யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)

Read Time:14 Minute, 4 Second

timthumb (1)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது.

வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.

பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களின் வாசனை காற்றிலே கலந்து எங்கும் பரவியிருந்தது.

உளுவிந்தம் மரக் கொப்புகளில் தொங்குமான்கள் அச்சமின்றி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. உடும்புக் குட்டிகள் தமது வளைகளை விட்டு வெளியேறி உலவப் போய்க் கொண்டிருந்தன, புற்படுக்கைகளில் தெறித்துக் கிடக்கும் பனித்துளிகளில் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தன காட்டு முயல்கள்.

காலை இளவெயிலில் தமது தோகையை விரித்துச் சிலுப்பிச் சிலுப்பிக் காயவைத்துக்கொண்டிருந்த கான மயில்களும் இரை தேடிப் புறப்பட்டிருந்த கானாங் கோழிகளும் புளுனிக் க கிடைத்த பேரமைதியின் சூழலில் உல்லாசமாகத் திளைத்துக் கிடந்தது வன்னிக்காடு.

2002ஆம் ஆண்டு இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் யுத்த நிறுத்தம் என்ற இணக்கத் திற்கு வந்திருந்ததன்.

முதற்கட்டமாக ஏ9 நெடுஞ்சாலையை மக்கள் பாவனைக்குத் திறந்து விடுவது என்ற உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள கண்டி நகரத்தையும் வடக்கு முனையாகிய யாழப்பாண நகரத்தையும் இணைக்கின்ற இந்த வீதியானது முன்னூற்று இருபத்தைந்து கிலோ மீற்றர் நீளமானது.

ஆசியாவின் பிரதான வீதிகளில் ஒன்றாகத் தரநிர்ணயம் செய்யப்பட்டிருந்த இவ்வீதி இலங்கையின் பல நகரங்களை ஊடறுத்துச் செல்கின்றது.

இலங்கை அரச படைகளுக்கு எதிராகத் தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிய கால கட்டத்தில் 1984 தொடக்கம் 2006 வரை பலதடவைகள் இந்த வீதி மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு மூடப்பட்டு வந்திருந்தது.

2002 பெப்ரவரி பதினைந்தாம் திகதி திறக்கப்படவிருந்த இந்த வீதியின் இருபது சதவீதமான பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், ஏ9 நெடுஞ்சாலை திறப்பு நிகழ்வானது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை மகளிர் சார்பாக நானும் சில பெண் போராளிகளுடன் ஓமந்தைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன்.

அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சுதா (தங்கன்) புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் வேறு பல போராளிகளும் நிகழ்வில் பங்கு பெற்றிருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரின் காவலரண்களும் விடுதலைப் புலிகளின் காவலரண்களும் எதிரும் புதிருமாக அமைந்திருந்தன.

அவற்றின் குறுக்காக ஏ9 வீதி மண் அரண்களாலும் மறைப்புகளாலும் மூடப்பட்டிருந்தது. சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த வீதி பொதுமக்களது பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது.

ஆயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்திருந்த அவ்வீதியின் மறுகரையில் இராணுவத்தினரும் எம்மைப் போலவே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களும் நாங்களும் பரஸ்பரம் கைகளை அசைத்துப் புன்னகைத்தபடி சமாதானத்தைத் தெரிவித்துக் கொண்டாலும் எமது மறு கரங்கள் ஆயுதங்களை இறுகப் பற்றியபடியே இருந்தன.

காரணமாகவே.. இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது என்கிற வெற்றி மயக்கமும், அவை எமக்குச் சர்வதேச அங்கீகாரத்தை ஈட்டித் தந்துவிட்டன என்ற கருத்து நிலையும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

ஊடகவியலாளர்கள் பெரும் கூட்டமாக ஏ9 வீதியில் திரண்டு வந்திருந்தனர். யுத்தம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வன்னிப் போர் வலயத்திற்குள் ஊடகத்தினர் நுழைவதற்கான அனுமதி புலிகளாலும், இராணுவத்தினராலும் முற்றாக மறுக்கப் பட்டிருந்தது.

அங்கு வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கண்டபோது உலகத்தின் கண்கள் எம்மை நோக்கித் திரும்பியிருப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

பளிச் பளிச் என மின்னலடிக்கும் புகைப்படக் கருவிகளும் வீடியோ கருவிகளும் நீண்டிருந்த ஒலிவாங்கிகளும் ஒலிப்பதிவுக் கருவிகளுமாக, ஊடகப்படையொன்றினால், வரிச்சீருடை தரித்து ஆயுதங்களுடன் நின்றிருந்த புலிகளாகிய நாங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தோம்.

அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் தமது கேள்விகளால் எம்மைத் துளைத்தெடுக்கத் தொடங்கினர். ஆனாலும் எல்லாக் கேள்விகளுமே ஒரே அடிப்படையைக் கொண்டதாகவே இருந்தது.

தாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த பதில்களைப் போராளி களின் வாய் மொழியூடாகப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் பெரிதும் முயற்சி செய்வது போலிருந்தது.

“ஆயதமேந்திப் போராடிய நீங்கள் ஏன் சமாதான வழிமுறைக்கு வந்திருக்கிறீர்கள்? தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டீர்களா?

உங்களுடைய சக போராளிகள் ஆயிரக்கணக்காக மரணித்துப் போயிருக்கிற நிலையில் உங்களது தலைவர் தமிழீழத்தைக் கைவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

மீண்டும் யுத்தம் வருமா? உங்களுக்குச் சமாதானத்தில் நம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவீர்களா? வீட்டுக்குப் போக விருப்பமில்லையா?

காதலிப்பீர்களா? கலியாணம் செய்வீர்களா? இயக்கம் இவற்றுக்கான அனுமதியைத் தருமா? ஏன் கூந்தலை இப்படி வளைத்துக் கட்டியிருக்கிறீர்கள்?

ஏன் இடுப்புப் பட்டி கட்டியிருக்கிறீர்கள்? உங்களுக்கும் சமூகப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மீண்டும் சமூகம் உங்களை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கிறீர்களா?”…

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் அங்கிருந்த போராளிகளை நோக்கி வீசப்பட்டன. இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் விடுக்கப்படும் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள், செய்திகள் என்பவற்றுக்கு அப்பால் சாதாரண போராளிகளினதும், இடைநிலைப் பொறுப்பாளர்களினதும் சராசரி மனநிலையைத் துருவிப் பார்ப்பதே ஊடகங்களின் தந்திரமாக இருந்தது.

இயக்கத்தில் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அனுமதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருந்தது.

ஆகையால் இப்படியான சந்தர்ப்பங்கள் அமையும் போது பல போராளிகள் புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு நழுவிப் போய் விடுவார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகங்களின் கேள்விகளுக்கு நானும் மற்றும் தங்கன், புலித்தேவன் ஆகியோரும் பதிலளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தோம்.

நீண்ட காலத்திற்குப் பின்பு மக்களுக்குக் கிடைத்திருந்த அமைதியும், பாதை திறப்பு மற்றும் பொருளாதாரத் தடைநீக்கம் என்பனவும் பொதுமக்களுடைய முகத்தில் புதிய ஒளியைத் தோற்றுவித்திருந்தது.

ஆனாலும் இந்தச் சமாதான சூழ்நிலையை நீடிக்கச் செய்து ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிப் புலிகள் முன்னேறிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை மக்களது வார்த்தைகளில் காண முடியவில்லை.

மாறாக எப்போது இந்தச் சமாதானம் முறிவடையுமோ என்கிற குழப்பமான மனநிலையுடன் கிடைக்கிற காலத்திற்குள் தமது வாழ்க்கையைச் சிறிதளவேனும் கட்டியெழுப்பிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றத்துடன் செயல்படத் தொடங்கியிருந்தனர்.

தமிழர் பிரதேசங்களுக்கூடாகச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் இராணுவ, அரசியல் ரீதியான நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக அந்த வீதியை அண்மித்து நடைபெற்றிருந்த கொடூர யுத்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல ஆயிரங்களையும் கடந்திருந்தன.

1995 தொடக்கம் 2002 வரையான காலப் பகுதியில் நான் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சம்பவங் களின் அடிப்படையில் இந்த வரலாற்றை விரித்துச் செல்வது பயனுள்ளது என நினைக்கிறேன்.

1995 டிசம்பர் மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியதன் பின்னர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் வன்னிப் பெருநிலப்பரப்பைத் தமது பிரதான தளமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தது.

அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் இழப்பு, புலிகளுக்கு ஈடுசெய்துகொள்ள முடியாததாகவே இருந்தது.

இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆளணி மற்றும் பொருளாதாரத்தை உவந்தளிக்கும் வளப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்ததுடன், 1990 தொடக்கம் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாகவும் யாழ்ப்பாணமே விளங்கியது.

அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் தாக்கம் பற்றிப் போராளிகள் மத்தியில் உணர்வு ரீதியாகப் பல தடவைகள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் யாழ்ப்பாணத்தை விரைவாகக் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புலிகள் செயற்படத் தொடங்கினார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேசங்களை நன்கு அறிந்திருந்த ஆண் பெண் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு யாழ் செல்லும் படையணி உருவாக்கப்பட்டிருந்தது.

லெப்.கேணல் மகேந்தி மற்றும் லெப். கேணல் தணிகைச்செல்வி ஆகியோர் அந்த அணிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?…!!
Next post தமிழர் முறையிட்டால், தேசத்துரோகம்!.. கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால், ஜனநாயகம்? -நிருபா குணசேகரலிங்கம்…!!