கருணாநிதி வழங்கிய பணமும், வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 55) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

Read Time:21 Minute, 40 Second

timthumbகருணாநிதி வழங்கிய பணமும் வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 55)

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் வன்னிப் பிராந்திய தளபதி றேகன், புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டமை தெடர்பாக சென்றவாரம் விபரித்திருந்தேன்.
அந்தப் பிரச்சனையால் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவர் பலியானதாக குறிப்பிட்டிருந்தேன். படுகாயமடைந்தார் என்பதே சரியானதாகும்.

றேகன் பலியான பின்னர் வவுனியா தளபதியாக மதன் நியமிக்கப்பட்டார். மன்னார் தளபதியாக சுதர்ஸன் நியமிக்கப்பட்டார்.

இந்த இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மக்கள் விடுதலைப் படை (பி.எல்.ஏ) பிரதம தளபதி டக்ளஸ் தேவானந்தாவால் நியமிக்கப்பட்டர்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் மத்திய குழுவுக்குள் இந்த நியமனங்கள் தொடர்பாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டன.

ஆனாலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் நடவடிக்கைகளில் வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்கள் வவுனியாவில் தான் மேற்கொள்ளப்பட்டன.

வன்னித் தாக்குதல்கள்

கண்ணிவெடித் தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவின் பயிற்சி முகாம்களில் நன்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஆனாலும் வேறு எந்தப் பகுதியிலும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கண்ணி வெடித் தாக்குதல்களை நடத்தவில்லை.

வவுனியாவில் ஓமந்தைக்கும் நொச்சிமோட்டைக்கும் இடையே நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 12 இராணுவத்தினர் பலியானார்கள். அதில் ஒரு அதிகாரியும் அடக்கம்.

ஆறாம் கட்டையில்

வவுனியா-மன்னார் வீதியில் பம்பைமடுவிற்கும், பூவரசங்குளத்திற்கும் இடையில் இருக்கும் பகுதி 6ம் கட்டை. அங்கு இராணுவ அணியொன்று சுற்றிவளைப்பிற்காக வந்து கொண்டிருந்தது.

இராணுவத்தினர் அங்கு வரும் தகவல் முன்கூட்டியே ஈ.பி.ஆர்.எல்.எஃப் மக்கள் விடுதலைப் படையினருக்கு கிடைத்துவிட்டது.

நிலக் கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு காத்திருந்தனர் மக்கள் விடுதலைப் படையினர்.

அதிகாலை நேரம் என்பதால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக தொடராக வந்து கொண்டிருந்தனர்.

நிலக்கண்ணிகள் வெடித்தன. டிரக்டர் வண்டியில் வந்து கொண்டிருந்த இராணுவத்தினர் பலியானார்கள். மொத்தம் 24 அராணுவத்தினர் பலியானார்கள். பத்துப் பேர்வரை காயமடைந்தனர்.

மதன், ஆசோக் இருவரும் தற்போது ஈ.பி.டி.பி. யின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இராமேஸ்வரன் (மதன்), மு.சந்திரகுமார் (அசோக்).

ஸ்ரீதர் ஈ.பி.டி.பி. உறுப்பினராக இருந்து 1987 இல் புலிகளால் கொல்லப்பட்டார். ரகுவும் இராணுவ நடவடிகடகை ஒன்றில் பலியானார்கள்.

திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததையடுத்து மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க விரும்பிய இந்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியை நாடியது.

நான்கு இயக்கக் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF), தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய அமைப்புக்களைச் சந்தித்து எம்.ஜி.ஆர். பேச்சு நடத்தினார்.

போர் நிறுத்தம் மீறப்பட்டதற்கு இலங்கை அரசுதான் பொறுப்பு என்பதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினார்கள்.

இலங்கை அரசின் தீர்வு யோசனைகள் இனப்பிரச்சனை தீர்வுக்கு எவ்வகையிலும் சரியாக அமையாது என்றும் விளக்கினார்கள். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

சந்திப்புக்கள் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரைச் சந்தித்தனர்.

“இலங்கை அரசின் தீர்வு யோசனை பிரச்சனைக்குத் தீர்வாகாது” என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.

தலா 50 ஆயிரம்

இக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ஈழப் போராளி அமைப்புக்களுக்கு நிதி வழங்க முன்வந்திருந்தார்.

நான்கு இயக்க கூட்டமைப்பான ஈழத் தேசிய முன்னணியில் உள்ள இயக்கங்களுக்கு நிதி வழங்குவதென்று முடிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு இயக்கத்திற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய்களை வழங்கவும் முன்வந்தார்.

அப்போது புலிகள் தவிர ஏனைய முன்று இயக்கங்களும் பணக் கஸ்டத்தில்தான் இருந்தன. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களது நிலை மிக மோசமாக இருந்தது.

முன்று இயக்கங்களும் கருணாநிதி வழங்க முன்வந்த நிதியைப் பெறுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டன. புலிகள் அமைப்பினர் மட்டும் “நன்றி, பணம் வேண்டாம்” என்று முகத்திலடிப்பது போல சொல்லிவிட்டனர்.

அந்தச் செய்தி தமிழகப் பத்திரிகைகளில் வெளிவந்தபோது கலைஞர் கருணாநிதிக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.

புலிகள் அமைப்பினரும், அதன் தலைவர் பிரபாகரனும் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதினார் கலைஞர் கருணாநிதி.

ஒரே ஒருவருக்கு மட்டும் அந்தச் செய்தி செவிக்கு இதமாக இருந்தது. அவர்தான் எம்.ஜி.ஆர்.

பிரபாவின் கணக்கு
எம்.ஜி.ஆர். அறிந்தால் மகிழ்வார் என்று தெரிந்துதான் கலைஞர் கருணாநிதி கொடுக்க முன்வந்த பணத்தை வாங்க மறுத்தார் பிரபாகரன்.

எம்.ஜி.ஆரிடம் ஒரு குணம் இருந்தது. தன்னோடு நெருக்கமாக இருப்பவர்கள் தனக்கு விரோதமான முகாமுடன் தொடர்பு வைத்திருப்பதை விரும்பமாட்டார்.

பிரபாகரனை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளவே எம்.ஜி.ஆர் விரும்பினார். எம்.ஜி.ஆரின் குணமறிந்து நடந்து கொண்டார்.

கலைஞர் கருணாநிதி தரப்போகும் 50 ஆயிரத்தை வாங்கினால், எம்.ஜி.ஆர் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளை இழக்க வேண்டியேற்படும் என்பதும் பிரபாகரன் போட்ட கணக்கு.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய பல கோடி ரூபாய்கள் பிரபாவின் கணக்கை மெய்ப்பித்தன.

சின்ன மீனைப் போட்டு விட்டு பெரிய மீனைப் பிடித்துக் கொண்டார் பிரபா.

எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் தமிழக முதல்வராக தேர்தலில் வென்றார் கருணாநிதி.

உடனடியாக பிரபா ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்தார்.

“உலகத் தழிழர்களது தலைவரான தாங்கள் தமிழக முதல்வராயிருப்பது மகிழ்வைத் தருகிறது.” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார் பிரபா.

ரெட்டியின் கருத்து

இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறை குறித்து இந்து ஆங்கில நாளிதழின் பிரபல விமர்சகர் ஜி.கே.ரெட்டி எழுதிய விமர்சனத்தை முன்னரும் தந்திருந்தேன்.

1985 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜி.கே.ரெட்டி எழுதிய விமர்சனம் இது:

“இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைத்து, இணக்கத் தீர்வொன்றை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி முயற்சிகளை தொடருகிறார்.

இந்த நல்லெண்ண முயற்சிகள் நேரானதும், மறைவானதுமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

காலப் போக்கில் பிரிவினைக்கு வழி வகுக்கக்கூடிய விசேட சலுகைகைகளை தமிழர்களுக்கு வழங்குமாறு இந்தியா வற்புறுத்தி, அதன் மூலம் நன்மையடைய இந்தியா முயற்சிக்கிறது என்று இலங்கை அரசுக்கு முன்னர் இருந்த சந்தேகம் அகற்றப்பட்டுவிட்டது.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவோ அல்லது அவரது ஆலோசகர்களோ அவ்வாறான அச்ச உணர்வு நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பதுதான் சாதகமான நேர் அம்சம்.

அதேவேளை தற்போதைய ஐக்கியப்பட்ட அரசியலமைப்பு வரையறைக்குள்ளாகவேனும் தமிழர்களின் சட்டபூர்வ அபிலாசைகளை பூரணப்படுத்தக்கூடிய வகையில் கணிசமான அதிகாரங்களுடன் பிரதேச சுயாட்சி ஒன்றை வழங்கும் நிலையில் இலங்கை அரசு இல்லை என்பதையும் இந்தியா உணர்ந்து வருகிறது.

அரசியல் தீர்வு தாமதப்படுத்தப்படுவதாலும், இனப்பிரச்சனைக்கு விரைவான தீர்வொன்று கிட்டும் என்ற இந்தியாவின் முன்னைய எதிர்பார்ப்பு இப்போது வெகுவாகத் தளர்வடைந்துவிட்டது.” என்று எழுதியிருந்தார் ஜி.கே.ரெட்டி.

கட்டாய ஆள் சேர்ப்பு

“யுத்தத்தில் வெற்றியீட்ட ஒரு இலட்சம் இராணுவத்தினர் தேவை. இப்போது இருப்பதோ ஆறாயிரம் பேர்தான்.” என்று 1985 அக்டோபரில் கூறியிருந்தார் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி.

இதன்பின்னர்தான் 1985 அக்டோபர் மாதம் இலங்கைத் துணைப்படைக்கு கட்டாய ஆள்திரட்டும் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டமூலப்படி துணைப்படையில் சேர மறுக்கும் ஒருவர் குற்றவாளியாகக் கருதப்பட்;டு 4 வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெறுவார்.

பாராளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தை விளக்கி உரையாற்றியவர் ரணில் விக்கிரமசிங்கா. அப்போது இளைஞர் விவகார வேலைவாய்ப்பு, கல்வி அமைச்சராக பதவி வகித்தர் ரணில்.

“பேச்சுவார்த்தைகளால் பயன் இல்லாமல் போகுமானால், இராணுவத்தின் உதவியுடன் பிரச்சனைக்குத் தீர்வு காண நேரும்” என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் ரணில்.

கட்டாய ஆள் சேர்ப்பு சட்ட மூலத்தை சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை. விவாதத்தில் பங்கு கொள்ளாமல் சபையை விட்டு வெளியேறினார்கள்.

பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக சிங்கள இனவாதிகளது வாயை அடக்கும் நோக்கத்துடன் கட்டாய ஆள் சேர்ப்பு சட்ட மூலத்தை ஜே.ஆர்.விட்டுப் பார்த்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.

சண்டை நடந்தால் எல்லோரும் பங்குகொள்ள வேண்டியிருக்கும் என்று மிரட்டுவது போன்ற நடவடிக்கையே இது என்றும் கூறப்பட்டது.

அமைச்சர் தொண்டமான்

தொண்டாவின் முயற்சி
திம்பு பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் சமரச முயற்சிகளை தொடர முன்னின்றவர்களில் ஒருவர் தொண்டமான்.

இந்திய இராஜதந்திர வட்டாரங்களும் அமைச்சர் தொண்டமானை தட்டிக்கொடுத்திருந்தன. ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும் பச்சைக் கொடி காட்டியிருந்தார்.

முயற்சியில் குதித்தார் தொண்டமான். ஈழப் போராளி அமைப்புக்களையும், இந்திய அரசையும் சந்திக்கப் புறப்பட்டார்.

புறப்பட முன்னர் ஜனாதிபதி ஜே.ஆரை சந்தித்துப் பேசினார் தொண்டமான். ‘ஓல் த பெஸ்ட்’ என்று வாழ்த்தியனுப்பினார் ஜே.ஆர்.

சென்னையில் ஈழப் போராளி அமைப்புக்களின் தலைவர்களை சந்திக்க முயன்றார் தொண்டமான். பிரபாகரன் சந்திக்க மறுத்துவிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும் அவரைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்கு செல்லும் போதே கையோடு ஒரு யோசனையையும் கொண்டு சென்றிருந்தார் தொண்டமான்.

தேசிய இணக்க அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதுதான் அமைச்சர் தொண்டமானின் அடிப்படையாக இருந்தது.

தமிழர்களுக்கும் அரசில் பங்கிருக்கும், தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வாய்ப்பும் இருக்கும் என்று தனது யோசனை தொடர்பாக விளக்கமளித்தார் தொண்டமான்.

நாடு திரும்பிய தொண்டமானை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.

“தீவிரவாத அமைப்புக்கள் தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றன.” என்று கூறினார்.

“அப்படியானால் உங்கள் யோசனை என்னாகும்?” என்று நிருபர் கேட்டார்.

அதற்கு அமைச்சர் தொண்டமான் சொன்ன பதில் இது: “சகல தலைவர்களும் இதனை எதிர்க்க முடியாது. இது நீதியான யோசனை. இனப்பிரச்சனையைத் தீhப்பதற்கான இரு இனங்களுக்கிடையிலான கமிட்டியே எனது யோசனையில் அடங்கியுள்ளது.”

அமைச்சர் தொண்டமானின் யோசனை தொடர்பாக சில பத்திரிகைகளில் பெரிதாகச் செய்திகள் வந்தன.

போராளி அமைப்புள்ளளோ அல்லது இலங்கை, இந்திய அரசுகளோ அதனை முக்கியத்துவப் படுத்தவில்லை.

யாழ் சென்ற அகதிகள்

1985 அக்டோபரில் திருகோணமலையில் இருந்து வெளியேறிய தமிழ் அகதிகள் முல்லைத்தீவில் தங்கியிருந்தனர். இங்கிருப்பதும் பாதுகாப்பில்லை என்று கருதி படகுகள் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றனர்.

திருகோணமலை, நிலாவெளி, சாம்பல் தீவு, கன்னியா போன்ற பகுதிகளில் இருந்து 25 குடும்பங்கள் படகுகளில் சென்று இறங்கினார்கள்.

யாழ்ப்பாணத்தில் கச்சேரி நல்லூர் வீதியில் அவர்களுக்கான அகதி முகாம் அமைக்கப்பட்டது.

தமிழ் மகளிர் பேரவையினால் அந்த அகதி முகாம் நடத்தப்பட்டது.

இந்தக் காலகட்டத்தையும், தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறுவதையும் ஒப்பிட்டு நோக்கினால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலை போலவன்றோ இருக்கிறது.

உட்பிரச்சனைகள்

இக்காலகட்டத்தில் ஈழப் போராளி அமைப்புக்களுக்குள் நடந்துகொண்டிருந்த பிரச்சனைகளயும் ஆங்காங்கே தொட்டுக் காட்டவேண்டியிருக்கிறது.

புளொட் இயக்க முக்கியஸ்தர் சந்ததியாரும் வேறு சிலரும் கொல்லப்பட்டதையடுத்து பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

‘புளொட்டின் தலைமைப் பீடமே எமது தோழர்கள் எங்கே?’ என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

குற்றச் சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பது போல புளொட் ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தது.

இதில் சந்ததியார் தொடர்பாக புளொட் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் இவைதான்.

“1983இல் வவுனியா பகுதிப் பொறுப்பாளராகவும், கழக (புளொட்) நிருவாகப் பொறுப்பாளராகவும் தற்காலிகமாக பொறுப்பு வகித்தவர் சந்ததியார்.

தனது பொறுப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் விமானப் படை ஜீப் வண்டியைத் தாக்க தோழர்கள் சிலருக்குக் கட்டளையிட்டார்.

இத்தாக்குதலால் அரசியல் ரீதியிலும், இராணுவரீதியிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும் தான் தோன்றித்தனமாகக் கட்டளையிட்டார்.

தளத்தில் நிதிப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவரது பொறுப்பில் இருந்த பல பெறுமதி வாய்ந்த பொருள் இழப்புகளுக்கு சரியான காரணங்கள் தரவில்லை.

தன்னோடு முரண்பட்ட தோழர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று சித்திரவதை செய்தார்.

டேவிட் போன்றவர்களது உதவியோடு கேசவன் போன்றவர்களை பயன்படுத்திப பயிற்சி முகாம்களில் குழப்பம் விளைவித்தார்.”

குற்றச்சாட்டு

மற்றொரு பாரதூரமான குற்றச்சாட்டும் சந்ததியார் மீதும், வேறு சில உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டது.

சந்ததியாரும், டேவிட்டும் சேர்ந்து இயக்கத்தின் திட்டம் அடங்கிய இராணுவ வரைபடம் ஒன்றை சி.ஐ.ஏ. ஆள் ஒருவருக்கு கொடுத்து விட்டனர் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.

புளொட் தலைமையால் சி.ஐ.ஏ. என்று கூறப்பட்டவர் வேறு யாருமல்ல, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் தான்.

புளொட் இயக்கத்தில் தலைமையின் வெறுப்புக்கு உள்ளானோரில் மற்றொரு முக்கியஸ்தர் டொமினிக். கேசவன் என்றும் அழைக்கப்பட்டார்.

புளொட் பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்பெடுப்பதில் முன்னணியில் இருந்தவர் டொமினிக்.

அப்போது அவர் எடுத்த வகுப்புக்களில் கூறிய கருத்துக்கள் தலைமைக்குப் பிடிக்கவில்லை.

ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமான உளவுப் பிரிவினர் இருந்தனர்.

அவர்கள் மூலமாக பயிற்சி முகாம்களில் நடப்பனவற்றையெல்லாம் அறிந்து விடுவார் உமா.

பாரதூரமானவர்கள் என்று கருதப்படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்படும்.

இதில் ஒன்று ஊழன்றி. அது என்ன ஊழன்றி?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது அதிசயமா? இல்லை அதற்கும் மேல…!!
Next post சம்பந்தன், விக்கி மோதல் எதிரொலி: கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை? -கே.சஞ்சயன்…!!