூட்டமைப்பின் தவறுகளில் சுரேசுக்கும் பொறுப்புகள் உண்டு. சுரேசுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பலருக்கும் அந்தப் பொறுப்புகள் உண்டு. இவர்களில் 90 வீதமானவர்கள் கூட்டமைப்பைக் கடந்த காலங்களில் ஆதரித்தவர்கள். அதன் மீது எந்த எதிர்க்கேள்விகளையும் கேட்கத் துணியாதவர்கள்.

ஆனால், ஒரு அமைப்புத் தன்னுடைய பலவீனங்களைத் தொடருமானால், அதனை வழிப்படுத்துவதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதற்கு ஆதரவளிப்போரும் முயற்சிகளை மேற்கொள்வது இயல்பு. அது அவசியமானதும் கூட. ஆனால், அதற்குரிய வழிமுறைகளில் அதை மேற்கொள்ள வேண்டும். அல்லது அதை எதிர்க்கும் அணியை வலுப்படுத்த வேண்டும்.

இங்கே நடப்பது அதுவல்ல. இது தோற்றுப்போனவர்களின் அணி என்று திரும் சம்மந்தன் குற்றம் சாட்டுவதற்கு இடமளிக்கும் விதமாகவே உள்ளது.

இதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நாம் பாராட்டி விடவும் முடியாது. அந்த அமைப்பிலும் பாரிய குறைபாடுகள் உள்ளன. அவற்றின் விளைவுகளே அதற்கு இப்பொழுது உருவாகியிருக்கும் நெருக்கடிகளாகும்.

கூட்டமைப்பின் குறைபாடுகளைப் பலரும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தபோது அதைப்பற்றி அக்கறை எடுக்காமல், தன்னிச்சையாக நடந்தது அதனுடைய தலைமைப்பீடம். குறிப்பாகச் சம்மந்தன் கடும்போக்காளராக – எத்தகைய குரல்களுக்கும் இடளிக்காத ஒருவராக நடந்து கொண்டார். இது பகிரங்கமானது.

இதேவேளை சம்மந்தனின் மீது இரண்டு வகையான அபிப்பிராயங்கள் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

1. சம்மந்தன் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் ஐக்கிய இலங்கைக்குள்தான் தீர்வு என்று சொல்கிறார். இதற்காக அவர் இலங்கையின் தேசியக் கொடியையே ஏந்தியிருக்கிறார் என்பது.

2. சம்மந்தனும் சுமந்திரனும் இரகசிய நிகழ்ச்சி நிரலோடு செயற்படுகிறார்கள் என்பது.

இவை இரண்டும் முரணானவை. சம்மந்தனும் சுமந்திரனும் வெளிப்படையாகவே செயற்படுகிறார்கள். இந்த இடத்தில்தான் சுமந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

“தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் சர்வதேச சமூகத்தின் உணர்வலைகள் எப்படி இருக்கின்றன என்பதை வெளிப்படையாகச் சொல்லியுமே நான் தேர்தலில் நின்றேன். அதைப் புரிந்து கொண்டே எனக்கு மக்கள் வாக்களித்தனர்“ என்பது.

சம்மந்தனும் ஏறக்குறைய இப்படித்தான், வெளிப்படையாகச் செயற்பட்டு வருகிறார். சம்மந்தனைப் புரிந்து கொண்டே அவரை மக்கள் ஆதரித்துள்ளனர்.

ஆகவே இவர்களிடம் ஒரு வெளிப்படைத்தன்மை உள்ளது என்பதும் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு எவ்வாறான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை யதார்த்தமாகச் சிந்திக்கிறார்கள் என்பதுமே சிறப்பு.

பதிலாக ஏனைய தரப்பினர், தம்மால் எட்டமுடியாத, தாம் விரும்புகின்ற தீர்வுக்குத் தம்மை அர்ப்பணிக்கத் தயாரில்லாத ஒரு தீர்வையே வலியுறுத்துகின்றனர். இதுதான் அவர்களுடைய பலவீனமாகும்.

தமிழ் மக்கள் பேரவை தன்னுடைய இரண்டாவது சந்திப்பை இன்று செய்யவுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வோரில் பல தடுமாற்றங்கள் உள்ளன.

கூட்டமைப்பை விமர்சனம் செய்கின்ற சுரேஸ், சிற்றம்பலம், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் என்ன நிலைப்பாட்டுடன் தொடர்ந்து செயற்படப் போகிறார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன.

இப்பொழுது தெளிவான ஒரு போக்கிற்கும் தெளிவற்ற ஒரு போக்கிற்குமிடையில் மோதல்கள் நடக்கின்றன. இந்த மோதல்களைச் சுவாரசியமாகப் பிரதிபலிக்கின்றன யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி என்ற இரண்டு தினப்பத்திரிகைகள்.

வலம்புரி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து, தமிழ் மக்கள் பேரவையை ஆதரிக்கிறது. உதயன் தமிழ் மக்கள் பேரவையை எதிர்த்து கூட்டமைப்பை ஆதரிக்கிறது.

சனங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இலங்கை அரசாங்கத்தைப் பற்றிக் கதைப்பதும் அதன் குறைகளையிட்டுக் கோவப்படுவதும் குறைந்து விட்டது. இந்த அக்கப்போர்களுக்குள் எல்லாமே மறைந்து விட்டன.

தமிழர்களின் அரசியல் – அதாவது இனப்பிரச்சினை, அதற்கான தீர்வு என்பதை விட்டு விட்டு உள்வீட்டுப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. இந்த உள்வீட்டுப் பிரச்சினைகளால் தான் தமிழ் அரசியல் தொடர்ந்தும் பலவீனப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம் உடல் நலனுக்கு அபாயம் தரும் மீன் வகைகள்…!!
Next post பாரிய கடல் கொந்தளிப்பு : மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு…!!